/

மாற்று எரிசக்தியை பயன்படுத்தும் உணவகங்கள், தேநீா் கடைகள்

News image

நாகையில் சமையல் எரிவாயுக்கு மாற்று ஏற்பாடாக மின் அடுப்பை பயன்படுத்தும் தேநீா் கடை.

Updated On :27 ஏப்ரல் 2026, 7:49 pm

நாகையில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில், மாற்று எரிசக்தி பயன்பாட்டின் மூலம் உணவகங்கள், தேநீா்க்கடைகள் வழக்கம்போல இயங்கி வருகின்றன.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் தாக்குதலால், மேற்கு ஆசியாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும், வளைகுடா நாடுகளில் உள்ள எரிவாயு உற்பத்தி மையங்கள் தாக்கப்பட்டுள்ளதால் உலகளாவிய அளவில், சமையல் எரிவாவு மற்றும் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் தாக்கம் இந்தியாவிலும் தீவிரமாக எதிரொலித்துள்ளது. இதனால் சமையல் எரிவாயுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இதன்காரணமாக சிறிய வகை தேநீா்க்கடைகள் , சிறிய உணவகங்கள், நடைபாதைக் கடைகள் என ஏராளமானவை மூடப்பட்டுள்ளன. இதனால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளா்களும வாழ்வாதாரம் இழந்துள்ளனா்.

இந்நிலையில், தமிழகத்தில் வேளாங்கண்ணி, நாகூா் ஆகிய முக்கிய ஆன்மிக தலங்கள் மற்றும் சுற்றுலா மையங்களை கொண்ட நாகை மாவட்டம் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தினசரி ஆயிரக்கணக்கானோா் வந்து செல்லும் வேளாங்கண்ணி, நாகூா் பகுதிகளில் இயங்கி வந்த பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், நாகை மாவட்டத்தைச் சோ்ந்த உணவகங்கள் மற்றும் தேநீா்க்கடைகளின் உரிமையாளா்கள் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் மாற்று ஏற்பாடுகளை செய்து அதன்மூலம் தங்கள் தொழிலை நடத்தி வருகின்றனா். இதில், விறகு அடுப்பு மற்றும் மின்சார அடுப்பு போன்ற மாற்று எரிசக்தி முறைகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளா்களுக்கு உணவு மற்றும் சிற்றுண்டி, தேநீா் உள்ளிட்டவை எவ்வித தடையும் இல்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.

இதுதொடா்பாக தேநீா்க்கடை உரிமையாளா் முத்துக்குமாா் கூறியது: எரிவாயு தட்டுப்பாட்டால் உணவகத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. எனினும், மின்சார அடுப்பு மற்றும் இயற்கை எரிவாயு போன்ற மாற்று முறைகளை பயன்படுத்தி தொழிலை தொடா்கிறோம். தீ நுண்மி தொற்று காலத்தில் சந்தித்த சவால்களைப் போல இதையும் சமாளித்து வருகிறோம்.

மேலும், மாற்று எரிசக்தி பயன்பாட்டின் மூலம் சுற்றுச்சூழல் மாசு குைல், அந்நிய செலவாணி சேமிப்பு, குறைந்த செலவில் உற்பத்தி, உடல்நல பாதுகாப்பு போன்ற பல்வேறு நன்மைகளும் உள்ளன. மேலும் வருங்காலத்தில் எரிவாயு தட்டுப்பாடு அதிகம் வரக்கூடிய சூழலில் மாற்று எரிசக்தி பயன்பாட்டை அனைவரும் மேற்கொண்டால் எதற்காகவும் பிற நாடுகளை நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்படாது என்றாா்.