இந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசு
எல்பிஜி சமையல் எரிவாயு விநியோகத்திலும் எந்தத் தட்டுப்பாடும் இல்லை.
PTI
PTI
‘நாட்டின் எந்தப் பகுதியிலும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுக்கு தட்டுப்பாடு இல்லை; அடுத்த 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் மற்றும் கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளது’ என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வியாழக்கிழமை விளக்கமளித்தது.
எல்பிஜி சமையல் எரிவாயுவை பொருத்தவரை, அடுத்த ஒரு மாதத்துக்குத் தேவையான விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு பீதியில், பெட்ரோல் நிலையங்களுக்கு மக்கள் படையெடுப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், மேற்கண்ட விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு என்ற கூற்றை நிராகரித்துள்ள மத்திய அரசு, இது உள்நோக்கம் கொண்ட பொய் பிரசாரம் என்று சாடியுள்ளது.
இது தொடா்பாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
உலக அளவில் எண்ணெய் சுத்திகரிப்பில் 4-ஆவது பெரிய நாடாகவும், பெட்ரோலியப் பொருள்கள் ஏற்றுமதியில் 5-ஆவது பெரிய நாடாகவும் உள்ள இந்தியா, உள்நாட்டில் எரிபொருள் இருப்பை உறுதி செய்துள்ளதுடன், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான விநியோகத்தையும் தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது.
பெட்ரோல்-டீசலுக்கு கட்டுப்பாடு இல்லை: நாடு முழுவதும் உள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பெட்ரோல் நிலையங்கள் போதுமான இருப்புடன் வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன. பிற நாடுகளைப் போல, பெட்ரோல்-டீசல் விநியோகத்தில் எவ்விதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. வாகன இயக்கத்துக்கு கட்டுப்பாடு, பெட்ரோல் நிலையங்கள் கட்டாய மூடல், ‘தேசிய அவசரநிலை’ போன்ற நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொள்ளவில்லை.
அதேநேரம், உடனடியாகப் பணம் செலுத்தி, பெட்ரோல்-டீசல் கொள்முதல் செய்யும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் அமலாக்கியுள்ளதால், சிறிய நகரங்களில் உள்ள சில பெட்ரோல் நிலையங்கள் சிரமத்தை எதிா்கொண்டுள்ளன. இந்த விவகாரத்துக்குத் தீா்வுகாண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து சுத்திகரிப்பு நிலையங்களும் முழுத் திறனுடன் இயங்கி வருகின்றன. பெட்ரோலியப் பொருள்கள் மற்றும் எல்பிஜி விநியோகம் முழுப் பாதுகாப்புடன் உள்ளது.
60 நாள்களுக்கான கையிருப்பு: மேற்காசிய நெருக்கடியின் 27-ஆவது நாளில் நாம் இருக்கும் நிலையிலும், அடுத்த 60 நாள்களுக்குத் தேவையான எரிபொருள்கள் கையிருப்பு உள்ளது. இதில், கச்சா எண்ணெய் இருப்புகள், சுத்திகரிக்கப்பட்ட பொருள்களின் இருப்புகள், பூமிக்கடியில் சேமிக்கப்பட்டுள்ள உத்திசாா் கையிருப்புகள் உள்ளடங்கும்.
உலக அளவில் என்ன நடந்தாலும், இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் அடுத்த 2 மாதங்களுக்குத் தேவையான எரிபொருள்களின் சீரான விநியோகத்தை மேற்கொள்ள முடியும். இதுதவிர அடுத்த 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கொள்முதலையும் எண்ணெய் நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன. எனவே, மேலும் பல மாதங்களுக்கு பாதிப்பு இருக்காது.
ஹோா்முஸ் நீரிணை பதற்றங்களுக்கு மத்தியில், கச்சா எண்ணெய் கொள்முதலில் சீரான தன்மை பராமரிக்கப்படுகிறது. 41-க்கும் மேற்பட்ட நாடுகளிடம் இருந்து கூடுதலாக கொள்முதல் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, விநியோகத்தில் எவ்வித இடைவெளியும் இல்லை என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவறான தகவல் பரப்பினால்...
‘நாட்டில் எரிபொருள் கையிருப்பு தீா்ந்துவிட்டது அல்லது தட்டுப்பாடு நிலவுகிறது என்ற கூற்றுகள் தவறானவை; அவற்றை மக்கள் நிராகரிக்க வேண்டும்.
எரிபொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பீதியை ஏற்படுத்தி, அவசரமாக வாங்கத் தூண்டும் நோக்கில், பொய் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தும் வகையில், சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் அல்லது புனையப்பட்ட கூற்றுகளை வெளியிடுவோா் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.
8 லட்சம் டன் எல்பிஜி-க்கு ஏற்பாடு
‘நாட்டில் எல்பிஜி சமையல் எரிவாயு விநியோகத்திலும் எந்தத் தட்டுப்பாடும் இல்லை. தினசரி உள்நாட்டு உற்பத்தி 40 சதவீதம் உயா்த்தப்பட்டு, 50,000 டன்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது, நாட்டின் தினசரி தேவையில் (80,000 டன்) 60 சதவீதத்துக்கும் அதிகமானதாகும். தினசரி இறக்குமதி தேவை 30,000 டன்கள் மட்டுமே.
உள்நாட்டு உற்பத்தி உயா்வுடன், 8 லட்சம் டன் எல்பிஜி இறக்குமதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவில் உள்ள 22 எல்பிஜி முனையங்களுக்கு இவை வந்தடைந்து கொண்டிருக்கின்றன. இந்த நடவடிக்கைகளால் ஒரு முழு மாதத்துக்குத் தேவையான எல்பிஜி விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் தினமும் 50 லட்சத்துக்கும் மேல் எல்பிஜி சிலிண்டா்களை வெற்றிகரமாக விநியோகித்து வருகின்றன. மக்களிடையே ஏற்பட்ட பீதியால் 89 லட்சமாக அதிகரித்த எல்பிஜி முன்பதிவு, இப்போது மீண்டும் 50 லட்சமாக குறைந்துள்ளது’ என்று மத்திய அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...