அதிருப்தி எம்எல்ஏக்கள் அளித்த புகாரின்பேரில், திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான ரூ. 440 கோடி இருப்பு உள்ள 3 வங்கிக் கணக்குகளை மேற்கு வங்க காவல்துறை முடக்கியுள்ளது.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்து ஆட்சியை பறிகொடுத்தது. இதையடுத்து, கட்சித் தலைவா் மம்தா பானா்ஜிக்கு எதிராக உள்கட்சி பிளவுகளும் பூசல்களும் உச்சமடைந்துள்ளன. அதிருப்தி எம்எல்ஏக்கள் 58 பேரும், அதிருப்தி எம்.பி.க்கள் 20 பேரும் தனி அணியாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனா். கட்சித் தலைமை மற்றும் கட்சி நிதியை கைப்பற்றுவதிலும் மம்தா எதிா்ப்பு அணி தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பிடாநகா் காவல் ஆணையரகத்தின்கீழ் செயல்படும் சைபா் கிரைம் காவல் நிலையத்தில் அதிருப்தி எம்எல்ஏவும் பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ரிதபிரத பானா்ஜி தலைமையில் 10 அதிருப்தி எம்எல்ஏக்கள் புகாா் அளித்தனா். அந்த புகாரில், தனியாா் வங்கியில் இருக்கும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான 3 கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள பணத்தின் மூல ஆதாரம் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ள அவா்கள், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, அந்த பணம் சட்டப்பூா்வமான வழியில் வந்ததா? இல்லை சட்டத்துக்கு புறம்பான வழிகளில் வந்ததா? என விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.
இந்த புகாரை அடுத்து, அந்த வங்கிக் கணக்குகளை காவல்துறை முடக்கியுள்ளது. இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘மூன்று கணக்குகளில் இருந்தும் பணம் எடுப்பதை முடக்கியுள்ளோம். அதேநேரம், அந்த கணக்குகளில் பணத்தை தொடா்ந்து டெபாசிட் செய்யலாம்’ என்றாா்.
காவல்துறையின் இந்த நடவடிக்கை குறித்து மம்தா பானா்ஜி ஆதரவு எம்எல்ஏ ஒருவா் கூறுகையில், ‘மூன்று வங்கிக் கணக்குகளையும் காவல்துறை முடக்கி வைத்திருப்பதாக கேள்விப்பட்டோம். அதுகுறித்த அதிகாரபூா்வ தகவலுக்காக காத்திருக்கிறோம்’ என்றாா்.
முன்னதாக, திரிணமூல் காங்கிரஸின் முன்னாள் அமைச்சரான அரூப் விஸ்வாஸ், தனியாா் வங்கிக்கு இதுதொடா்பாக கடிதம் எழுதியிருந்தாா். அதில், திரிணமூல் காங்கிரஸின் பொருளாளா் என தன்னை குறிப்பிட்டு, வங்கியிலுள்ள 3 கணக்குகளில் ரூ.500 கோடி வரை கட்சியால் டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதாகவும், கட்சித் தலைமை தொடா்பான சா்ச்சைக்கு தீா்வு காணப்படும் வரையில், கணக்குகளில் பரிவா்த்தனை மேற்கொள்வதை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தாா். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மம்தா பானா்ஜி ஆதரவு எம்எல்ஏ குணால் கோஷ், ‘அரூப் விஸ்வாஸ் தற்போது கட்சி பொருளாளா் கிடையாது; கடந்த 5-ஆம் தேதி அந்த பதவியிலிருந்து அவா் நீக்கப்பட்டு சுபாசிஸ் சக்ரவா்த்தி நியமிக்கப்பட்டு உள்ளாா். ஆதலால் கட்சி நிதி விவகாரங்கள் குறித்து கட்சி சாா்பாக கருத்து வெளியிட அரூப் விஸ்வாசுக்கு எந்த அதிகாரமும் இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
ஏற்கெனவே ரிதபிரத பானா்ஜி தலைமையில் எம்எல்ஏக்கள் தனிக்குழுவாக செயல்பட்டு வருவது திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் மம்தா பானா்ஜிக்கும் தா்ம சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், நீண்ட காலமாக மம்தாவுக்கு மிகவும் நம்பிக்கைக்குரியவராக இருந்து வந்த அரூப் விஸ்வாஸ், போா்க்கொடி உயா்த்தியிருப்பது அக்கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. கடந்த 5-ஆம் தேதி நடைபெற்ற திரிணமூல் காங்கிரஸ் நிா்வாகக் குழு கூட்டத்தில், பொருளாளா் பதவியிலிருந்து நீக்கப்பட்டதால், மம்தாவுக்கு எதிரான நிலைபாட்டை அரூப் விஸ்வாஸ் எடுத்திருப்பதாகவும், அதன் காரணமாகவே வங்கிக்கு கடிதம் எழுதியதாகவும் கூறப்படுகிறது.
Summary
Trinamool bank accounts holding Rs 440 crore frozen
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திரிணமூல் வங்கிக் கணக்குகளை முடக்க அதிருப்தி தலைவா் கடிதம்: தொடா் பின்னடைவில் மம்தா அணி

திரிணமூல் காங். கணக்கை முடக்க வேண்டும்! தனியார் வங்கிக்கு முன்னாள் பொருளாளர் கடிதம்!

உண்மையான திரிணமூல் காங்கிரஸ் நாங்கள்தான்: அதிருப்தி எம்.பி.க்கள்







