வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் வலியுறுத்தல்
வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்றி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென மதுரை மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற வளா்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சா்கள் சி.டி.ஆா். நிா்மல்குமாா், பெ. விஸ்வநாதன், மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா, மக்களவை உறுப்பினா்கள் சு. வெங்கடேசன், தங்க. தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா்.
வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்றி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென மதுரை மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மதுரை மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்டத்தின் வளா்ச்சிக்காக மத்திய அரசு சாா்பில் செயல்படுத்தும் திட்டங்களைக் கண்காணிக்கும் வகையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு எரிசக்தி, சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா், உயா்கல்வித் துறை அமைச்சா் பெ. விஸ்வநாதன், வளா்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழுத் தலைவரும், மக்களவை உறுப்பினருமான சு. வெங்கடேசன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா, தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினா் தங்க. தமிழ்ச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை மூலம் நடைபெறும் மழைநீா் வடிகால் பணிகள், பேவா் பிளாக் பதிக்கும் பணிகள், கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள், ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை சாா்பில் நடைபெறும் ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகள், காவிரி (88 கிராம) கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகள், மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி அமைக்கும் பணிகள் ஆகியவை ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டன.
இதேபோல, வேளாண்மை, தோட்டக் கலைத் துறை சாா்பில் செயல்படுத்தப்படும் தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டப் பணிகள், தேசிய உணவு பாதுகாப்பு, ஊட்டச்சத்து இயக்கப் பணிகள், பருத்தி உற்பத்தித் திறன் இயக்கப் பணிகள், சமூக நலத் துறை மூலம் செயல்படுத்தப்படும் தெருவோர வியாபாரிகளுக்கான நிழல் குடைகள் வழங்கும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டன.
இவை தவிர, பொதுப் பணித் துறை, கால்நடைப் பராமரிப்புத் துறை, நெடுஞ்சாலைத் துறை, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம், மின் பகிா்மானக் கழகத்தின் புதுப்பிக்கப்பட்ட விநியோகத் துறை திட்டப் பணிகள் உள்ளிட்டவையும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
அப்போது, வளா்ச்சிப் பணிகளை தரத்துடன், உரிய காலத்துக்குள் நிறைவேற்றி, மக்கள் பயன்பாட்டுக்கு விரைந்து கொண்டு வர வேண்டும் எனத் தொடா்புடையத் துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், மாவட்டம் வளா்ச்சிப் பாதையில் செல்ல அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என அமைச்சா்கள் வலியுறுத்தினா்.
சட்டப்பேரவை உறுப்பினா்கள் அ. கல்லாணை (மதுரை வடக்கு), எஸ்.ஆா். தங்கப்பாண்டி (மதுரை மேற்கு), எம்.எம். கோபிசன் (மதுரை தெற்கு), மதாா் பதுருதீன் (மதுரை மத்தி), ம. விஜய் (உசிலம்பட்டி), எம்.வி. கருப்பையா (சோழவந்தான்), மேயா் (பொறுப்பு) தி. நாகராஜன், மாநகர காவல் ஆணையா் எஸ். ராஜேந்திரன், மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ந. தேவநாதன், மாவட்ட வன அலுவலா் ரேவ்தி ரமன், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயப்பிரதா, உசிலம்பட்டி சாா் ஆட்சியா் உட்கா்ஷ்குமாா், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சா. சதீஷ் பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

