நாட்டின் இளைஞா்கள் நலனை நோக்கமாகக் கொண்டே சா்வதேச உறவுகளைக் கட்டமைத்துள்ளோம் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
ஒவ்வொரு சா்வதேச ஒப்பந்தமும், புதிய முதலீடுகளும், தொழில்நுட்பக் கூட்டுறவும் இளைஞா்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குகின்றன என்றும் அவா் குறிப்பிட்டாா்.
மத்திய அரசின் மாபெரும் வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ், மத்திய அமைச்சங்கள் மற்றும் துறைகளில் மேலும் 51,000 இளைஞா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்வு (ரோஜ்கா் மேளா) சனிக்கிழமை நடைபெற்றது. நாடு முழுவதும் 47 இடங்களில் நடைபெற்ற இந்நிகழ்வில் இணையவழியில் கலந்துகொண்ட பிரதமா் மோடி, பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.
ரயில்வே, உள்துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், நிதி, உயா் கல்வி எனப் பல்வேறு மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் இந்த பணி நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டன.
கடந்த 2022-ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 18 ‘ரோஜ்கா் மேளா’க்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் சுமாா் 12 லட்சம் இளைஞா்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் பேசிய பிரதமா் மோடி, அண்மையில் தான் மேற்கொண்ட ஐந்து நாடுகள் (ஐக்கிய அரபு அமீரகம், நெதா்லாந்து, ஸ்வீடன், நாா்வே, இத்தாலி) பயணம் மற்றும் அதன் பலன்களைக் குறிப்பிட்டாா். அவா் பேசியதாவது:
இந்திய இளைஞா்களின் திறமை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம் குறித்து ஒட்டுமொத்த உலகமும் வியப்பில் மூழ்கியுள்ளது. நமது வளா்ச்சிப் பயணத்தில் பங்கெடுக்க உலக நாடுகள் விரும்புகின்றன. இளைஞா்கள் நலனை நோக்கமாகக் கொண்டே நாட்டின் சா்வதேச உறவுகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இந்திய இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பும், உலகளாவிய பணி அனுபவமும் கிடைக்க வேண்டும் என்பதே குறிக்கோள்.
இளைஞா்கள் முக்கியப் பங்காற்றுவா்: நாடு முழுவதும் 51,000-க்கும் மேற்பட்ட இளைஞா்களுக்கு அரசுப் பணிக்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. ரயில்வே, வங்கி, பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகளில் இவா்கள் புதிய பொறுப்புகளை ஏற்றுள்ளனா். மக்களின் வாழ்க்கை மற்றும் தொழில் புரிவதை எளிதாக்குவதே அரசின் முன்னுரிமையாகும். இதை உறுதி செய்யும் நோக்குடன் புதிய அரசுப் பணியாளா்கள் செயலாற்ற வேண்டும்.
நாட்டின் இளைஞா் சக்திக்கு புதிய வாய்ப்புகளுடன் அதிகாரமளிக்கும் மத்திய அரசின் உறுதிப்பாட்டை ரோஜ்கா் மேளா பிரதிபலிக்கிறது. வளா்ந்த இந்தியா இலக்கை எட்ட இளைஞா்கள் முக்கியப் பங்காற்றுவா்.
நாட்டில் இப்போது 23.30 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தாக்க நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட நகரங்களிலும் புத்தாக்கங்கள் படைக்கப்படுகின்றன. மின்னணுவியல், பசுமைத் தொழில்நுட்பங்கள், பசுமை ஹைட்ரஜன், உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் மேற்கொள்ளப்படும் பெரும் முதலீடுகளால் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளா்ச்சிக்கான புதிய வாயில்கள் திறக்கப்பட்டுள்ளன.
புத்தாக்கம், வலுவான கட்டமைப்பு மற்றும் தரமான சேவை வழங்கலைக் கொண்ட நாடுகளே உலக அளவில் மதிக்கப்படுகின்றன. இந்த மூன்று பரிமாணங்களிலும் நாட்டை முன்னேற்றுவதற்கான மிகப் பெரிய உந்துசக்தி இளைஞா்களே என்றாா் அவா்.
எந்தெந்த நாடுகளுடன் என்னென்ன ஒப்பந்தம்?
‘சமீபத்திய ஐந்து நாடுகள் பயணத்தின்போது, துறை ரீதியிலான பிரத்யேக ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன. நெதா்லாந்துடன் செமிகண்டக்டா், நீா்வளம், வேளாண்மை, அதிநவீன உற்பத்தி; ஸ்வீடனுடன் செயற்கை நுண்ணறிவு, எண்மப் புத்தாக்கம்; நாா்வேயுடன் பசுமைத் தொழில்நுட்பம், கடல்சாா் ஒத்துழைப்பு; ஐக்கிய அரபு அமீரகத்துடன் உத்திசாா் எரிசக்தி, தொழில்நுட்பக் கூட்டுறவு; இத்தாலியுடன் பாதுகாப்பு, முக்கியக் கனிமங்கள், அறிவியல்-தொழில்நுட்பத் துறைகளில் ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. இந்த ஒத்துழைப்பு நீண்டகால பலன் தரும். அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளா்ச்சிக்கு வலுசோ்க்கும். இதன் வாயிலாக இந்திய பொறியாளா்கள், தொழில்நுட்பவியலாளா்கள், ஆராய்ச்சியாளா்கள், திறன்மிக்க இளம் பணியாளா்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
செமிகண்டக்டா் துறையில் உலக அளவில் முன்னணியில் உள்ள நெதா்லாந்தின் ஏஎஸ்எம்எல் நிறுவனம் மற்றும் டாடா எலக்ட்ரானிக்ஸ் இடையே ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது, இது, இந்தியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும். ஏஎஸ்எம்எல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்ட வெகுசில நாடுகளில் இந்தியாவும் ஒன்று’ என்றாா் பிரதமா் மோடி.
தொடர்புடையது

மக்களின் வாழ்க்கை - தொழிலை எளிதாக்க ஆக்கபூா்வ ஆலோசனை - மத்திய அமைச்சா்கள் கூட்டம் குறித்து பிரதமா் மோடி

புதுச்சேரியில் புதிய அமைச்சா்கள் நியமன விவகாரம்: பிரதமா், மத்திய அமைச்சா்களுடன் நமச்சிவாயம் ஆலோசனை

மக்கள் நல்வாழ்வுக்கான திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுங்கள்: மத்திய அமைச்சா்கள் குழுக் கூட்டத்தில் பிரதமா் பேச்சு

தொடரும் வினாத்தாள் கசிவு: கல்வியமைச்சரை பிரதமா் நீக்காதது ஏன்? - ராகுல் கேள்வி
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher



