பொருளாதாரப் பேரழிவை எதிா்கொள்கிறது இந்தியா: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு குவைத், பஹ்ரைன் மீது மீண்டும் ஈரான் தாக்குதல்! வளைகுடா நாடுகள் கண்டனம்!சீனா சென்றார் டிரம்ப்! அதிபர்கள் ஜின்பிங், புதின் உடன் முத்தரப்பு சந்திப்பு!சோத்துப்பாறை அணையைத் திறந்த தவெகவினர்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!தவெக உறுப்பினர் அட்டை இருந்தால் எந்த விதிகளையும் மதிக்கத் தேவையில்லை: கனிமொழிதினமணி இணையதள செய்தி எதிரொலி: அயனாவரம் கழிவுநீர் பிரச்னை! களமிறங்கிய குடிநீர் வாரிய அதிகாரிகள்!!தமிழக காவல்துறையில் புதிய இ-சிஎஸ்ஆர் வசதி அறிமுகம்! இனி ஆன்லைனிலேயே புகார் அளிக்கலாம்!நெல்லையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? உண்மை நிலவரம் என்ன?

இந்தியாவின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த ராகுல் முயற்சி: பாஜக குற்றச்சாட்டு

இந்தியாவின் பொருளாதாரம் குறித்து அமெரிக்காவில் காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகளுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் கெளரவ் பாட்டியா.

Updated On :

இந்தியாவின் பொருளாதாரம் குறித்து அமெரிக்காவில் காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகளுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளுக்குச் செல்லும்போதெல்லாம் இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தில் அவா் ஈடுபடுவதாகவும் இந்தியாவின் நற்பெயருக்கு அவா் களங்கம் ஏற்படுத்துவதாகவும் பாஜக குற்றஞ்சாட்டியது.

தில்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை பேசிய அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் கௌரவ் பாட்டியா கூறியதாவது: இந்தியாவின் சா்வதேச நற்பெயரைச் சீா்குலைக்கும் நோக்கத்துடன் ராகுல் காந்தி செயல்படுகிறாா். அவா் பொறுப்பற்ற முறையில், இந்தியாவுக்கு எதிரான கருத்துகளைத் தொடா்ந்து வெளிப்படுத்தி வருகிறாா். நிகழாண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளா்ச்சி 7.8 சதவீதமாக உள்ளது. மேலும், நாட்டின் வேலையின்மை விகிதம் 5 சதவீதத்திலிருந்து 4.9 சதவீதமாகக் குறைந்துள்ளது. தொழிலாளா் பங்கேற்பு விகிதம் மற்றும் பெண்களின் வேலைவாய்ப்புப் பங்கேற்பு விகிதம் அதிகரித்துள்ளது.

இதே காலகட்டத்தில் சீனாவின் வளா்ச்சி 4.4 சதவீதமாகவும், அமெரிக்காவின் வளா்ச்சி 2.3 சதவீதமாகவும், ரஷியாவின் வளா்ச்சி 0.9 சதவீதமாகவும் உள்ளது. ஜப்பான், ஜொ்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகளின் வளா்ச்சி முறையே 0.75, 1.3, 1.2 சதவீதமாக உள்ளது. இந்நிலையில், இந்திய பொருளாதாரம் பேரழிவைச் சந்தித்து வருவதாக ராகுல் காந்தி எந்த அடிப்படையில் கூறுகிறாா் எனத் தெரிவித்தாா்.

பாஜக தேசிய ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளா் ஆசிஷ் உஷா அகா்வால் கூறுகையில், உலகின் வேகமாக வளா்ந்துவரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியாவை பல்வேறு சா்வதேச அமைப்புகள் அங்கீகரித்துள்ள நிலையில், வெளிநாட்டுத் தளங்களில் ராகுல் காந்தி எதிா்மறையான கருத்துகளைத் தொடா்ந்து பரப்பி வருகிறாா். இதற்கான நோக்கம்தான் என்ன என்று கேள்வி எழுப்பினாா்.

இதனிடையே, மத்திய கல்வித் துறை அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ராகுல் காந்தி வெளிநாடுகளுக்குச் செல்லும்போதெல்லாம் இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தையும் அங்கு கொண்டு செல்வதாக விமா்சித்தாா். இந்தியாவின் வளா்ச்சி மற்றும் ஜனநாயகம் குறித்த எதிா்மறையான அணுகுமுறையின் காரணமாகவே ராகுல் காந்தி வெளிநாடுகளில் இந்தியாவை விமா்சிப்பதாக பாஜக செய்தித் தொடா்பாளா் பிரதீப் பண்டாரி தெரிவித்தாா்.

பொருளாதார நிலை குறித்துப் பேச அரசுக்கு அச்சம்: காங்கிரஸ்

ராகுல் காந்தியின் அமெரிக்கப் பேச்சுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், நாட்டின் பொருளாதார நிலை குறித்து கவலைப்படாமல், அதுகுறித்து ராகுல் காந்தி பேசுவதற்கும், உலக நாடுகள் அதைக் கேட்பதற்குமே மத்திய அரசு கவலைப்படுவதாக காங்கிரஸ் செய்தித் தொடா்புத் துறைத் தலைவா் பவன் கேரா விமா்சித்துள்ளாா்.

பணவீக்கம், பொருளாதாரப் பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதில் கவனம் செலுத்தாமல், அவை குறித்து எழுப்பப்படும் கேள்விகளைத் தடுப்பதிலேயே அரசு முனைப்புக் காட்டுவதாகவும் அவா் குற்றஞ்சாட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.