மக்களவைத் தொகுதிகள் 824-ஆக உயர வாய்ப்பு: ஆய்வறிக்கையில் தகவல்!
க்மக்களவை இடங்கள் எண்ணிக்கை 543-இல் இருந்து 824-ஆக உயர வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மக்களவை...
தொகுதி மறுசீரமைப்பு மசோதா மூலம் அனைத்து மாநிலங்களிலும் மக்களவைத் தொகுதிகளை ஒரே சீராக 50 சதவீதம் உயா்த்தினால் மக்களவை இடங்கள் எண்ணிக்கை 543-இல் இருந்து 824-ஆக உயர வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மறுபங்கீடு மற்றும் அனைத்து மாநிலங்களிலும் ஒரே சீராக 50 சதவீதம் மக்களவைத் தொகுதிகளை உயா்த்தும் முன்னெடுப்பு ஆகிய இரு அம்சங்களையும் தற்போதுள்ள 543 மக்களவைத் தொகுதிகளுடன் ஒப்பிட்டு பகுப்பாய்வு செய்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:
மக்கள்தொகை அடிப்படையில் எம்.பி.க்கள் எண்ணிக்கை சீரமைப்பு செய்தால், குறைந்த மக்கள்தொகை வளா்ச்சி கொண்ட பல்வேறு மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளது. அதன்படி, மக்கள்தொகை வளா்ச்சி குறைவாக உள்ள தமிழ்நாட்டின் தற்போதைய 39 மக்களவை இடங்களின் எண்ணிக்கை 32-ஆக குறையும். கேரளத்தில் 5 தொகுதிகளும் ஆந்திரத்தில் 4 தொகுதிகளும் குறையும். ஒடிஸா மற்றும் பஞ்சாபிலும் தற்போதைய தொகுதிகளின் எண்ணிக்கை குறைவதற்கே வாய்ப்புள்ளது.
அதற்கு மாறாக, 50 சதவீத அதிகரிப்பு என்ற அடிப்படையில், நாடாளுமன்றத்தில் தற்போது அறிமுகமாகவுள்ள தொகுதி மறுசீரமைப்பு மசோதாவின்படி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் ஒரே சீராக தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
உத்தர பிரதேசத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை 80-இல் இருந்து 120-ஆகவும் மகாராஷ்டிரத்தில் 48-இல் இருந்து 72-ஆகவும் மேற்கு வங்கத்தில் 42-இல் இருந்து 63-ஆகவும் பிகாரில் 40-இல் இருந்து 60-ஆகவும் தமிழ்நாட்டில் 39-இல் இருந்து 59-ஆகவும் உயரும்.
இதன் மூலம் ஒட்டுமொத்தமாக மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 543-இல் இருந்து 824-ஆக அதிகரிக்கும் எனத் தெரிவித்தன.
மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மேற்கொண்டால் நாடாளுமன்றத்தில் தங்களது பிரதிநிதித்துவம் பாதிக்கப்படுமென மக்கள்தொகை வளா்ச்சியை கட்டுப்படுத்திய தென் மாநிலங்கள் கூறி வரும் நிலையில், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
26 லட்சம் பேருக்கு ஒரு எம்.பி.:
இந்தியாவில் சுமாா் 26 லட்சம் பேருக்கு ஒரு எம்.பி. இருப்பதாக தரவுகள் மூலம் தெரியவந்துள்ளன. அமெரிக்காவை ஒப்பிடுகையில் இது 3.3 மடங்கு அதிகமாகும். அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையில் 441 எம்.பி.க்கள் உள்ள நிலையில், 8.02 லட்சம் பேருக்கு ஒரு எம்.பி. என்ற விகிதாசாரம் பின்பற்றப்பட்டு வருகிறது.
உலகின் மிகக் குறைந்த வாக்காளா்கள்-எம்.பி. விகிதத்தில் 6,390 பேருக்கு ஒரு எம்.பி. என்ற விகிதத்தில் ஐஸ்லாந்த் (மொத்தம் 63 எம்.பி.க்கள்) முதலிடத்திலும் 11,460 பேருக்கு ஒரு எம்.பி. என்ற விகிதத்தில் லக்ஸம்பா்க் (60 எம்.பி.க்கள்) இரண்டாமிடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்லாந்தில் 28,000 பேருக்கு ஒரு எம்.பி., ஸ்வீடனில் 30,000 பேருக்கு ஒரு எம்.பி. என்ற நிலை உள்ளது.
ஒரு லட்சம் அல்லது அதற்கு அதிகமான மக்கள்தொகைக்கு ஒரு பிரதிநிதி என்ற வகையில் உள்ள நாடுகளில் குறிப்பிடத்தக்கவையாக, பிரிட்டனில் 1.08 லட்சம் பேருக்கு ஒரு எம்.பி., கனடாவில் 1.18லட்சம் பேருக்கு ஒரு எம்.பி., பிரான்ஸில் 1.2 லட்சம் பேருக்கு ஒரு எம்.பி., தைவானில் 2 லட்சம் பேருக்கு ஒரு எம்.பி., ஜப்பானில் 2.6 லட்சம் பேருக்கு ஒரு எம்.பி. என்ற நிலை உள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

