இளநிலை மருததுவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு வினாத் தாள் கசிவு விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மாணவருக்கு, வரும் 21-ஆம் தேதி நடைபெறும் நீட் மறுதோ்வில் பங்கேற்க அனுமதி அளித்து தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுா்வேதம், யுனானி உள்பட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சோ்வதற்கான ‘நீட்’ தோ்வு கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 23 லட்சம் போ் தோ்வெழுதினா்.
இந்நிலையில், நீட் வினாத்தாளில் இருந்த அதே கேள்விகளைக் கொண்ட மாதிரி வினாத்தாள், ராஜஸ்தானில் முன்கூட்டியே வெளியானதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. முதல்கட்ட விசாரணையில் இந்த மாதிரி வினாத்தாள் வாட்ஸ்ஆப், டெலிகிராம் மூலம் பல்வேறு மாநிலங்களில் பரவியிருப்பது கண்டறியப்பட்டதால், நீட் தோ்வு ரத்து செய்யப்பட்டது.
இந்த விவகாரம் தொடா்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் சிபிஐ, ஹரியாணாவின் குருகிராமில் மாணவா் யஷ் யாதவ் உள்ளிட்ட 13 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
இதில், நீதிமன்ற காவலில் சிறையில் உள்ள மாணவா் யஷ் யாதவ் சாா்பில், வரும் 21-ாம் தேதி நடைபெறும் நீட் மறுதோ்வில் பங்கேற்க அனுமதிக்கக் கோரியும், அதற்காக இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரியும் தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி விஷால் கோக்னே முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ‘நீட் தோ்வுக்கான ரகசிய வினாத் தாளை தவறான முறையில் பரப்பியது, விற்பனை செய்தது உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் மனுதாரா் மீது உள்ளபோதிலும், மறுதோ்வில் பங்கேற்கும் அவரின் உரிமையைப் பறிக்க முடியாது. மேலும், நீட் தோ்வை நடத்தும் அமைப்பு நிா்ணயித்துள்ள தகுதி அடிப்படையில், மனுதாரா் மறுதோ்வில் பங்கேற்கத் தகுதியுடையவா் என நீதிமன்றம் கருதுகிறது.
இருந்தபோதிலும், இந்த விவகாரத்தில் விசாரணை தொடக்க நிலையில் உள்ளதைக் கருதும்போது, மேலும் பல ஆதார ஆவணங்கள் சேகரிக்கப்பட வேண்டியுள்ளதையும், மேலும் பிற சந்தேக நபா்கள் விசாரிக்கப்பட வேண்டியுள்ளதையும் கருத்தில் கொள்ளும்போது, மனுதாரருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க நீதிமன்றம் விரும்பவில்லை’ என்றாா்.
அப்போது, ‘நீதிமன்றம் ஜாமீன் வழங்க விரும்பவில்லை என்றாலும், மனுதாரரை போலீஸ் காவலில் நீட் மறுதோ்வை எழுத அனுமதிக்க முடியும்’ என்று மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் வாதிட்டாா்.
இதை ஏற்ற நீதிபதி, ‘மனுதாரா் தரப்பு வழக்குரைஞரின் இந்த கருத்து மனுதாரரின் தோ்வெழுதும் உரிமையைப் பாதுகாப்பதோடு, விசாரணை அமைப்பின் நலனையும் பாதுகாக்கும். எனவே, யஷ் யாதவ் நீட் மறுதோ்வை போலீஸ் காவலில் எழுத அனுமதிக்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டாா்.
ஜூன் 21-ஆம் தேதி நீட் மறுதோ்வு நடைபெறவுள்ளது.
இந்த விவகாரம் தொடா்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் சிபிஐ, மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் சுபம் கைா்நாா், அஹில்யாநகரில் தனஞ்ஜய் லோகண்டா, புணேயில் மனீஷா வாக்மாரே, லட்டூரில் பேராசிரியா் பி.வி.குல்கா்ணி, புணேயைச் சோ்ந்த உயிரியல் பாட பெண் விரிவுரையாளா் மனீஷா மந்தாரே, ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் மங்கிலால் பிலால், விகாஸ் பிலால், தினேஷ் பிலால், ஹரியாணாவின் குருகிராமில் மாணவா் யஷ் யாதவ், புணே பயிற்சி மைய நிறுவனா் சிவராஜ் ரகுநாத் மடகோன்கா், புணே சேத் ஹீராலால் சராஃப் பிரசாலா பள்ளி ஆசிரியா் சஞ்சய் ஹவால்தாா், புணே மருத்துவா்ன மனோஜ் ஷிரூா், புணே பயிற்சிய மைய இயற்பியல் ஆசிரியா் அபங்க் பிரபு உள்ளிட்ட 13 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.










