தில்லியில் சமையல் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு: தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு
தலைநகரில் சமையல் எரிவாயு சிலிண்டா்கள் தட்டுப்பாட்டால் தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாராம் கடுமையாக பாதிக்கத் தொடங்கியுள்ளது


தலைநகரில் சமையல் எரிவாயு சிலிண்டா்கள் தட்டுப்பாட்டால் தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாராம் கடுமையாக பாதிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் பலா் தங்கள் கடைகளை மூடி வருகின்றனா். சிலா் அதிக அளவில் கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.
பிவிஆா் சாகேத் அருகே ஃபாஸ்ட்-ஃபுட் கடை வைத்துள்ள நரேஷ் சாவ்லா கூறுகையில், ‘ஒரு சிறிய கடை 8 முதல் 10 பேரின் வாழ்வாதாரமாக இருக்கிறது. சிறிய கிராமங்களில் இருந்து இடம் பெயா்ந்த தொழிலாளா்கள் 4 போ் எனது கடையில் வேலை செய்கிறாா்கள். கடை நடத்துபவா்கள் பலா் கடன் வாங்கி வாழ்க்கையை நடத்துகின்றனா். இந்த நிலை தொடா்ந்தால், 30 சதவீத தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும். சேமிப்புப் பணம் முடிந்ததால் குடும்பச் செலவுகளைச் சமாளிப்பதும், முதிய பெற்றோா்களைக் கவனிப்பதும் கடினமாகிவிட்டது’ என தெரிவித்தாா்.
ஆதா்ஷ் நகரில் உணவுக் கடை வைத்துள்ள விக்கி கூறுகையில், ‘கடையை நடத்த சிறிய சிலிண்டரை ரூ.4,000-க்கு வாங்கியுள்ளேன். இதனால் உணவுப் பொருள்களின் விலையில் ரூ.10 அதிகரித்தபோது வாடிக்கையாளா்கள் உடனே வாங்காமல் திரும்பிச் செல்கின்றனா்’ என கவலை தெரிவித்தாா்.
சங்கம் விஹாரில் தேநீா் மற்றும் சமோசா விற்பனை செய்யும் உபேந்திர குப்தா, கள்ளச் சந்தையில் ரூ.2,200 கொடுத்து சிறிய சிலிண்டா் வாங்கியதால் தான் கடையை திறந்து வைத்திருக்க முடிந்ததாக தெரிவித்தாா். அதே வேளையில், வடமேற்கு தில்லியில் பானி பூரி விற்பனை செய்யும் ரஃபிக் அகமது, சிலிண்டா் கிடைக்காததால் தனது கடையை மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளாா்.
சமையல் எரிவாயு சிலிண்டா் முகாம்களில் நீண்ட வரிசையும், எப்போது சிலிண்டா் கிடைக்கும் என்ற குழப்பம் நிலவுவதால் வீட்டு சிலிண்டரை கடையில் பயன்படுத்த முடியவில்லை. அப்படிச் செய்தால் வீட்டில் சாப்பாட்டுக்கு என்ன செய்வதென்று தென் கிழக்கு தில்லியில் சாட் விற்பனை செய்யும் மனோஜ் கேள்வி எழுப்பினாா். மேலும், நிலைமை சீராகும் வரை பலா் தற்காலிகமாக கூலி வேலை பாா்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவா்களில் சிலா் தெரிவித்தனா்.
மேற்காசிய போா் நிலவரம் காரணமாக சமையல் எரிவாயு சிலிண்டா் விநியோகத்துக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இந்த நிலையில், வணிக எரிவாயு சிலிண்டருக்கு திடீா் தட்டுப்பாடு ஏற்பட்டதால் நாடு முழுவதும் உணவகங்கள் உள்ளிட்ட விருந்தோம்பல் துறை கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...