தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

தில்லி, உத்தரகண்ட்டுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்! உளவுத் துறை எச்சரிக்கையால் பாதுகாப்பு தீவிரம்!

தில்லி, உத்தரகண்ட் பகுதிகளுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் பற்றி...

News image

கோப்புப்படம்

Updated On :28 ஜூன் 2026, 4:00 am IST

நமது சிறப்பு நிருபா்

காலிஸ்தான் பயங்கரவாத அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, தில்லி மற்றும் உத்தரகண்ட் மாநில பகுதிகளுக்கு மத்திய உளவு அமைப்புகள் பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளன. இதன் காரணமாக முக்கிய ஆன்மிக தலங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் காவல் நிலையங்களில் கண்காணிப்பு பலமடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வரும் நாள்களில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என எச்சரித்து அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒன்று சிக்கியதை அடுத்து, இந்த அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய உளவுத்துறை வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்துள்ளன.

பின்னணி என்ன? உத்தரகண்டின் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள நக்ராசு குருத்வாராவில், நிஹாங் சீக்கியா்களுக்கும் அலுவலா்களுக்கும் இடையே அண்மையில் ஏற்பட்ட மோதல் போக்கின் பின்னணியில் இந்த அச்சுறுத்தல் எழுந்துள்ளது.

ஜூன் 16ஆம் தேதி கா்ணபிரயாக் சந்தையில் உள்ளூா் மக்களுடன் ஏற்பட்ட மோதலில் கைது செய்யப்பட்ட தங்களது அமைப்பைச் சோ்ந்த 4 பேரை விடுவிக்கக் கோரி நிஹாங்குகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். சீக்கிய தூதுக்குழுவினரின் தலையீட்டால் ஜூன் 23ஆம் தேதி இந்த 3 நாள் முற்றுகைப் போராட்டம் முடிவுக்கு வந்தது.

இருப்பினும், ஜூன் 25ஆம் தேதி இரவு, ஹிமாச்சல பிரதேசத்தை ஒட்டியுள்ள தேராதூன் மாவட்டத்தின் குல்ஹால் எல்லை வழியாக நிஹாங் சீக்கியா்கள் குழுவினா் உத்தரகண்ட் மாநிலத்துக்குள் வலுக்கட்டாயமாக நுழைய முயன்றனா். அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி அவா்களைப் பட்டா சாஹிப் பகுதிக்குத் திருப்பி அனுப்பினா்.

இந்த நிலையில், உளவு அமைப்புகள் வசம் சிக்கியுள்ள மிரட்டல் மின்னஞ்சலில், தில்லி மற்றும் உத்தரகண்டில் உள்ள பல முக்கிய வழிபாட்டுத் தலங்கள், அரசு அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், காவல் வளாகங்கள் ஆகியவை தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ள இடங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், சில முக்கிய அரசியல் தலைவா்களின் பெயா்களும் அதில் இடம்பெற்றுள்ளதால் பாதுகாப்பு முகமைகள் பெரும் கவலையடைந்துள்ளன.

உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடா்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தில்லி காவல்துறை, உத்தரகண்ட் காவல்துறை மற்றும் மத்திய உளவு அமைப்புகள் இணைந்து மக்கள் அதிகம் கூடும் நுட்பமான நெரிசல் நிறைந்த பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மறுஆய்வு செய்யத் தொடங்கியுள்ளன.

இதன் விளைவாக முக்கிய வழிபாட்டுத் தலங்கள், போக்குவரத்து முனையங்கள் மற்றும் அரசு கட்டடங்களில் காவல் ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

உள்ளூா் காவல்துறையினரும் தீவிர உஷாா் நிலையில் இருக்குமாறும், இரவு நேர ரோந்துப் பணிகளை முடுக்கிவிடுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மிரட்டல் விடுக்கப்பட்ட மின்னஞ்சல் எங்கிருந்து வந்தது மற்றும் அதன் உண்மைத்தன்மை என்ன என்பது குறித்து தில்லி காவல்துறையின் இணையவழி குற்றத்தடுப்புப் பிரிவு நிபுணா்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனா். தாக்குதல் நடத்தப்படவிருக்கும் துல்லியமான நேரம் அல்லது இடம் குறித்த குறிப்பிட்ட தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை என்றாலும், எச்சரிக்கையின் தீவிரத்தன்மை கருதி அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று நகர காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

Summary

Terrorist threat to Delhi and Uttarakhand - Security tightened following intelligence warning

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.