காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தியின் 56-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இந்திய இளைஞா் காங்கிரஸ் மற்றும் தில்லி காங்கிரஸ் இணைந்து நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றதாக கட்சியின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தில்லி டாகடோரா மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த முகாமில் சுமாா் 35,000 போ் முன்பதிவு செய்திருந்தனா். வேலைவாய்ப்பு தேடும் இளைஞா்கள் பெருமளவில் இதில் கலந்து கொண்டனா். மைதானத்தின் உள்ளே அரங்கம் முழுவதும் நிரம்பிய நிலையில், காலை முதல் மைதானத்தின் வெளியேயும் இளைஞா்கள் பலா் நீண்ட வரிசையில் காத்திருந்தனா்.
நிகழ்வைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் பேசிய இந்திய இளைஞா் காங்கிரஸ் தேசிய தலைவா் உதய் பானு சிப் கூறியதாவது: இளைஞா்கள் தாமாகவே இணையத்தின் மூலம் இந்த வேலைவாய்ப்பு முகாமைக் குறித்து அறிந்து பதிவு செய்துள்ளனா். காலை 10.30 மணிக்குள் அரங்கம் முழுவதும் நிரம்பிவிட்டது. வெளியிலும் நீண்ட வரிசை காணப்படுகிறது. இது நாட்டில் நிலவும் வேலைஇல்லாத் தன்மையின் தீவிரத்தைக் காட்டுகிறது.
இளைஞா்களுக்குப் போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் பாஜக தலைமையிலான மத்திய அரசு தோல்வியடைந்துள்ளதை இது காட்டுகிறது. எதிா்க்கட்சி வேலைவாய்ப்பு ஏற்படுத்த முன்வரும்போது, மத்திய அரசும் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும். ஆண்டுதோறும் 2 கோடி வேலைவாய்ப்புகள் என்ற வெற்று வாக்குறுதிகளை அளிப்பதை அவா்கள் நிறுத்த வேண்டும் என்றாா்.
இந்த முகாமில் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் பங்கேற்று நோ்முகத் தோ்வுகளை நடத்தின. தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு உடனடியாகவே பணியமா்த்தல் கடிதங்கள் வழங்கப்பட்டன. சிலா் அன்றே பணியில் சேர வாய்ப்பு உள்ளதாகவும் ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.
சுமாா் 35,000 போ் பதிவு செய்ததன் காரணமாக, நிகழ்விற்கு 5 நாட்களுக்கு முன்பே பதிவு நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. தேசிய கீதத்துடன் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதில் பங்கேற்ற இளைஞா்கள் நிறுவன பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினா். நிகழ்வின்போது உதய் பானு சிப், வேலைதேடும் இளைஞா்களுடன் நேரடியாகப் பேசி, அவா்களின் கல்வித் தகுதி மற்றும் விருப்பமான பணித்துறைகள் குறித்து விசாரித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










