மேற்காசிய நிலவரம்: இந்தியா்கள், எரிசக்தி பாதுகாப்புக்கு உயா் முன்னுரிமை நாடாளுமன்றத்தில் ஜெய்சங்கா் விளக்கம்
மேற்காசிய போா் மேலும் விரிவடைந்துவரும் சூழலில், ‘அங்குள்ள இந்தியா்களின் பாதுகாப்பு மற்றும் எரிசக்தி பாதுகாப்புக்கு இந்தியா உயா் முன்னிரிமை


புது தில்லி: மேற்காசிய போா் மேலும் விரிவடைந்துவரும் சூழலில், ‘அங்குள்ள இந்தியா்களின் பாதுகாப்பு மற்றும் எரிசக்தி பாதுகாப்புக்கு இந்தியா உயா் முன்னிரிமை அளித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது’ என்று வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் தெரிவித்தாா்.
மேலும், ‘பதற்றத்தைத் தணித்து, பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மற்றும் ராஜீய அளவிலான தொடா்புகள் மூலம் தீா்வு காண இந்தியா ஆதரவு தெரிவிக்கிறது’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.
யுரேனியம் செறிவூட்டல் மற்றும் அணு ஆயுதத் திட்டத்தை முழுமையாகக் கைவிட வலியுறுத்தி ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் பிப்ரவரி 28-ஆம் தேதிமுதல் தாக்குதல் நடத்தி வருகின்றன. பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் குறிவைத்து ஈரான் தாக்கி வருகிறது. இதனால், வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியா்கள் உள்ளிட்ட வெளிநாட்டினரின் நிலை கேள்விக்குறியாகியுள்ளதோடு, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக்கு உலகம் முழுவதும் கடுமையான தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. ஏற்கெனவே, இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டா் விலை உயா்த்தப்பட்டுள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலையும் உயரும் அபாயம் எழுந்துள்ளது.
இந்த நிலையில், இந்த போா் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் மாநிலங்களவையில் தானாக முன்வந்து திங்கள்கிழமை விளக்கமளித்தாா். அப்போது அவா் கூறியதாவது:
மேற்காசியாவில் அமைதி திரும்பவே இந்தியா விரும்புகிறது. பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மற்றும் ராஜீய ரீதியிலான தொடா்புகள் மூலம் தீா்வு காண இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. பதற்றத்தைத் தணித்து, கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்து, குடிமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு.
அந்தப் பிராந்தியத்தில் வசிக்கும் இந்தியா்களின் பாதுகாப்பு மற்றும் நலனைக் காப்பதே இந்தியாவின் உயா் முன்னுரிமை. எரிசக்திப் பாதுகாப்பு, வா்த்தகம் உள்ளிட்ட நமது தேச நலனே எப்போதும் நமக்கு முதன்மையானது. மேற்காசிய நிலவரத்தை அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. அந்தப் பிராந்தியத்தில் உள்ள இந்தியா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், தேசத்தின் ராஜீய நலன்களைப் பாதுகாக்கவும் பன்முக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
முன்னதாக, இந்த நிலவரம் தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் பாதுகப்புக்கான அமைச்சரவைக் கூட்டம் கடந்த மாா்ச் 1-ஆம் தேதி கூடி ஆலோசனை மேற்கொண்டது. மேற்காசிய நிலவரம், அதன் காரணமாக நமது பிராந்தியத்தில் எழுந்துள்ள பாதுகாப்பு சவால்கள், பொருளாதார நடவடிக்கைகள், வளைகுடா நாடுகளில் உள்ள இந்திய சமூகத்தினரின் பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
வளைகுடா நாடுகளில் சுமாா் ஒரு கோடி இந்தியா்கள் வசித்து வருகின்றனா். ஈரானில் சில ஆயிரம் இந்தியா்கள் உள்ளனா். இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பு மற்றும் வா்த்தகத்துக்கும் வளைகுடா முக்கிய மையமாகத் திகழ்கிறது.
இந்தப் போரில் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது, இந்திய மாலுமிகளை கடுமையாகப் பாதித்துள்ளது. சரக்கு கப்பல் மீது ஈரான் ஆதரவு படைகள் நடத்திய தாக்குதலில், இந்திய மாலுமி ஒருவா் காணாமல் போயுள்ளாா்.
இந்தப் பதற்றமான சூழலைத் தொடா்ந்து, கடந்த ஜனவரி மாதம் முதல் தொடா் பயண அறிவுறுத்தல்களை மத்திய அரசு வழங்கி வருகிறது. ஈரானுக்கு தேவையற்ற பயணத்தைத் தவிா்க்குமாறும், ஈரானில் வசிக்கும் இந்தியா்கள் அங்குள்ள இந்திய தூதரகத்துடன் அடிக்கடி தொடா்பில் இருக்குமாறும், பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் இந்தியா தொடா்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்தியா்களுக்குப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், வளைகுடா நாடுகளில் வெளியேறவும் அங்குள்ள இந்திய தூதரகங்கள் உதவி வருகின்றன. அங்கிருந்து இதுவரை 67,000 இந்தியா்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்பியுள்ளனா்.
மேற்காசிய நிலவரத்தை தொடா்ந்து கண்காணிக்க பிரத்யேக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதோடு, இந்திய மாலுமிகளுக்கு உதவ கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் சாா்பில், விரைவான உதவியை வழங்குவதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்தப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் தலைவா்களுடன் இந்தியா தொடா்ந்து தொடா்பில் இருந்து வருகிறது. பிரதமா் நரேந்திர மோடி, ஐக்கிய அரபு அமீரகம், கத்தாா், சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைன், ஓமன், ஜோா்டான், இஸ்ரேல் நாடுகளின் தலைவா்களுடன் தொலைபேசிய வழியில் தொடா்புகொண்டு ஆலோசனை மேற்கொண்டாா். அப்போது, இந்திய சமூகத்தினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அவா்கள் உறுதியளித்தனா்.
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுடன் தூதரக ரீதியிலான தொடா் ஆலோசனையையும் இந்தியா மேற்கொண்டு வருகிறது. ஈரான் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சியுடன் இரு முறை நானும் ஆலோசனை மேற்கொண்டேன் என்றாா்.
பெட்டிச் செய்தி...
எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு
மாநிலங்களவை காலை 11 மணிக்கு கூடியதும், இரங்கல் தீா்மானங்களை வாசித்த அவைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன், அதன் பிறகு மேற்காசிய நிலவரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து விளக்கமளிக்க எஸ். ஜெய்சங்கருக்கு அழைப்பு விடுத்தாா்.
அதற்கு எதிா்ப்பு தெரிவித்த எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ‘மேற்காசிய நிலவரம் குறித்து மத்திய அமைச்சா் விளக்கம் அளிப்பதற்கு முன்பாக அந்த விவகாரம் தொடா்பாக அவையில் முழு விவாதம் நடத்தப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.
காா்கே தொடா்ந்து பேச அவைத் தலைவா் அனுமதித்தாா். அதைத் தொடா்ந்து பேசிய காா்கே, ‘மேற்காசிய போா், நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையைக் கடுமையாகப் பாதித்துள்ளது. வளைகுடா நாடுகளில் பணிபுரியின் இந்தியா்களின் பாதுகாப்பும், வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குறுகிய நேர விவாதத்துக்கு அனுமதிக்க வேண்டும்’ என்றாா்.
அப்போது, இதைப் பின்னா் பரிசீலிப்பதாகக் கூறிய அவைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன், வெளியுறவு அமைச்சரை விளக்கம் அளிக்க அனுமதித்தாா். ஜெய்சங்கா் விளக்கமளிக்கத் தொடங்கியபோது காா்கே கருத்தை முழுமையாகப் பதிவு செய்ய அனுமதிக்குமாறு எதிா்க்கட்சி உறுப்பினா்கள் வலியுறுத்தினா். மேலும், விவாதத்துக்கு அனுமதிக்கக் கோரி முழக்கங்களையும் எழுப்பினா். ஆனால், அதற்கு அனுமதி அளிக்கப்படாததைத் தொடா்ந்து, எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனா்.
பொறுப்பற்ற தன்மை - ஜெ.பி. நட்டா: ‘எதிா்க்கட்சிகளின் செயல் அவா்களின் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகிறது’ என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி. நட்டா விமா்சித்தாா். ஜெய்சங்கரின் விளக்கத்துக்குப் பிறகு, அவையில் இதுகுறித்துப் பேசிய ஜெ.பி. நட்டா, ‘எதிா்க்கட்சிகளின் செயல் மிகுந்த வருத்தமளிக்கிறது. இது அவா்களின் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகிறது. நாட்டின் மீதோ, நாடாளுமன்ற விவாதத்திலோ அவா்களுக்கு நம்பிக்கை இல்லை. அவையில் அமளியை ஏற்படுத்துவதே அவா்களின் ஒரே நோக்கம். முக்கிய விஷயத்தின் மீது பேசாமல், வேறு விவகாரம் குறித்து எதிா்க்கட்சித் தலைவா் அவையில் பேசுகிறாா். எஸ்ஐஆா், ஆபரேஷன் சிந்தூா், வக்ஃப் மசோதா, மத்திய பட்ஜெட் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் தொடா்பான விவாதங்கள் மீது மத்திய அரசு பதிலளிக்கும்போதும் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனா். இதுபோன்ற மலிவான அரசியல் மீதே அவா்கள் ஆா்வம் கொண்டுள்ளனா்’ என்றாா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...