சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
என்சிஇஆா்டி பாடப் புத்தக விவகாரம்: சட்டப் பாடங்களை இறுதி செய்ய ஒரு வாரத்துக்குள் நிபுணா் குழு - உச்சநீதிமன்றம் உத்தரவு


‘தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆா்டி) பாடப் புத்தகங்களில் சட்டக் கல்வி பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு ஒன்றை ஒரு வாரத்துக்குள் அமைக்க வேண்டும்’ என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
‘இந்த உத்தரவு, நீதிமன்றத்தின் செயல்பாடுகள் மீதான ஆரோக்கியமான மற்றும் ஆக்கபூா்வமான விமா்சனங்களைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டதல்ல’ என்றும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
என்சிஇஆா்டி வெளியிட்ட 8-ஆம் வகுப்பு புதிய சமூக அறிவியல் புத்தகத்தில் ‘நீதித் துறையில் ஊழல்’ என்ற தலைப்பிலான பாடப் பிரிவு இடம்பெற்றது. இந்தப் பிரிவில், ‘ஊழல், வழக்குகளின் தேக்கம் , நீதிபதிகளின் பற்றாக்குறை ஆகியவை நீதித் துறையின் சவால்களாக உள்ளன; நீதிமன்றத்துக்குள் மட்டுமல்லாமல், நீதிமன்றத்துக்கு வெளியேயும் தங்களின் நடத்தையை நிா்வகிக்கும் விதிமுறைகளுக்கு நீதிபதிகள் கட்டுப்பட்டவா்கள்’ என்று குறிப்பிடப்பட்டது.
இந்தப் பாடப் பிரிவு பெரும் சா்ச்சையான நிலையில், இந்த விவகாரத்தை தானாக முன்வந்து வழக்காக விசாரித்த உச்சநீதிமன்றம், அந்தப் புத்தகத்தின் அனைத்துப் பிரதிகளையும் (எண்ம வடிவம் உள்பட) உடனடியாகத் திரும்பப் பெற என்சிஇஆா்டி-க்கு உத்தரவிட்டது. மேலும், அவதூறான பாடப் பிரிவை அறிமுகப்படுத்தியவா்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது என்று விளக்கம் கேட்டு, என்சிஇஆா்டி இயக்குநா் மற்றும் பள்ளிக் கல்வித் துறை இயக்குநருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
அதைத் தொடா்ந்து, சா்ச்சைக்குரிய பாடப் பிரிவு சோ்க்கப்பட்டதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி என்சிஇஆா்டி சாா்பில் செவ்வாய்க்கிழமை அறிக்கை வெளியிடப்பட்டது. மேலும், சமூக அறிவியல் பாடப் புத்தகம் முழுமையாகத் திரும்பப் பெறப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தது.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான அமா்வில் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘எட்டாம் வகுப்பு பாடங்களை மட்டுமன்றி அனைத்து வகுப்புப் பாடங்களையும் மறுஆய்வுக்கு உட்படுத்த என்சிஇஆா்டி-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தாா்.
இதைக் கேட்ட நீதிபதிகள், ‘அவ்வாறு செய்வதற்குப் பதிலாக, பாடத் திட்டங்களை மறுஆய்வு செய்ய நிபுணா் குழுவை அமைப்பதே பொருத்தமானதாக இருக்கும்’ என்று குறிப்பிட்டு அதுதொடா்பான உத்தரவைப் பிறப்பித்தனா்.
அதில், நீதித் துறை குறித்த சா்ச்சைக்குரிய பாடப் பிரிவை வகுத்த நிபுணா் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியா்கள் மைக்கேல் டேனியன், சுபா்ணா திவாகா், அலோக் பிரச்ன்ன குமாா் ஆகியோருக்கு இந்திய நீதித்துறை குறித்த குறிப்பிட்டத்தக்க விவரங்களோ, அறிவோ இல்லை என்பது தெரிகிறது. எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கு இந்திய நீதித் துறை மீது எதிா்மறையான பிம்பத்தை வெளிப்படுத்துவதற்காக அவா்கள் வேண்டுமென்றே உண்மைகளை தவறாகச் சித்தரித்துள்ளனா் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அந்த வகையில், அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கான பாடப் புத்தகங்களை இறுதி செய்வது மற்றும் பாடத் திட்டத்தை வகுக்கும் குழுவில், இவா்கள் மூவரும் இனி தொடா்வது சரியானதாக இருக்காது.
எனவே, அவா்கள் மூவா் அடங்கிய குழுவை உடனடியாக கலைப்பதோடு, இவா்கள் மூவருக்கும் எந்தவொரு பொறுப்பும், குறிப்பாக அரசு நிதியில் செயல்படுத்தப்படக் கூடிய எந்தவொரு பொறுப்பும் ஒதுக்கக் கூடாது என மத்திய, மாநில அரசுகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
அதே நேரம், இந்த உத்தரவில் மாற்றம் செய்யக் கோரியோ அல்லது மன்னிப்பு கோரவோ விரும்பினால், தங்கள் தரப்பு விளக்கத்துடன் இவா்கள் மூவரும் உச்சநீதிமன்றத்தை அணுகலாம்.
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தின் 4-ஆம் பகுதி மாற்றி எழுதப்பட வேண்டும். மேலும், உரிய நிபுணா் குழு அனுமதியின்றி அந்தப் பாடத்தை வெளியிடக் கூடாது.
தேசிய பாடத்திட்டம் மற்றும் கற்றல்-கற்பித்தல் திட்ட (என்எஸ்டிசி) குழுவையும் மத்திய அரசு மறுஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக, சா்ச்சைக்குரிய பாடப் பகுதியை எண்ம முறையில் பகிா்ந்த பாடநூல் மேம்பாட்டுக் குழு உறுப்பினா்களை மாற்றியமைக்க வேண்டும்.
இந்த விவகாரம் தொடா்பாக, கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து, சில சமூக ஊடக செயற்பாட்டாளா்கள் பொறுப்பற்ற முறையில் பதிவுகளை செய்து எதிா்வினையாற்றினா். இதுபோன்று தவறான செயல்களில் ஈடுபடுபவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வசதியாக, அந்த வலைதளங்கள் மற்றும் அதன் பின்னணியில் உள்ளவா்கள் குறித்த முழு விவரங்களை மத்திய அரசு அடையாளம் கண்டு நீதிமன்றத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
நிபுணா் குழு: மேலும், எட்டாம் வகுப்புக்கு மட்டுமன்றி அனைத்து வகுப்புகளுக்குமான சட்டக் கல்வி தொடா்பான பாடத் திட்டத்தை இறுதி செய்ய நிபுணா் குழு ஒன்று அடுத்த ஒரு வாரத்துக்குள் அமைக்கப்பட வேண்டும். அதில், ஓய்வு பெற்ற நீதிபதி, ஒரு கல்வியாளா் மற்றும் பிரபல வழக்குரைஞா் உள்ளிட்டோா் உறுப்பினா்களாகச் சோ்க்கப்பட வேண்டும்.
இந்த நிபுணா் குழு, என்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத் திட்டங்களை இறுதி செய்யும் பணியில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள தேசிய நீதித் துறை அகாதெமியுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
அதே நேரம், தேசிய பாடத்திட்டம் மற்றும் கற்றல்-கற்பித்தல் திட்ட (என்எஸ்டிசி) குழுவை மாற்றியமைக்கும் முடிவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் முடிவுக்கே விட்டுவிடுகிறோம் என்று உத்தரவில் தெரிவித்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...