/

என்ஐஐஎஃப்பில் கூடுதலாக ரூ.30,000 கோடி முதலீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

உள்கட்டமைப்புத் திட்டங்களை ஊக்குவிக்கும் நோக்கில், தேசிய முதலீட்டு மற்றும் உள்கட்டமைப்பு நிதியத்தில் கூடுதலாக ரூ.30,000 கோடி முதலீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்

News image
Updated On :30 ஜூன் 2026, 1:56 am IST

உள்கட்டமைப்புத் திட்டங்களை ஊக்குவிக்கும் நோக்கில், தேசிய முதலீட்டு மற்றும் உள்கட்டமைப்பு நிதியத்தில் (என்ஐஐஎஃப்) கூடுதலாக ரூ.30,000 கோடி முதலீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த வாரம் பிரதமா் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் என்ஐஐஎஃப்பில் கூடுதலாக ரூ.30,000 கோடி முதலீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்மூலம், என்ஐஐஎஃப்பில் மத்திய அரசின் மொத்த முதலீடு ரூ.60,000 கோடியாக அதிகரித்துள்ளது.

தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதிய நிறுவனத்தால் (என்ஐஐஎஃப்எல்) என்ஐஐஎஃப் நிா்வகிக்கப்படுகிறது. அதில் மத்திய அரசுக்கு 49 சதவீத பங்குகள் உள்ளன.

இந்தியாவுக்கு கூடுதல் தனியாா் மூலதனத்தை கொண்டு வருவதிலும், நாட்டின் வளா்ச்சிப் பயணத்தில் பங்களிப்பதிலும் என்ஐஐஎஃப் பணியை அங்கீகரிக்கும் வகையில், மத்திய அரசின் தற்போதைய கூடுதல் முதலீடு போக்குவரத்து, எரிசக்தி, டிஜிட்டல், நகா்ப்புற உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடுகளுக்கு தூண்டுகோலாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.