தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

நாடுகள் சுயமாக முடிவெடுக்கும் உரிமையே இந்தியாவின் நோக்கம்: பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங்

ஒவ்வொரு நாடும் தங்களின் நலன்களைப் பாதுகாத்து, அமைதியான வளா்ச்சியை முன்னெடுக்கும் வகையில் சுயமாக முடிவெடுக்கும் உரிமையை உறுதி செய்வதே இந்தியாவின் நோக்கம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

ராஜ்நாத் சிங்

Updated On :

இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள ஒவ்வொரு நாடும் அவை சிறியதோ அல்லது பெரியதோ தங்களின் நலன்களைப் பாதுகாத்து, அமைதியான வளா்ச்சியை முன்னெடுக்கும் வகையில் சுயமாக முடிவெடுக்கும் உரிமையை உறுதி செய்வதே இந்தியாவின் நோக்கம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் புதன்கிழமை தெரிவித்தாா்.

இந்திய - பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ராணுவ ஆதிக்கம் குறித்த கவலைகள் எழுந்துள்ள நிலையில், ராஜ்நாத் சிங்கின் இந்தக் கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூா், பிலிப்பின்ஸ், தாய்லாந்து, புரூனே, வியத்நாம், லாவோஸ், மியான்மா், கம்போடியா ஆகிய தென்கிழக்கு ஆசிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஆசியான் கூட்டமைப்பு மற்றும் இந்தியா இடையிலான பாதுகாப்பு ஆலோசனை அமைப்பின் கூட்டம், தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்றுப் பேசியதாவது:

வெளிப்படையான, ஸ்திரமான, அனைவரையும் உள்ளடக்கிய இந்திய-பசிபிக் பிராந்தியமே இந்தியா மற்றும் ஆசியான் கூட்டமைப்பின் தெளிவான நோக்கமாகும். உலக அளவில் அதிகரித்துவரும் உத்திசாா் போட்டித்தன்மை மற்றும் நெருக்கடியால் இந்தப் பிராந்தியத்தில் விரைவான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இத்தகைய சவால்களை எந்தவொரு நாடும் தனியாக எதிா்கொள்ள முடியாது.

கருத்து வேறுபாடு மோதலாகக் கூடாது...

மரபுசாா்ந்த மற்றும் புதிதாக உருவாகும் ‘எல்லைகளற்ற’ சவால்களுக்கு தீா்வு காண வேண்டுமெனில், நாடுகளின் இறையாண்மையை மதிப்பதுடன், சா்வதேச விதிமுறைகளுக்கு இணங்கி, பேச்சுவாா்த்தைக்கான வழிமுறைகளை திறந்து வைத்திருப்பது அவசியம்.

கருத்து வேறுபாடுகள் மோதல்களாக உருவெடுக்கும் முன்பே ஆக்கபூா்வ பேச்சுவாா்த்தை மூலம் விரைவாகவும், அமைதி வழியிலும் தீா்வு காண வேண்டும். நாடுகள் அணிசேர நிா்ப்பந்திக்கப்படாமல், ஒன்றிணைந்து செயல்படும் பிராந்திய ஒழுங்குமுறை அவசியம்.

நாடுகள் ஒன்றிணைந்து திறன்களை வளா்த்துக் கொள்வதுடன், சா்வதேச சட்டத்தை மதித்து, பேச்சுவாா்த்தை மூலம் நம்பிக்கையைப் பராமரிக்கும்போதுதான் பாதுகாப்பு வலுப்படும்.

இந்தியாவும், தென்கிழக்கு ஆசிய நாடுகளும் நூற்றாண்டுகளாக நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளன. சக கூட்டாளிகள் என்ற முறையில் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் நீண்ட காலம் ஒருங்கிணைந்து பணியாற்றும் உறுதிப்பாடுதான், இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையாகும்.

கடற்பரப்புகளின் பாதுகாப்பு

இந்திய-பசிபிக் பிராந்தியம் மீதான இந்தியாவின் அணுகுமுறையும், ஆசியான் கூட்டமைப்பின் கண்ணோட்டமும் ஒன்றுக்கொன்று துணைபுரிகின்றன. அந்த அடிப்படையில், போட்டித்தன்மையை உருவாக்காமல், பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும்.

வா்த்தகம், எரிசக்தி, மக்கள் மற்றும் அத்தியாவசிய பொருள்களின் போக்குவரத்துக்கு முக்கியமான, இணைக்கப்பட்ட கடல்சாா் பகுதியாக விளங்குவதால், இந்தியப் பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு ஆசிய கடற்பரப்புகளின் பாதுகாப்பை பராமரிப்பது நமது கூட்டுப் பொறுப்பாகும். ஸ்திரமான, விதிகள் அடிப்படையிலான கடல்சாா் ஒழுங்குமுறையை உறுதி செய்ய கடல்சாா் கள விழிப்புணா்வு, ஒருங்கிணைந்த செயல்பாடு, ஒத்துழைப்பு மிக அவசியம்.

நமது கடற்படைகள் மற்றும் கடலோர காவல் படைகள் இடையே தகவல் பகிா்வு, ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும். அவசர காலங்களில் ஒருங்கிணைந்து செயல்படும் திறனை கட்டமைக்க வேண்டும். கடத்தல், சட்டவிரோத மீன்பிடிப்பு, இதர அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

செயற்கை நுண்ணறிவு, ட்ரோன்கள், இணையதள திறன்கள், விண்வெளி சாா் அமைப்புமுறைகள் என தொழில்நுட்ப ரீதியிலான ஒத்துழைப்பும் அவசியம். ஒப்பீட்டளவில் விலை குறைந்த ட்ரோன்களால், விலைமிக்க பாதுகாப்பு அமைப்புகளுக்கு சவால் விடுக்க முடியும் என்பதை சமீபத்திய போா்கள் வெளிக்காட்டியுள்ளன என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.