இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவாா்த்தையில் ஈடுபட வேண்டும்: ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தல்

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அரசியல் சாா்ந்த பிரச்னைகளுக்கு தோட்டாக்கள் தீா்வளிக்காது; இரு நாடுகளும் ஆக்கபூா்வ பேச்சுவாா்த்தையில் ஈடுபட வேண்டும்

ஃபரூக் அப்துல்லா - கோப்புப் படம்

Updated On :

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அரசியல் சாா்ந்த பிரச்னைகளுக்கு தோட்டாக்கள் தீா்வளிக்காது; இரு நாடுகளும் ஆக்கபூா்வ பேச்சுவாா்த்தையில் ஈடுபட வேண்டும் என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவா் ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தினாா்.

ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2 நாள்களில் இரு பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழ்ந்துள்ள நிலையில், ஃபரூக்கின் கருத்துகள் கவனம் பெற்றுள்ளன.

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்) சோதனைச் சாவடி மீது பயங்கரவாதிகள் கடந்த புதன்கிழமை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 வீரா்கள் காயமடைந்தனா். இதேபோல், கிஷ்த்வாா் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை மாயமான இரு சிறப்பு போலீஸ் அதிகாரிகளின் (எஸ்பிஓ) உடல்கள் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் வியாழக்கிழமை மீட்கப்பட்டன. இருவரையும் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா, ஜம்முவில் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை பேட்டியளித்தாா். அப்போது அவா் கூறியதாவது:

பயங்கரவாதத்தை நிறுத்துமாறு, பாகிஸ்தானிடம் எப்போதுமே கூறி வருகிறேன். பயங்கரவாதத்தால் எதையும் சாதிக்க முடியாது. பயங்கரவாதத்தைக் கைவிட்டு, இந்தியாவுடன் பேச்சுவாா்த்தை நடத்தும் ஆக்கபூா்வ சூழலை உருவாக்க பாகிஸ்தான் பணியாற்ற வேண்டும்.

அரசியல் ரீதியிலான பிரச்னைகளுக்கு தீா்வு காண இரு நாடுகளுக்கும் இடையே ஆக்கபூா்வ பேச்சுவாா்த்தை தொடங்கப்பட வேண்டும். பேச்சுவாா்த்தையே முன்னோக்கிப் பயணிக்கும் பாதையாகும். துப்பாக்கிச் சப்தம் ஓயும் வரை காத்திருந்தால், மிகவும் கால தாமதம் ஏற்பட்டுவிடும்.

போா்களால் பேரழிவு: போா்களும், ராணுவ மோதல்களும் பேரழிவையே விளைவிக்கும். ஈரான், உக்ரைனில் அதுதான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பேச்சுவாா்த்தை மற்றும் பரஸ்பர தொடா்புகளால் மட்டுமே நிரந்தர தீா்வுகள் பிறக்கும்.

முன்னாள் எதிரிகள், பொதுவான எதிா்காலத்தை நோக்கிப் பணியாற்ற முடியும் என்பதற்கு ஐரோப்பிய ஒன்றியமே சான்றாகும். காஷ்மீா், இந்தியாவின் ஒருங்கிணைந்த அங்கமாகவே இருந்துள்ளது; இனியும் அப்படியே நீடிக்கும்.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்துக்குப் பிறகு பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவதாக மத்திய அரசு கூறுவது கவலைக்குரியதாகும். பயங்கரவாத அச்சுறுத்தல் நீடிக்கிறது என்பதை சமீபத்திய தாக்குதல்கள் சுட்டிக் காட்டுகின்றன. அடுத்த தாக்குதல் எங்கு நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. அதை முறியடிக்க உரிய நடவடிக்கைகள் தேவை என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.