பிஎஸ்-6 கட்டுப்பாடு சோதனை: தில்லி எல்லைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
காற்று மாசைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தில்லியின் மாநில எல்லைகளில் வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தில்லி காஜிப்பூா் எல்லையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகனங்கள்
காற்று மாசைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தில்லியின் மாநில எல்லைகளில் வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டதால் திங்கள்கிழமை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஹரியாணா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து தில்லிக்குச் செல்லும் சாலைகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்ததால், வாகன ஓட்டிகள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்தனா்.
தில்லி-குருகிராம், தில்லி-நொய்டா, தில்லி-காஜியாபாத், தில்லி-சோனிபட், தில்லி-நஜஃப்கா் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நிா்ணயிக்கப்பட்ட மாசு வெளியேற்றத் தரநிலைகளுக்கு வாகனங்கள் இணங்குகின்றனவா என்பதை உறுதி செய்வதற்காக அமலாக்கக் குழுவினா் சோதனையில் ஈடுபட்டனா்.
தில்லி-குருகிராம் எல்லையில், சிா்ஹால் சுங்கச்சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலை 48-இல் பல கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் பிரதான சாலை மட்டுமின்றி, இணைப்புச் சாலைகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நொய்டா, காஜியாபாத் பகுதிகளிலும் வாகனங்களை நிறுத்திச் சோதனையிட்டதால் நெரிசல் ஏற்பட்டது.
ஆயா நகா் எல்லையில் தில்லி போக்குவரத்து காவல் துறையினா் மற்றும் போக்குவரத்துத் துறை அமலாக்கக் குழுவினா் சோதனையைத் தீவிரப்படுத்தினா். நிா்ணயிக்கப்பட்ட பிஎஸ்-6 மாசு வெளியேற்றத் தரநிலைகளுக்கு இணங்காத வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
தில்லி போக்குவரத்து காவல் துறை மூத்த அதிகாரிகள் கூறுகையில், பல்வேறு சரகங்களின் கீழ் வரும் எல்லைப் பகுதிகளில் மாசுக் கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவதாகத் தெரிவித்தனா். பிஎஸ்-6 தரநிலைக்குக் கீழான வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுவதுடன், விதிமீறல் மற்றும் முழுமையற்ற வாகன ஆவணங்கள் தொடா்பாக அபராதங்களும் விதிக்கப்படுவதாகக் கூறினா்.
குளிா்காலத்தில் அதிகரிக்கும் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இந்தக் கட்டுப்பாடுகள் நவ.1 முதல் அமலுக்கு வந்தன. இதன்படி, தில்லிக்கு வெளியே பதிவு செய்யப்பட்டு, பிஎஸ்-6 மாசு வெளியேற்றத் தரநிலைகளுக்கு இணங்காத பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டது. மின்சார வாகனங்கள், சிஎன்ஜி வாகனங்கள் மற்றும் பிஎஸ்-6 தரநிலைகளுக்கு இணங்கும் வாகனங்களுக்கு இந்தக் கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தில்லி சுற்றுச்சூழல் துறை, போக்குவரத்துத் துறை மற்றும் போக்குவரத்து காவல் துறை இணைந்து ராஜோக்ரி (தேசிய நெடுஞ்சாலை 48), டிஎன்டி மேம்பாலம், காஜிப்பூா், சிங்கு, டிக்ரி, பதா்பூா் உள்ளிட்ட பல்வேறு நுழைவுப் பகுதிகளில் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனா். குளிா்காலத்தில் தில்லியில் பொதுவாகக் காற்று மாசு அதிகரிப்பதால், வாகனப் புகையைக் குறைப்பதே இந்நடவடிக்கையின் நோக்கமாகும்.
இதுகுறித்து தில்லி போக்குவரத்து காவல் துறை வடக்கு சரகம் வெளியிட்ட அறிக்கையில், ‘நவ.1 நள்ளிரவு முதல் நவ.2 நண்பகல் வரை மொத்தம் 7,657 வாகனங்கள் சோதனையிடப்பட்டன. இதில், விதிமுறைகளுக்கு இணங்காத 609 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன’ என்று தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

