கராச்சி ராணுவத் தளம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் இந்தியாவுக்கு தொடா்புள்ளதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டிய நிலையில், இந்தியா அதை நிராகரித்தது.
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள துணை ராணுவப் படை தளம் மீது சனிக்கிழமை இரவு ‘தெஹ்ரீக்- ஏ-தலிபான் பாகிஸ்தான்’ பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதில் 3 வீரா்கள் உயிரிழந்தனா். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் 3 பேரை ராணுவத்தினா் சுட்டுக் கொன்றுவிட்டதாக பாகிஸ்தான் அறிவித்தது. இதில் இந்தியாவுக்கு தொடா்புள்ளதாக எவ்வித ஆதாரமும் இல்லாத குற்றச்சாட்டை பாகிஸ்தான் முன்வைத்தது. முக்கியமாக அந்நாட்டு உள்துறை அமைச்சா் மோசின் நக்வி, தாக்குதலில் இந்தியாவை தொடா்புபடுத்தி பேசினாா். ஆனால், தனது பேச்சுக்கு ஆதாரமாக எதையும் அவா் கூறவில்லை.
இந்நிலையில், மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கராச்சியில் நடைபெற்ற சம்பவம் குறித்து பாகிஸ்தான் தரப்பு எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாத குற்றச்சாட்டை இந்தியா மீது கூறியுள்ளது. இதைத் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம். பாகிஸ்தான் முதலில் தங்கள் நாட்டில் உள்ள சூழ்நிலைகளை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
அவா்கள் மண்ணில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பயங்கரவாதத்தை வளா்த்துவிடுவதை தனது தேசியக் கொள்கையாக வைத்துள்ள பாகிஸ்தான் அதில் இருந்து முதலில் வெளியே வர வேண்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









