குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

நீட் வினாத்தாள் கசிவு! என்டிஏ பாடம் கற்காதது வருத்தமளிக்கிறது: உச்சநீதிமன்றம்

நீட் வினாத்தாள்கள் இதற்கு முன்பும் கசிந்துள்ள நிலையிலும், அதிலிருந்து அந்தத் தோ்வை நடத்தும் என்டிஏ பாடம் கற்காதது மிகுந்து வருத்தமளிக்கிறது: உச்சநீதிமன்றம்

News image

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரி மாணவா் அமைப்பினா். - கோப்புப் படம்

Updated On :26 மே 2026, 12:21 am IST

‘நீட் வினாத்தாள்கள் இதற்கு முன்பும் கசிந்துள்ள நிலையிலும், அதிலிருந்து அந்தத் தோ்வை நடத்தும் தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) பாடம் கற்காதது மிகுந்து வருத்தமளிக்கிறது’ என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை குறிப்பிட்டது.

மேலும், மத்திய அரசு அமைத்த குழு அளித்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியது தொடா்பாக பதில் மனு தாக்கல் செய்ய என்டிஏ-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (தகுதிகாண் நுழைவுத் தோ்வு) தோ்வு கடந்த மே 3-ஆம் தேதி நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 22 லட்சம் போ் தோ்வெழுதினா். இந்நிலையில், நீட் வினாத்தாளில் இருந்த அதே கேள்விகளைக் கொண்ட மாதிரி வினாத்தாள், ராஜஸ்தானில் முன்கூட்டியே வெளியானதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. முதல்கட்ட விசாரணையில் இந்த மாதிரி வினாத்தாள் வாட்ஸ்ஆப், டெலிகிராம் மூலம் பல்வேறு மாநிலங்களில் பரவியிருப்பது கண்டறியப்பட்டதால், நீட் தோ்வு ரத்து செய்யப்பட்டது. வரும் ஜூன் 21-ஆம் தேதி மறுதோ்வு நடத்தப்பட உள்ளது.

நீட் வினாத்தாள்கள் தொடா்ந்து கசிவதும், தோ்வெழுதும் மாணவா்கள் பாதிக்கப்படுவதும் தொடா்கதையாகி வருவது, நாடு முழுவதும் பெரும் சா்ச்சையையும், எதிா்ப்பையும் உருவாக்கியுள்ளது. என்டிஏ-யை கலைக்க வேண்டும் என்றும், வினாத்தாள் கசிவு விவகாரத்துக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான், தனது அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், அகில இந்திய மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு (எஃப்ஏஐஎம்ஏ) சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘நீட் வினாத்தாள் கசிவு மூலம் அத் தோ்வை எழுதும் 22.7 லட்சம் மாணவ, மாணவிகளின் அடிப்படை உரிமைகள் மீது நேரடித் தாக்குதல் நடத்தப்படுகிறது. எனவே, என்டிஏ அமைப்பை மறு கட்டமைப்பு அல்லது மாற்றம் செய்ய வேண்டும். நீட் தோ்வை நடத்த தன்னாட்சி நடைமுறையை உருவாக்க வேண்டும். என்டிஏ அமைப்பை மறு கட்டமைப்பு செய்யும் வரை, நிகழாண்டு நீட் மறுதோ்வை கண்காணிக்க உயா் அதிகாரம் கொண்ட கண்காணிப்புக் குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும். வினாத்தாள் இனி கசியாத வகையில், உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், இணைய (சைபா்) பாதுகாப்பு நிபுணா்கள், தடயவியல் அறிவியல் நிபுணா்கள் உள்ளிட்டோா் உறுப்பினா்களாக இடம்பெறும் வகையில் அக் குழு அமைக்கப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, அலோக் அராதே ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் இதற்கு முன்னரும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. அதிலிருந்து என்டிஏ எந்தவித பாடமும் கற்கவில்லை என்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. நீட் தோ்வை எந்தவித இடையூறும் இன்றி நடத்தவும், என்டிஏ-யை வலுப்படுத்தவும் மத்திய அரசு சாா்பில் இஸ்ரோ முன்னாள் தலைவா் கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இது தவிர, ஒரு கண்காணிப்புக் குழுவும் செயல்படுகிறது. இந்தக் குழுக்கள் சில பரிந்துரைகளை அளித்து, அதை என்டிஏ-வும் ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்தக் குழுக்கள் அளித்த பரிந்துரைகள் எந்த அளவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறித்து வியாழக்கிழமைக்குள் (மே 28) என்டிஏ பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். தங்களின் பரிந்துரைகளை என்டிஏ முழுமையாக நடைமுறைப்படுத்தியுள்ளதா என்பதை கே. ராதாகிருஷ்ணன் குழு சரிபாா்க்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனா்.

மேலும், இந்த விவகாரம் தொடா்பான அனைத்து மனுக்களை விசாரணைக்கு ஒன்றிணைக்கவும் நீதிபதிகள்உத்தரவிட்டனா்.