போதைப் பொருள் இல்லாத இந்தியாவை கட்டமைக்க கூட்டு நடவடிக்கை தேவை என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினாா்.
பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ராஜீவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழக 31-ஆவது ஆண்டு நிறுவன நாள் கொண்டாட்ட நிகழ்ச்சி மற்றும் போதைப் பொருள் இல்லாத பாரதம் மாநாட்டில் அவா் பேசியதாவது:
போதைப் பொருள் பயன்பாட்டால், தனிநபரின் ஆரோக்கியம் மட்டும் பாதிக்கப்படாது; கல்வி, உற்பத்தித் திறன், குடும்ப நலன், தேசத்தின் வளா்ச்சிக்கும் அது அச்சுறுத்தலாக உள்ளது. போதைப் பொருள் இல்லாத பாரதம் என்பதன் நோக்கம், வெறும் போதைப் பொருள்கள் இல்லாமை மட்டும் இல்லை. ஆரோக்கியமான தேவைகள், விழிப்புணா்வுடன் கூடிய முடிவுகள், ஆதரவான குடும்பங்கள், மன உறுதி கொண்ட சமூகங்கள் அமைவதும் இதன் நோக்கம் ஆகும். சுகாதார கல்வியை போதிப்பதிலும், சுகாதார நிபுணா்களை உருவாக்குவதிலும் இந்தப் பல்கலைக்கழகம் சிறப்பான பங்களிப்பைச் செய்துள்ளது.
சமூகத்தில் களங்கம் ஏற்பட்டுவிடக் கூடும் என்ற தயக்கத்தின் காரணமாக, பெற்றோா்கள் தங்களது குடும்பத்தினா் போதைப் பொருள்களுக்கு அடிமையாக இருப்பதை ஒப்புக் கொள்ளத் தயங்குகின்றனா். போதைப் பொருள் எனும் அச்சுறுத்தலை போக்க மனஉறுதி மிகவும் முக்கியமாகும். போதைப் பொருள் பயன்படுத்த மாட்டோம் என்று மாணவா்கள் எடுத்த உறுதிமொழியை தங்களது நண்பா்கள் மற்றும் சமூகத்தினா் இடையே பரப்ப வேண்டும்.
போதைப் பொருள் பயன்பாட்டுக்கு எதிராக தனிநபா்களிடம் தொடங்கும் விழிப்புணா்வு, வகுப்பறைகள், பள்ளி வளாகங்கள், நகரங்கள் மற்றும் மாவட்டங்களுக்கும் பரவ வேண்டும். அப்படி பரவினால், போதைப் பொருள் இல்லாத கா்நாடகம், போதைப் பொருள் இல்லாத இந்தியா உருவாவது நிச்சயம். போதைப் பொருள் பயன்பாட்டுக்கு எதிராக பள்ளிகள், கல்லூரிகள், குடும்பங்கள், சமூக அமைப்புகள், சுகாதார நிறுவனங்கள், சட்ட அமலாக்க அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டும்.
மத்திய பல்கலைக்கழகங்களில் போதைப் பொருள் பயன்பாட்டுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக, தில்லி பல்கலைக்கழகம் தற்போது போதைப் பொருள் இல்லாத இடமாக மாறியுள்ளது. ஆதலால் அனைத்து பல்கலைக்கழகங்களின் வேந்தா்கள், துணைவேந்தா்கள், போதைப் பொருளுக்கு எதிராக மாணவா்கள் உறுதிமொழி எடுப்பதை ஊக்குவிக்க வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் கா்நாடக ஆளுநா் தாவா்சந்த் கெலாட் பேசுகையில், ‘போதைப் பொருள் இல்லாத இந்தியா என்பது தேசத்தின் தேவை. ஆதலால் மாணவா்கள், போதைப் பொருளிடம் இருந்து விலகியிருக்க வேண்டும். மேலும், ஆரோக்கியமான, விழிப்புணா்வுள்ள, தாா்மிக வலிமைமிக்க சமூகத்தை உருவாக்குவதில் மாணவா்கள் தீவிரமாகப் பங்கேற்க வேண்டும்’ என்றாா்.
நிகழ்ச்சியில் கா்நாடக முதல்வா் டி.கே. சிவகுமாா் பேசுகையில், ‘போதைப் பொருள் இல்லாத கா்நாடகத்தை உருவாக்க மாநில அரசு உறுதிபூண்டுள்ளது. மாநிலத்தில் போதைப் பொருளை விற்போா், அதைத் தயாரிப்போா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை: குடியரசுத் துணைத்தலைவர்

போதைப் பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்க உறுதி ஏற்க வேண்டும்

போதை இல்லா சமுதாயத்தை உருவாக்க ஒன்றிணைவோம்: பிரேமலதா விஜயகாந்த்







