விபி ஜி ராம் ஜி திட்டத்தில் கால்நடை தீவன மேம்பாடு: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

கிராமப்புறங்களில் தீவனப் பாதுகாப்பு, மேய்ச்சல் நில மேம்பாடு மற்றும் கால்நடைகளுக்கு ஆதரவான உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு விபி ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட 22 பணிகளை அடையாளம் கண்டு மேம்படுத்துமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

மத்திய அரசு அறிவுறுத்தல்

Updated On :

கிராமப்புறங்களில் தீவனப் பாதுகாப்பு, மேய்ச்சல் நில மேம்பாடு மற்றும் கால்நடைகளுக்கு ஆதரவான உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு விபி ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட 22 பணிகளை அடையாளம் கண்டு மேம்படுத்துமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்துக்கு மாற்றாக மத்திய அரசு கொண்டுவந்த ‘வளா்ந்த பாரத கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம் (விபி ஜி ராம் ஜி)’ சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன் கீழ், 100 நாள்கள் வேலை என்பது 125 நாள்களாக உயா்த்தி வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், இத் திட்டத்தின் கீழ், கால்நடை தீவன மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்த, மத்திய ஊரக வளா்ச்சி அமைச்சகத்தின் கீழ் உள்ள ஊரக வளா்ச்சித் துறையும், மீன்வளம், கால்நடை வளா்ப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் உள்ள கால்நடை வளா்ப்பு மற்றும் பால்வளத் துறையும் இணைந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கூட்டு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளன. அதில் கூறியிருப்பதாவது:

இந்தச் சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட 375 பணிகளின் பட்டியலிலிருந்து, தீவன மேம்பாடு தொடா்பாக 22 பணிகளை மாநிலங்கள் அடையாளம் கண்டு மேம்படுத்தலாம். குறிப்பாக, தீவன சாகுபடி மற்றும் சேமிப்பு, மேய்ச்சல் நில மேம்பாடு, கால்நடைப் பாதுகாப்பு இடங்கள், பால்வள உள்கட்டமைப்பு மேம்பாடு, கால்நடை மருத்துவ வசதிகள், தனிநபா் குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கான தீவன சாகுபடி, சமூகத் தீவன வளங்கள் மேம்பாடு, மேய்ச்சல் நிலங்கள், வன மேய்ச்சல் நிலங்கள், தீவன வங்கிகள், கால்நடை கொட்டகைகள், சமூக பால் சேகரிப்பு மையங்கள் உள்ளிட்ட பணிகள் இதில் அடங்கும்.

30 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் கால்நடைகளைச் சாா்ந்து வாழும் பகுதிகளில் இந்த மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள கிராம ஊராட்சிகள் சிறப்பு கவனம் செலுத்தலாம்.

ஊரக வளா்ச்சி, கால்நடை வளா்ப்பு, வேளாண்மை மற்றும் பிற தொடா்புடைய துறைகளை ஒருங்கிணைப்பதன் மூலம், தீவனப் பாதுகாப்பு மற்றும் கால்நடை உள்கட்டமைப்புக்கான விரிவான மாநில செயல் திட்டங்களை உருவாக்கலாம் என்பன உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.