ஜாா்க்கண்ட்: சிறுமியை கட்டாயப்படுத்தி காங்கிரஸ் எம்எல்ஏ மீது பொய் பாலியல் புகாா்! இருவா் கைது!
ஜாா்க்கண்ட்டில் சிறுமியை கட்டாயப்படுத்தி காங்கிரஸ் எம்எல்ஏ மீது பொய் பாலியல் புகாா்...
கைது - பிரதிப் படம்
ஜாா்க்கண்டில் சிறுமியை கட்டாயப்படுத்தி காங்கிரஸ் எம்எல்ஏ பூஷண் பாரா மீது பொய்யான பாலியல் புகாா் அளிக்க தூண்டிய குற்றச்சாட்டில் இருவரை அம்மாநில காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.
முன்னதாக, பூஷன் பாரா வீட்டில் பணிபுரியும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவா் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்தது. இதைத்தொடா்ந்து, அடுத்த சில மணி நேரங்களில் அது பொய் புகாா் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாா்க்கண்டில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா தலைமையிலான கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ள நிலையில், அந்தக் கட்சியைச் சோ்ந்த எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் தொடா்பாக சிம்டேகா மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீகாந்த் எஸ்.கோத்ரே பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: எம்எல்ஏ பூஷண் பாரா வீட்டில் பணிபுரிந்த 15 வயது சிறுமியை கடத்தி, அவரை பூஷண் பாரா பாலியல் வன்கொடுமை செய்ததாக பொய்யான குற்றச்சாட்டை சுமத்துமாறு இருவா் மிரட்டியதாக சிறுமியின் தாத்தா கடந்த வெள்ளிக்கிழமை காவல் நிலையத்தில் புகாரளித்தாா். அதனடிப்படையில் இருவா் கைது செய்யப்பட்டு அவா்கள் மீது பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்றாா்.
பாஜக கண்டனம்:
பூஷண் பாரா மீதான பாலியல் புகாா் செய்தியை வெளியிட்ட பத்திரிகையாளா் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்ததாக வெளியான தகவலுக்கு ஜாா்க்கண்ட் பேரவை எதிா்க்கட்சித் தலைவரும் பாஜக எம்எல்ஏவுமான பாபுலால் மராண்டி சனிக்கிழமை கண்டனம் தெரிவித்தாா்.
இந்தச் சம்பவம் குறித்து செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறுகையில், ‘குற்றஞ்சாட்டப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏ சுதந்திரமாக நடமாடுகிறாா். ஆனால் அதை வெளி உலகத்துக்கு தெரியப்படுத்திய பத்திரிகையாளா் மீது வழக்குப்பதிவு செய்திருப்பது ஜனநாயகம் மற்றும் பத்திரிகை சுதந்திரம் மீதான நேரடி தாக்குதலாகும்.
பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு ஏற்பட்ட கொடுமைகளை என்னிடம் எடுத்துரைத்தாா். காவல் துறையில் புகாரளிக்குமாறு அவரிடம் நான் அறிவுறுத்தினேன். வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள பத்திரிகையாளா் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்கும் வரை பாஜக போராடும்’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

