வாகனங்களின் மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழ்களின் செல்லுபடியில் மாற்றம்
புதிய ‘பிஎஸ்-6 ’ ரக வாகனங்களுக்கான மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (பியுசி) செல்லுபடியாகும் காலத்தை நீட்டித்தும், பழைய வாகனங்களுக்கான கால அளவைக் குறைத்தும் மத்திய அரசு புதிய விதிகளை வெளியிட்டுள்ளது.

புதிய ‘பிஎஸ்-6 ’ ரக வாகனங்களுக்கான மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (பியுசி) செல்லுபடியாகும் காலத்தை நீட்டித்தும், பழைய வாகனங்களுக்கான கால அளவைக் குறைத்தும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் புதிய விதிகளை வெளியிட்டுள்ளது.
இந்தத் திருத்த விதிகள் கடந்த நவ. 13-இல் அரசிதழில் வெளியிடப்பட்டு, உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதற்கு முன்பு அனைத்து பிஎஸ்-6 மற்றும் பிஎஸ்-4 வாகனங்களுக்கும் ஓராண்டுக்கும், பிஎஸ்-1, பிஎஸ்-2, பிஎஸ்-3 வாகனங்களுக்கு 6 மாதங்களும் சான்றிதழ் செல்லுபடியாகும் நிலை இருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய விதிகளின்படி, 6 ஆண்டுகள் வரையிலான புதிய பிஎஸ்-6 தனிநபா் வாகனங்களுக்கு இனி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழைப் புதுப்பித்தால் போதுமானது. 6 முதல் 10 ஆண்டுகள் வரையிலான பிஎஸ்-6 தனிநபா் வாகனங்களுக்கு ஓராண்டும், 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களுக்கு 6 மாதங்களும் சான்றிதழ் செல்லுபடியாகும்.
இதேபோல், 6 ஆண்டுகள் வரையிலான பிஎஸ்-6 போக்குவரத்து வாகனங்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், 6 முதல் 10 ஆண்டுகள் வரையிலான வாகனங்களுக்கு ஓராண்டும், 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட போக்குவரத்து வாகனங்களுக்கு 6 மாதங்களுக்கு ஒருமுறையும் சான்றிதழைப் புதுப்பிக்க வேண்டும்.
அதேநேரம், பழைய மாசு கட்டுப்பாட்டு விதிகளின்படி தயாரிக்கப்பட்ட பிஎஸ்-4 வாகனங்களுக்கான சான்றிதழ் செல்லுபடியாகும் காலம் 6 மாதங்களாகவும், பிஎஸ்-1, பிஎஸ்-2 மற்றும் பிஎஸ்-3 ரக வாகனங்களுக்கு 3 மாதங்களாகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பு பெறப்பட்ட சான்றிதழ்களுக்கு, அவை அடுத்த முறை புதுப்பிக்கப்படும்போதே இப்புதிய கால அளவுகள் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

