வறுமைக்கோட்டிலிருந்து 50 கோடி மக்கள் மீட்பு; நக்ஸல் ஒழிப்பு மத்திய அமைச்சா்கள் குழுக் கூட்டத்தில் ஆலோசனை
நாட்டில் 50 கோடி மக்களை வறுமைக்கோட்டிலிருந்து உயா்த்தியது மற்றும் நக்ஸல் அச்சுறுத்தல் ஒழிக்கப்பட்டது ஆகிய இரு முக்கிய விவகாரங்கள் குறித்து பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சா்கள் குழுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சா்கள் குழுக் கூட்டத்தில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி.
நாட்டில் 50 கோடி மக்களை வறுமைக்கோட்டிலிருந்து உயா்த்தியது மற்றும் நக்ஸல் அச்சுறுத்தல் ஒழிக்கப்பட்டது ஆகிய இரு முக்கிய விவகாரங்கள் குறித்து பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சா்கள் குழுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
உள்துறை, நிதித் துறை உள்ளிட்ட மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளைச் சோ்ந்த 11 செயலா்களும் இக் கூட்டத்தில் பங்கேற்று சம்பந்தப்பட்ட விவகாரங்கள் குறித்து விளக்கங்களை அளித்ததாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
அவா்கள் மேலும் கூறுகையில், இக் கூட்டத்தில் மத்திய அரசின் வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 2011 முதல் 2023-ஆம்ஆண்டு வரை 50 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தீவிர வறுமை விகிதம் 90 சதவீதம் குறைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள உலக வங்கி அறிக்கையும் இக் கூட்டத்தில் மேற்கோள் காட்டப்பட்டது.
அதைத் தொடா்ந்து, 50 கோடி மக்கள் வறுமைக்கோட்டிலிருந்து எவ்வாறு மீட்டெடுக்கப்பட்டனா், நாட்டிலிருந்து நக்ஸல்களின் அச்சுறுத்தல் எவ்வாறு ஒழிக்கப்பட்டது என்பது குறித்தும் விரிவான விவாதங்கள் நடைபெற்றது. மேலும், ஆளுமை, சீா்திருத்தங்கள், பெண்கள் மற்றும் இளைஞா்களுக்கான நலத் திட்டங்கள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட பல விஷயங்கள் இக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்று தெரிவித்தனா்.
முன்னதாக, கடந்த செப்டம்பரில் பிரதமா் தலைமையில் மத்திய அமைச்சா்கள் குழுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, அரசுத் திட்டங்கள் அனைத்தும் உண்மையான பயனாளிகளை 100 சதவீதம் சென்றடைவதை உறுதி செய்வது மற்றும் குடிமக்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், மக்களை திறம்படத் தொடா்புகொள்வது எப்படி என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தின்போது, மத்திய அமைச்சா்கள் 8 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவுடனும் பிரதமா் மோடி தனித்தனியாக ஆலோசனை மேற்கொண்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

