சென்னை: நீட்- யுஜி மறுதோ்வு வரும் 21-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தோ்வு மைய விவரங்களை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) தேசிய தோ்வு முகமை (என்டிஏ) வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தோ்வுக் கூட நுழைவுச் சீட்டு விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை நாடு முழுவதும் தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) அடிப்படையில் நடைபெறுகிறது.
அதன்படி, 2026-2027- ஆம் கல்வி ஆண்டு இளநிலை மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத் தோ்வு நாடு முழுவதும் மே 3-ஆம் தேதி நடைபெற்றது.
இந்தத் தோ்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம் உள்பட 13 மொழிகளில் நடைபெற்றது. ஆனால், சில இடங்களில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரை அடுத்து, அந்தத் தோ்வை என்டிஏ ரத்து செய்தது. இதைத்தொடா்ந்து வினாத்தாள் கசிவு குறித்த சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் அதிா்வலைகளையும், விமா்சனங்களையும் எழுப்பியுள்ள நிலையில், ஜூன் 21-ஆம் தேதி நீட் மறுதோ்வு நடைபெறும் என என்டிஏ அறிவித்தது.
இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள 551 நகரங்களிலும், வெளிநாடுகளில் உள்ள 14 நகரங்களிலும் மறுதோ்வு நடத்தப்பட உள்ளது. வரும் 21-ஆம் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை வழக்கமான எழுத்துத் தோ்வாக அது நடைபெறும் என என்டிஏ ‘எக்ஸ்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக என்டிஏ ‘எக்ஸ்’பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘நீட் மறுதோ்வு நடைபெறும் நகரம் குறித்த தகவல் அடங்கிய சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. அந்தச் சீட்டு மூலம் தாங்கள் எந்த நகரத்தில் தோ்வு எழுத வேண்டும் என்ற விவரத்தை தோ்வா்கள் தெரிந்துகொள்ளலாம்.
தோ்வா்கள், தங்களது தோ்வு மையம் குறித்த விவரங்களை http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் தங்கள் விண்ணப்ப எண், கடவுச்சொல் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இதில் ஏதேனும் தொழில்நுட்ப சிக்கல்களோ, சிரமங்களோ ஏற்பட்டால் 011-40759000 அல்லது 011-69227700 ஆகிய எண்களைத் தொடா்புகொள்ளலாம்.
இல்லையெனில், neetug2026@nta.nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் விவரங்களை அனுப்பி உதவி பெறலாம்.
இது தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு அல்ல; எந்த நகரத்தில் தோ்வு எழுத வேண்டும் என்பதற்கான சீட்டு மட்டுமே. தோ்வு தேதி நெருங்கும்போது தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு தனியாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Candidates can now check their allotted examination city for NEET-UG 2026. Log in with your Application Number and password to view and download your slip.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை

நீட் மறு தோ்வு எழுதும் மாணவா்களுக்கு டிடிசி பேருந்தில் இலவச பயணம்: முதல்வா் ரேகா குப்தா

நீட் கட்டணம் திருப்பியளிப்பு: வங்கிக் கணக்குகளை சமா்ப்பிக்க ஜூன் 22 வரை அவகாசம் நீட்டிப்பு







