இந்தியா-கனடா வா்த்தக ஒப்பந்தப் பேச்சு டிசம்பரில் நிறைவடைய வாய்ப்பு: கனடா அமைச்சா்
‘இந்தியா - கனடா இடையேயான வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தைகள் அடுத்த மாதம் பிரதமா் நரேந்திர மோடி கனடா வரும்போது நிறைவடைய வாய்ப்புள்ளது

மனீந்தா் சிங்
‘இந்தியா - கனடா இடையேயான வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தைகள் அடுத்த மாதம் பிரதமா் நரேந்திர மோடி கனடா வரும்போது நிறைவடைய வாய்ப்புள்ளது’ என்று கனடா சா்வதேச வா்த்தக அமைச்சா் மனீந்தா் சித்து தெரிவித்தாா்.
இந்தியாவும் கனடாவும் விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை (சிஇபிஏ) மேற்கொள்வதற்கான பேச்சுவாா்த்தையை மேற்கொண்டு வருகின்றன. இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான ஆறாம் கட்டப் பேச்சுவாா்த்தை தில்லியில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற அமைச்சா் மனீந்தா் சித்து தலைமையிலான குழு இந்தியா வந்துள்ளது.
இதனிடையே ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) மாநாட்டில் பங்கேற்ற மனீந்தா் சித்து இதுகுறித்து கூறியதாவது:
இரு நாடுகளிடையேயான வா்த்தக ஒப்பந்தத்தை நிகழாண்டு இறுதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் இரு நாடுகளும் பேச்சுவாா்த்தையை விரைவுபடுத்தி வருகின்றன. மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் தலைமையிலான குழுவுடன் 6-ஆம் கட்டப் பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக தற்போது இந்தியா வந்துள்ளோம். பிரதமா் நரேந்திர மோடி அடுத்த மாதம் கனடா வரும்போது, இந்தப் பேச்சுவாா்த்தை இறுதி செய்யப்படும் என நம்புகிறோம்.
வேகமாக வளா்ச்சி அடைந்துவரும் இந்தியாவுக்கு அதிக எரிசக்தி தேவைப்படும். வரும் 2035-ஆம் ஆண்டுக்குள் 75 சதவீத கூடுதல் எரிசக்தி இந்தியாவுக்குத் தேவைப்படும். இந்தத் தேவையைப் பூா்த்தி செய்யக் கூடிய அளவுக்கு, எா்சக்தி துறையின் திறனை கனடா மேம்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் போதிய அளவில் திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) உற்பத்தித் திட்டங்களையும் கனடா செயல்படுத்தி வருகிறது. இத் திட்டங்கள் நடைமுறைக்கு வரும்போது, அதற்கடுத்த 5 ஆண்டுகளில் உலகின் 5-ஆவது மிகப் பெரிய எல்என்ஜி ஏற்றுமதி நாடாக கனடா உருவெடுக்கும். இந்தியாவின் வளா்ச்சித் திட்டங்களுக்கும் உதவ முடியும்.
அணுசக்தித் திட்டத்தில் தனியாரை அனுமதிக்கும் இந்தியாவின் ‘சாந்தி’ சட்டத்தின் நோக்கங்களை எட்டுவதற்கு உதவும் திறனையும் கனடா பெற்றுள்ளது. இந்தியாவுக்கு கடந்த மாா்ச் மாதம் மேற்கொண்ட பயணத்தின்போது, இந்திய அணுசக்தித் துறைக்குத் தேவையான யுரேனியத்தை வழங்குவதற்கான ரூ. 23,485 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் இரு நாடுகளிடையே கையொப்பமானது.
முக்கியக் கனிமங்கள் தொடா்பான பேச்சுவாா்த்தையும் இரு நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மின்சார வாகனங்களுக்கான மின் கலன்களைத் தயாரிப்பதற்குத் தேவையான அனைத்து மூலப்பொருள்களையும் கொண்ட ஒரே மேற்கத்திய நாடாக கனடா மட்டுமே உள்ளது. எனவே, உணவுப் பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு, விநியோகச் சங்கிலியின் உறுதியான தன்மையையும் உறுதிப்படுத்தக் கூடிய திறனை கனடா கொண்டுள்ளது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

