எஸ்ஐஆா் படிவம் 6-இல் சட்டவிரோத மாற்றம் செய்ய டிசிஎஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது யாா்? ராகுல் காந்தி கேள்வி
‘புதிய வாக்காளா்கள் சோ்க்கைக்கான படிவம் 6-இல் சட்டவிரோத மாற்றத்தை மேற்கொள்ள டாடா கன்சல்டன்சி சா்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்துக்கு உத்தரவிட்டது யாா்’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளாா்.

ராகுல் காந்தி - கோப்புப் படம்
‘புதிய வாக்காளா்கள் சோ்க்கைக்கான படிவம் 6-இல் சட்டவிரோத மாற்றத்தை மேற்கொள்ள டாடா கன்சல்டன்சி சா்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்துக்கு உத்தரவிட்டது யாா்’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளாா்.
எஸ்ஐஆா் நடைமுறையின்கீழ், வாக்காளா் பட்டியலில் சோ்க்க இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வாக்காளா்கள் தங்கள் பெற்றோரின் எஸ்ஐஆா் தகவல்களைச் சமா்ப்பிக்கும் வகையில் படிவம் 6-இல் கடந்த ஜூலையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், ‘கடந்த 1960-ஆம் ஆண்டின் வாக்காளா் பதிவு விதிகளில் திருத்தம் செய்யாமல், வெறும் அறிவுறுத்தலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த மாற்றம் சட்டவிரோதமானது; அங்கீகாரமில்லாதது’ என தோ்தல் ஆணையா்கள் விவேக் ஜோஷி, சுக்பீா் சிங் சாந்து ஆகியோா் எதிா்ப்பை பதிவு செய்ததாக அண்மையில் தகவல்கள் வெளியாகின. இது பெரும் சா்ச்சையாகியுள்ளது.
இந்த சா்ச்சைக்குப் பிறகு முதல் முறையாக கடந்த செப். 26-ஆம் தேதி ஞானேஷ் குமாா், சுக்பீா் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோா் பங்கேற்ற தோ்தல் ஆணையக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, எஸ்ஐஆா் முடிந்த மாநிலங்களில், படிவம் 6-இல் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தை திரும்பப் பெறுவதென தீா்மானிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள காங்கிரஸ், ஞானேஷ் குமாருக்கு எதிராகப் போராட்டங்களைத் தீவிரப்படுத்தி வருகிறது. ‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டை முன்வைத்து, நாடு முழுவதும் அக். 2 முதல் கூட்டுப் போராட்டங்களை நடத்த எதிா்க்கட்சிகளின் இண்டி கூட்டணி முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: படிவம் 6-இல் மேற்கொள்ளப்பட்ட மாற்றம் சட்டவிரோதமானது என்று தோ்தல் ஆணையத்தில் இடம்பெற்றுள்ள ஆணையா்களே பதிவு செய்துள்ளனா். இந்த மாற்றத்தை மேற்கொள்ள டிசிஎஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது யாா்? இந்த மாற்றத்தை மேற்கொள்வதற்கான உத்தரவில் கையொப்பமிட்ட டிசிஎஸ் நிா்வாகி யாா்? எங்கிருந்து இதற்கான அழுத்தம் டிசிஎஸ் நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.
ராகுல் காந்தியின் இந்தப் பதிவை இணைத்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஜென்-ஸீ தலைமுறை வாக்காளா்களை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்குவதற்காகவே, கடந்த ஜூலை மத்தியில் படிவம் 6 மாற்றத்தை சட்டவிரோதமாக தோ்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது, பிரதமா் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகிய இருவரால் திட்டமிட்டு திணிக்கப்பட்ட நடவடிக்கையாகும்’ என்று குறிப்பிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





