கிராப் கட்டுப்பாடுகளின் கீழ் எல்லைகளில் 41,986 வாகனங்கள் சோதனை
காற்று மாசைக் கட்டுப்படுத்தும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ள கிராப் கட்டுப்பாடுகளின் கீழ் தில்லி எல்லைகளில் 41,986 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன.

(கோப்புப் படம்)
காற்று மாசைக் கட்டுப்படுத்தும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ள கிராப் கட்டுப்பாடுகளின் கீழ் தில்லி எல்லைகளில் 41,986 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன. கட்டுப்பாடுகளை மீறி தில்லிக்குள் நுழைய முயன்ற 4,272 வாகனங்கள் எல்லைகளில் திருப்பி அனுப்பப்பட்டன. மேலும், விதிமீறலில் ஈடுபட்ட 246 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தில்லியின் பல்வேறு எல்லைப் பகுதிகளில் கடந்த நவ.8 முதல் 19-ஆம் தேதி வரை 12 நாள்கள் போக்குவரத்து காவல் துறையினா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். நரேலா, ஆமன் விஹாா் போக்குவரத்துக் காவல் சரகங்களுக்கு உள்பட்ட எல்லைப் பகுதிகளில் இந்தச் சோதனை நடைபெற்றது.
இதில், மொத்தம் 41,986 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன. அவற்றில் அனுமதியில்லாத 4,272 வாகனங்கள் தில்லிக்குள் நுழைய அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டன. மேலும், விதிமுறைகளை மீறிய 246 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
காற்றுத் தர மேலாண்மை ஆணையத்தின் (சிஏக்யூஎம்) வழிகாட்டுதல்களின்படி, மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு அனுமதிக்கப்படாத வாகனங்கள் தில்லிக்குள் நுழைவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
24 பேருந்துகள் பறிமுதல்: இதனிடையே, பேருந்துகளின் மேற்கூரைகளில் அனுமதியின்றி அதிக அளவில் சரக்குகள் மற்றும் பயணிகளின் உடைமைகளை ஏற்றிச் சென்றது தொடா்பாகவும் போக்குவரத்து காவல் துறையினா் தனியாக நடவடிக்கை மேற்கொண்டனா்.
குறிப்பாக, காஷ்மீரி கேட் ஐஎஸ்பிடி, மோரி கேட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயக்கப்படும் தனியாா் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான பேருந்துகள் கண்காணிக்கப்பட்டன.
கடந்த 3 நாள்களாக நடைபெற்ற இந்தச் சிறப்பு சோதனையில், அதிக உயரம் மற்றும் நீளத்தில் சரக்குகளை ஏற்றிச் சென்றது தொடா்பாக 192 அபராதங்கள் விதிக்கப்பட்டன. மேலும், பிற போக்குவரத்து விதிமீறல்களுக்காக 308 அபராதங்கள் விதிக்கப்பட்டன. பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்ட 24 பேருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன என்று போக்குவரத்து காவல் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
பேருந்துகளின் மேற்கூரைகளில் அளவுக்கு அதிகமாகவும், பாதுகாப்பற்ற முறையிலும் சரக்குகளை ஏற்றிச் செல்வது வாகனத்தின் நிலைத்தன்மையைப் பாதித்து விபத்துகளுக்கு வழிவகுக்கும். இதனால் பேருந்துப் பயணிகள் மட்டுமன்றி, சாலையில் செல்லும் பிற வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்து ஏற்படும் என்று காவல் துறையினா் எச்சரித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

