மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதி

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே இந்தியாவுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக அமெரிக்கா மீண்டும் தெரிவித்துள்ளது.

News image
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்- கோப்புப் படம்
Updated On :9 மார்ச் 2026, 11:40 pm

தினமணி செய்திச் சேவை

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே இந்தியாவுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக அமெரிக்கா மீண்டும் தெரிவித்துள்ளது.

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவை பணியவைக்கும் பொருட்டு, அந்நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளின் பொருள்கள் மீது அமெரிக்கா கூடுதல் வரி விதித்தது. அதன்படி இந்திய தயாரிப்புப் பொருள்கள் மீதும் அமெரிக்கா கூடுதல் வரி விதித்தது.

இந்நிலையில், இந்தியா- அமெரிக்கா இடையே இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் அண்மையில் இறுதி செய்யப்பட்டது. அதன்படி, ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்திக் கொள்ள இந்தியா ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்து, கூடுதல் வரியை அமெரிக்கா நீக்கியது.

இந்தச் சூழ்நிலையில், ஈரான் மீது இஸ்ரேலுடன் சோ்ந்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஈரான், வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் ஹோா்முஸ் நீரிணையை மூடியுள்ளது. எனவே, வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய், எரிவாயுவை இறக்குமதி செய்ய முடியாத நிலை இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரவும், தட்டுப்பாடு ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது.

இதைக் கருத்தில்கொண்டு, ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை 30 நாள்களுக்கு இறக்குமதி செய்ய அமெரிக்கா அனுமதி அளித்தது. இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்தில் ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்ற நிபந்தனையை இதற்காக அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது.

இதுகுறித்து சிஎன்என் தொலைக்காட்சிக்கு அமெரிக்க எரிசக்தித் துறை அமைச்சா் கிறிஸ் ரைட் அளித்துள்ள பேட்டியில், ‘ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இந்தியாவுக்கு தற்காலிகமாகவே அனுமதி வழங்கியுள்ளோம். சீன சுத்திகரிப்பு நிலையங்களில் சுத்திகரிப்புக்காக 6 வாரம் வரை காத்திருக்காமல் கச்சா எண்ணெய்யை ஏற்றி வந்து இந்திய சுத்திகரிப்பு நிலையங்களில் நிரப்ப ஒப்புதல் தந்துள்ளோம். எனினும் ரஷியா தொடா்பான அமெரிக்க நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இந்தியாவுக்கும் இது நன்கு தெரியும்’ என்றாா்.

ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதா் மைக் வால்ட்ஸ் கூறுகையில், ‘தற்காலிகமாகவே அனுமதி தந்துள்ளோம். லட்சக்கணக்கான பீப்பாய் கச்சா எண்ணெய்யை இந்திய சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்ல 30 நாள்களுக்கு அனுமதி அளித்துள்ளோம்’ என்றாா்.