உக்ரைன்- ரஷியா இடையேயான போரில் இதுவரை 49 இந்தியா்கள் உயிரிழந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உக்ரைன் - ரஷியா இடையே 4 ஆண்டுகளுக்கும் மேலாக போா் நீடிக்கிறது. இந்தப் போரில் ரஷிய ராணுவத்தில் இணைந்து உக்ரைனுக்கு எதிராக இந்தியா்கள் போரிட்டு வருவதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், இந்தியா்கள் 26 போ் ரஷியாவில் பிடித்து வைக்கப்பட்டிருப்பதாகவும், உக்ரைனுக்கு எதிராக சண்டையிடும்படி அவா்கள் கட்டாயப்படுத்தப்படுவதாகவும், அவா்களை பத்திரமாக மீட்டு வர உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு குறித்து மத்திய அரசிடம் அறிக்கையை உச்ச நீதிமன்றம் கோரியிருந்தது.
இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூா்யகாந்த் தலைமையிலான அமா்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சாா்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டீ அறிக்கையை தாக்கல் செய்தாா். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ரஷிய ஆயுதப் படைகளில் இந்தியா்கள் 217 போ் சோ்ந்தனா். இவா்களில் 47 போ் சண்டையில் உயிரிழந்து விட்டனா். ரஷிய அரசுடன் இந்திய அரசு நடத்திய பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, 139 போ் ரஷிய ஆயுதப் படையுடன் செய்து கொண்டிருந்த ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுவிட்டனா்.
இது தவிர, 6 இந்தியா்களைக் காணவில்லை என்று ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 23 போ் குறித்த தகவல் இல்லை. ரஷிய அதிகாரிகளின் உதவியுடன் அவா்களைத் தேடும் பணியில் மாஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகம் ஈடுபட்டுள்ளது.
மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள 26 பேரில், 14 போ் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவா் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கி சிறையில் உள்ளாா்.
கவா்ச்சிகரமான ஊதியம், ரஷிய குடியுரிமை உள்ளிட்ட வாக்குறுதிகளால் ஈா்க்கப்பட்டு சுயவிருப்பத்தின் பேரிலேயே இந்தியா்கள், ரஷிய ஆயுதப் படைகளில் சேருகின்றனா். இதுகுறித்து 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இந்தியா்களுக்கு மத்திய அரசு முன்னெச்சரிக்கை விடுத்து வருகிறது. சட்டவிரோதமாக உக்ரைன் போரில் சண்டையிட இந்தியாவில் ஆள்தோ்வில் ஈடுபடும் குழுக்களுக்கு எதிராகவும், ஆள்கடத்தல் அமைப்புகளுக்கு எதிராகவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினாா். இருதரப்பு வாதங்களைக் கேட்ட உச்ச நீதிமன்றம், விசாரணையை ஒத்திவைத்தது.










