உயிருக்கு அச்சுறுத்தலால் இந்தியாவை விட்டு வெளியேறினேன்! லலித் மோடி விளக்கம்!

பொய்யான செய்திகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக லலித் மோடி எச்சரிக்கை..

lalith modi

லலித் மோடி - TNIE

Updated On :

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) முன்னாள் ஆணையர் லலித் மோடி, சட்ட நடவடிக்கைகளிலிருந்து தப்பிப்பதற்காக இந்தியாவை விட்டு வெளியேறினார் என்ற கருத்துகளை மறுத்துள்ளார். தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருந்ததாலேயே நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்ததாக அவர் கூறினார்.

இதுதொடர்பாக லலித் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

எனக்கு வழங்கப்பட்டிருந்த காவல்துறை பாதுகாப்பு, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திரும்பப் பெறப்பட்ட மூன்று நாள்களுக்குப் பிறகு, என் உயிருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் காரணமாகவே நான் 2010-ல் இந்தியாவை விட்டு வெளியேறினேன். இந்தியாவை விட்டு வெளியேறிய சமயத்தில், தனக்கு எதிராக எந்தவொரு முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்படவில்லை.

மத்திய முகமைகளிடமிருந்து எனக்கு விடுக்கப்பட்ட உயிருக்கு ஆபத்து குறித்த உளவுத் தகவல்களின் அடிப்படையிலேயே எனக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டதாக, மும்பை காவல் துறையின் கூடுதல் ஆணையர் அமலாக்கத் துறைக்கு எழுதிய கடிதத்தில் உறுதிப்படுத்தியுள்ளார் என்று மோடி தெரிவித்தார்.

அமலாக்கத் துறையின் கோரிக்கையின்பேரில் எனது இந்தியக் கடவுச்சீட்டு ரத்து செய்யப்பட்டபோது, ​​தில்லி உயர் நீதிமன்றம் அந்தச் சூழலை ஆய்வு செய்தது. 2014-ஆம் ஆண்டில் அந்த ரத்து நடவடிக்கையை நீக்கியதுடன் எனது கடவுச்சீட்டை மீண்டும் வழங்க உத்தரவிட்டது.

இந்தியா விட்டு வெளியேறியது குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிட்ட "பொய்யான மற்றும் அவதூறான செய்திகள்" தொடர்பாக, அந்த ஊடக நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக அவர் எச்சரித்தார்.

இந்திய ஊடகங்களில் ஒரு தரப்பினர், நான் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றதை, குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பி ஓடிய ஒருவரின் செயலாகவும், அவரை இந்தியா மீண்டும் அழைத்து வர முயற்சிப்பதாகவும் சித்தரித்துள்ளனர். இத்தகைய செய்திகளின் அடிப்படை நோக்கமே தவறானது.

எனக்குக் கிடைக்கக்கூடிய அனைத்து அதிகார வரம்புகளிலும், பொய்யான மற்றும் அவதூறான செய்திகளுக்கு எதிராகத் தகுந்த சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளேன்.

கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியாவின் எந்தவொரு நீதிமன்றத்திலும் தனக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இந்த விவகாரங்கள் தொடர்பாக எந்தவொரு இந்திய நீதிமன்றத்திலும் என் மீது குற்றவியல் வழக்குகள் எதுவும் தொடரப்படவில்லை.

பிசிசிஐ-யின் அப்போதைய செயலாளராக இருந்த என். சீனிவாசன் அளித்த புகாரின் பேரில், 2010-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் ஒரு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

எனக்கு எதிராக எந்தவிதமான குற்றவியல் அறிவிப்புகளோ, எச்சரிக்கை அறிவிப்புகளோ இல்லை என்பதை இன்டர்போல் எழுத்துப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

தனது பிரிட்டிஷ் குடியுரிமை குறித்து லலித் மோடி கூறுகையில்,

எனது சூழ்நிலைகளை முழுமையாக ஆய்வு செய்த பிறகு, பல ஆண்டுகளுக்கு முன்பே பிரிட்டிஷ் அதிகாரிகள் எனக்கு அங்குத் தங்குவதற்கான அனுமதியை வழங்கினர்.

அதன்பிறகு, நான் பிரிட்டிஷ் குடியுரிமைக்கு விண்ணப்பித்தேன். சட்டப்பூர்வ நடைமுறைகளை முழுமையாகப் பூர்த்தி செய்தேன். அதன் விளைவாக, 2016ல் உள்துறை அமைச்சகத்திடமிருந்து எனக்கு அனுமதி கிடைத்தது.

நான் ஒருபோதும் எந்தவிதமான சட்ட விலக்கீட்டையும் கோரவில்லை, எனக்கு அதன் தேவையும் இல்லை. எனது பிரிட்டிஷ் குடியுரிமை குறித்து நான் பெருமிதம் கொள்கிறேன். 16 ஆண்டுகளுக்கும் மேலாக எனது இல்லமாகத் திகழும் ஐக்கிய இராச்சியத்திற்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.