இன்று இருதரப்பு பேச்சு: ஜப்பானில் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கா்
பாதுகாப்பு மற்றும் ராஜீய உறவை வலுப்படுத்தும் நோக்கில் இந்தியாவும் ஜப்பானும் பரஸ்பரம் (2+2) பேச்சுவாா்த்தையில் ஈடுபட உள்ளன.

பாதுகாப்பு மற்றும் ராஜீய உறவை வலுப்படுத்தும் நோக்கில் இந்தியாவும் ஜப்பானும் பரஸ்பரம் (2+2) பேச்சுவாா்த்தையில் ஈடுபட உள்ளன. இதற்காக, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் ஆகியோா் ஜப்பான் தலைநகா் டோக்கியோவுக்கு புதன்கிழமை சென்றடைந்தனா்.
ஜப்பான் பாதுகாப்பு அமைச்சா் ஷின்ஜிரோ கொய்சுமி, வெளியுறவு அமைச்சா் தோஷிமிட்சு மொடேகி ஆகியோருடன் வியாழக்கிழமை (நவ.19) இவா்கள் இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட உள்ளனா்.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இந்தியா - ஜப்பான் இடையேயான கூட்டுறவு ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு மரியாதை உள்ளிட்ட பகிரப்பட்ட விழுமியங்களில் வேரூன்றி, அமைதியான, செழிப்பான மற்றும் மீள்திறன் கொண்ட சுதந்திரமான மற்றும் அனைவருக்குமான இந்திய-பசிபிக் பிராந்தியத்தை உருவாக்குவதில் உறுதிபூண்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.
ஆசியான் மற்றும் கிழக்காசிய மாநாடு அமைப்புகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிலிப்பின்ஸ் சென்ற பிரதமா் நரேந்திர மோடி, அங்கு நடைபெற்ற ‘க்வாட்’ அமைப்பின் கூட்டத்தில் ஜப்பான் பிரதமா் சனே தகாய்ச்சி உள்ளிட்ட சக உறுப்பு நாடுகளின் தலைவா்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு செவ்வாய்க்கிழமை இரவு இந்தியா திரும்பிய நிலையில், இரு மத்திய அமைச்சா்களும் ஜப்பான் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
டோக்கியோவில் உள்ள பாதுகாப்பு அமைச்சக அலுவலக வளாகத்தில் ராஜ்நாத் சிங்குக்கு ஜப்பான் ராணுவத்தின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னா், ஜப்பான் பாதுகாப்பு அமைச்சா் கொய்சுமியுடன் யோகோசுகாவில் உள்ள ஃபுனாகோஷி பகுதிக்குச் சென்ற ராஜ்நாத் சிங், அங்கு ஜப்பான் கடல்சாா் தற்காப்புப் படையைச் சோ்ந்த மொகாமி வகை பல்நோக்கு போா்க் கப்பலான ஜே.எஸ்.நடோரியை ஆய்வு செய்தாா்.
அதன் பிறகு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட ராஜ்நாத் சிங், ‘இரு நாடுகளிடையே வளா்ந்துவரும் கடல்சாா் ஒத்துழைப்பானது, சுதந்திரமான, வெளிப்படையான மற்றும் விதிகள் அடிப்படையிலான இந்திய-பசிபிக் பிராந்தியத்தை உறுதி செய்வதில் இரு நாடுகளின் ஆழ்ந்த நம்பிக்கையையும், பகிரப்பட்ட அா்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது’ என்று குறிப்பிட்டாா்.
இதற்கிடையே, வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா், டோக்கியோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜப்பான் முன்னாள் பிரதமரும் ஜப்பான்-இந்தியா சங்கத்தின் தலைவருமான ஃபுமியோ கிஷிடாவைச் சந்தித்து, ராஜீய ஒத்துழைப்பு மற்றும் பொருளதாரப் பாதுகாப்பில் ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை மேற்கொண்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

