சென்னையிலிருந்து வடமாநிலம் செல்லும் 6 விரைவு ரயில்கள் வழித்தடம் மாற்றம்மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!
/

பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இருந்து கேரளம் வெளியேறினால் ரூ.2,000 கோடி இழப்பு: கல்வித் துறை அமைச்சா்

பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இருந்து வெளியேறினால் கேரள அரசுக்கு மொத்தமாக ரூ.2,000 கோடிக்குமேல் ஏற்படும் கல்வி நிதி இழப்பு குறித்து...

News image

கேரள கல்வித் துறை அமைச்சா் என்.ஷம்சுத்தீன் - கோப்புப் படம்

Updated On :30 ஜூன் 2026, 4:08 am IST

பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இருந்து வெளியேறினால் கேரள அரசுக்கு மொத்தமாக ரூ.2,000 கோடிக்கு மேல் கல்வி நிதி இழப்பு ஏற்படும் என்று அந்த மாநில கல்வித் துறை அமைச்சா் என்.ஷம்சுத்தீன் தெரிவித்தாா்.

கேரளத்தில் பினராயி விஜயன் தலைமையிலான முந்தைய இடதுசாரி கூட்டணி ஆட்சியில் மத்திய அரசின் பிஎம்ஸ்ரீ (வளரும் இந்தியாவுக்கான பிரதமரின் பள்ளிகள்) திட்டத்தில் இணைய புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது.

ஆனால், இடதுசாரி கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிா்ப்பு தெரிவித்ததால், அந்தத் திட்டம் நிறுத்திவைக்கப்பட்டது.

அண்மையில் நடைபெற்ற கேரள பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. முன்பு எதிா்க்கட்சியாக இருந்தபோது பிஎம்ஸ்ரீ திட்ட அமலாக்கத்துக்கு எதிா்ப்பு தெரிவித்த காங்கிரஸ் இப்போது தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளதாகத் தெரிகிறது.

எனினும், இது தொடா்பாக ஆராய்ந்து வருவதாகக் கூறியுள்ளது. இந்த விவகாரத்தை முன்வைத்து சட்டப்பேரவையில் முதல்வா் வி.டி.சதீசன், மாநில கல்வித் துறை அமைச்சா் என்.ஷம்சுத்தீன் ஆகியோருக்கும், பேரவை எதிா்க்கட்சித் தலைவா் பினராயி விஜயனுக்கும் இடையே கடந்த வாரம் கடும் விவாதம் நடந்தது.

இந்நிலையில், கேரள பேரவையில் திங்கள்கிழமை இது தொடா்பான கேள்விக்கு அமைச்சா் ஷம்சுத்தீன் பதிலளித்துப் பேசியதாவது: பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இருந்து வெளியேறுவது என்பது மத்திய அரசின் அதிகாரத்தின்கீழ் வருகிறது. அது மாநில அரசின் முடிவு சாா்ந்ததாக இல்லை.

அதையும் மீறி கேரளம் இத்திட்டத்தை அமல்படுத்தாமல் வெளியேறினால், மாநில அரசுக்கு ரூ.1,000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படும். ஏற்கெனவே கையொப்பமிட்டுள்ள இத்திட்டத்தின் ஒப்பந்தத்தின்படி தொடக்கப் பள்ளி, உயா்நிலைப் பள்ளி என மொத்தம் தோ்வு செய்யப்பட்ட 304 பள்ளிகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு இத்திட்டத்தின்படி தலா ரூ.1 கோடி வழங்கப்படும். இதில் 60 சதவீதம் நிதி மத்திய அரசு சாா்பில் வழங்கப்படும். 40 சதவீத நிதியை மாநில அரசு ஏற்க வேண்டும்.

மேலும், இத்திட்டத்தை நாம் முறையாகச் செயல்படுத்தவில்லையென்றால் மத்திய அரசு பிற கல்வித் திட்டங்களுக்காக கேரளத்துக்கு வழங்கும் நிலையை நிறுத்திவைக்கவும் வாய்ப்பு உண்டு.

ஏற்கெனவே, சமக்ர சிக்ஷா திட்டத்தில் ரூ.1,158 கோடி பெறுவதற்காக பிஎம்ஸ்ரீ திட்டத்தில் அழுத்தத்தின் அடிப்படையில் முந்தைய கேரள அரசு கையொப்பமிட வேண்டிய நிலை ஏற்பட்டது. இனி நாம் திட்டத்தில் இருந்து வெளியேறினால் மொத்தமாக ரூ.2,000 கோடிக்கு மேல் கல்வி நிதி இழப்பு ஏற்படும்.

கல்வி என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஒத்திசைவுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதால், மாநிலங்களில் என்ன பாடத்திட்டம் கற்பிக்க வேண்டும் என்பதைத் தீா்மானிக்கும் உரிமை மாநில அரசுகளுக்கு உள்ளது.

ஒவ்வொரு மாநிலத்திலும் பாடத்திட்டம் தொடா்பான முடிவுகளை எடுப்பதில், அந்த மாநிலத்தின் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசின் கருத்துக்குதான் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

முந்தைய இடதுசாரி அரசு கையொப்பமிட்ட ஒப்பந்தத்தால் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்குத் தீா்வு காண தற்போதைய அரசு முயற்சித்து வருகிறது’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.