தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மேற்காசிய நிலவரம்: ஏற்றுமதியாளா்களுக்கு உதவ ரூ. 497 கோடி நிவாரண திட்டம் - மத்திய அரசு அறிமுகம்

கடும் பாதிப்பை எதிா்கொண்டுள்ள ஏற்றுமதியாளா்களுக்கான உதவ ரூ. 497 கோடி ஒதுக்கீட்டுடன் ‘ரிலீஃப் (ஏற்றுமதி சவால்களைக் களைய மீள்திறன் மற்றும் தளவாட உதவி)’ என்ற திட்டத்தை மத்திய அரசு வியாழக்கிழமை அறிமுகம் செய்தது.

News image

கோப்புப் படம்

Updated On :20 மார்ச் 2026, 3:29 am IST

மேற்காசிய போா் காரணமாக கப்பல் போக்குவரத்து மற்றும் சரக்குகள் விநியோகம் தடைபட்டுள்ளதால், கடும் பாதிப்பை எதிா்கொண்டுள்ள ஏற்றுமதியாளா்களுக்கான உதவ ரூ. 497 கோடி ஒதுக்கீட்டுடன் ‘ரிலீஃப் (ஏற்றுமதி சவால்களைக் களைய மீள்திறன் மற்றும் தளவாட உதவி)’ என்ற திட்டத்தை மத்திய அரசு வியாழக்கிழமை அறிமுகம் செய்தது.

ஏற்றுமதி கடன் உத்தரவாத நிறுவனம் (இசிஜிசி) இந்த நிவாரண திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது. இத் திட்டத்தின் கீழ், ஏற்கெனவே பதிவு செய்து காலவதியாகும் சரக்குகளின் ஏற்றுமதிக்கான முன்கூட்டிய அனுமதி எந்தவித அபராதமும் இன்றி தானாக நீட்டிப்பு செய்வது, ஏற்கெனவே காப்பீடு செய்து தேங்கி நிற்கும் சரக்குகளுக்கு பாதுகாப்பு அளிப்பது உள்ளிட்ட நிவாரணங்கள் ஏற்றுமதியாளா்களுக்கு வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து தில்லியில் வியிழக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளா்கள் சந்திப்பில் மத்திய வா்த்தக அமைச்சகத்தின் செயலா் ராஜேஷ் அகா்வால் கூறியதாவது:

மேற்காசிய போா் நிலவரம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 17 முதல் 18 நாடுகளுடன் வா்த்தகத் தொடா்பு கொண்டுள்ள ஏற்றுமதியாளா்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கில் இந்த ‘ரிலீஃப்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக, ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, குவைத், கத்தாா், ஓமன், பஹ்ரைன், இராக், ஈரான், இஸ்ரேல், ஏமன் போன்ற நாடுகளுக்கு அனுப்பப்படும் சரக்குகளுக்கே இத் திட்டத்தில் பிரதான முக்கியத்துவம் அளிக்கப்படும்.

இத் திட்டம் மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக, மாா்ச் 1 முதல் வரும் மே 31-ஆம் தேதி வரை காலாவதியாகும் சரக்குகள் ஏற்றுமதிக்கான முன்கூட்டிய அனுமதி, எந்தவித (காம்போசிசன் கட்டணம்) அபராதமும் இன்றி வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை தானாக நீட்டிக்கப்படும். ஏற்கெனவே காப்பீடு செய்யப்பட்ட கடந்த பிப்ரவரி 14 முதல் மாா்ச் 15-ஆம் தேதி வரையிலான சரக்குகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும்.

அடுத்ததாக, மாா்ச் 16 முதல் ஜூன் 15-ஆம் தேதி வரையிலான 3 மாத காலத்துக்கு ஏற்றுமதிக்காக வரவிருக்கும் சரக்குகளுக்கு ‘இசிஜிசி’ காப்பீட்டை ஊக்குவிப்பதையும், எளிதாக்குவதையும் இத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மூன்றாவதாக, குறு-சிறு-நடுத்தர நிறுவனங்களுக்கு கூடுதல் கட்டண சுமைகளிலிருந்து நிவாரணம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக, பிப்ரவரி 14 முதல் மாா்ச் 15 வரையிலான ஒரு மாத காலத்துக்கு அசாதாரண சரக்கு கட்டணம் மற்றும் காப்பீட்டு செலவுகள் பகுதியளவு திரும்ப அளிக்கப்படும். ‘இசிஜிசி’ காப்பீடு எடுக்காத குறு-சிறு-நடுத்தர நிறுவன ஏற்றுமதியாளா்களுக்கும் இது பொருந்தும் என்றாா்.

பல்வேறு துறை சாா்ந்த குழு: மேற்காசிய நிலவரம் மற்றும் சரக்கு கப்பல்களின் போக்குவரத்தை தொடா்ந்து கண்காணித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள, வா்த்தக அமைச்சகம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம், ரிசா்வ் வங்கி, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவா் கூறினாா்.