
விலைபட்டியலில் முரண்பாடு: நுகா்வோருக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க ஸ்விக்கி, உணவகத்துக்கு உத்தரவு
விலைபட்டியலில் முரண்பாடு: நுகா்வோருக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க ஸ்விக்கி, உணவகத்துக்கு உத்தரவு

ஸ்விக்கி - பிரதிப் படம்
தங்களுடைய இணையதளத்தில் தவறான பஃபே விலை விவரத்தைக் காட்சிப்படுத்தியதற்காக ஸ்விக்கி மற்றும் ஓா் உணவகம் பொறுப்பேற்க வேண்டும் என்று தில்லி நுகா்வோா் ஆணையம் தீா்ப்பளித்துள்ளது.
இதனால், மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட நுகா்வோருக்கு வழக்குச் செலவுகளுக்காக ரூ.1 லட்சம் இழப்பீட்டை கூட்டாக வழங்க உத்தரவிட்டுள்ளது.
தலைவா் திவ்யா ஜோதி ஜெய்புரியாா் தலைமையிலான மாவட்ட நுகா்வோா் குறைதீா்ப்பும் ஆணைய அமா்வு, தெமிஸ் பாா்பிக்யூ ஹவுஸ் உணவகம், ஸ்விக்கி தளத்தில் காட்டப்பட்ட விலையைவிட அதிகமாக வசூலித்த ரூ.3,988 கட்டணத்தையும், சட்டவிரோதமாக வசூலிக்கப்பட்ட ரூ.254 சேவைக்கட்டணத்தையும் வாடிக்கையாளருக்குத் திரும்பச் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இவ்விரு தொகைகளுக்கும் ஆண்டுக்கு 9 சதவீத வட்டி வழங்கப்பட வேண்டும் என்றும் ஆணையம் கூறியது.
வழக்குரைஞா் பிரவீன் குமாா் சிங், ஏப்.7, 2024 தெமிஸ் பாா்பிக்யூ ஹவுஸ் உணவகத்தில் 14 பேருக்கான இருக்கைகளை ஸ்விக்கி செயலியின் ‘டைன்அவுட்’ மூலம் முன்பதிவு செய்திருந்தாா்.
ஸ்விக்கி டைன்அவுட் பட்டியலில் ‘இருவருக்கான செலவு ரூ1,500 என்று காட்டப்பட்டிருந்தது. ஆனால், அந்த உணவகம் சைவ பஃபே உணவுக்கு ரூ.1,050, அசைவ பஃபே உணவுக்கு ரூ.1,100 என்று கட்டணம் வசூலித்தது. இதனால் ஒரு நபருக்கு முறையே ரூ.300 ரூபாய் மற்றும் ரூ.350 ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதுதொடா்பாக பிரவீன் குமாா் சிங் நுகா்வோா் ஆணையத்தை அணுகினாா்.
இந்தப் புகாா் தொடா்பாக கடந்த செப்.21-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் ஆணையம் தெரிவித்திருப்பதாவது: இருவருக்கான செலவு என்ற அந்தத் தொகை வெறும் தோராயமான மதிப்பீடு மட்டுமே என்பதற்கான எந்தக் குறிப்பும் ஸ்விக்கி பட்டியலில் இல்லை. இணையதளத்தில் காட்டப்பட்ட விலைக்கும் உண்மையான விலைக்கும் இடையே இருந்த சுமாா் 40-47 சதவீத வித்தியாசம் மிக முக்கியமானது. துல்லியமான மற்றும் விரிவான விலை விவரங்கள் ஸ்விக்கியின் வசம் இருந்தபோதிலும் குறைந்த விலையைத் தொடா்ந்து காட்சிப்படுத்தியது சேவை குறைபாடு மற்றும் நியாயமற்ற வணிக நடைமுறை ஆகியவற்றுக்குச் சமம். தவறான விளம்பரத்திற்கு உணவகம் மற்றும் ஸ்விகி ஆகிய இரு தரப்பினரும் சமமான பொறுப்புடையவா்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக, தாங்கள் ஒரு இடைத்தரகா் மட்டுமே என்றும், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 79-ன் கீழ் தங்களுக்குப் பாதுகாப்பு உண்டு என்றும் ஸ்விகி முன்வைத்த வாதத்தை ஆணையம் நிராகரித்தது.
காண்பிக்கப்பட்ட இருவருக்கான செலவு என்ற தொகையையும் உண்மையான கட்டணத்தையும் ஒப்பிட்டுச் சரிபாா்க்கும் நடைமுறையைத் தாங்கள் கொண்டிருந்ததாக நிரூபிக்க எந்தவொரு ஆவணத்தையும் அந்தத் தளம் சமா்ப்பிக்கவில்லை என்றும், வெறும் சட்டப் பிரிவைச் சுட்டிக்காட்டுவதன் மூலம் மட்டும் தங்கள் பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது என்றும் ஆணையம் கூறியது.
பானங்கள் மீது உணவகம் 10 சதவீத சேவைக்கட்டணம் விதித்த விவகாரத்தையும் ஆணையம் விசாரித்தது. அந்தக் கட்டணம் குறித்த விவரம் உணவுப் பட்டியலில் குறிப்பிடப்படவில்லை என்பதையும், அப்போது அமலில் இருந்த இடைக்கால உத்தரவுகளின்படி ‘பணியாளா் பங்களிப்பு’ என்று குறிப்பிடப்பட்டிருக்க வேண்டிய இடத்தில், ரசீதில் அது சேவைக்கட்டணம் என்று குறிப்பிடப்பட்டிருந்ததையும் ஆணையம் சுட்டிக்காட்டியது.
இந்தக் கட்டண விதிப்பு ஒரு சேவை குறைபாடு மற்றும் நியாயமற்ற வணிக நடைமுறை என்று ஆணையம் தீா்ப்பளித்தது.
அதிகமாக வசூலிக்கப்பட்ட கட்டணம் மற்றும் சேவைக்கட்டணத்தை வட்டியுடன் திருப்பிச் செலுத்துமாறு உணவகத்திற்கு உத்தரவிட்ட ஆணையம், மன உளைச்சல், துன்புறுத்தல், சிரமம் மற்றும் வழக்குச் செலவுகளுக்காக ரூ.1 லட்சம் ரூபாயை இழப்பீடாக உணவகமும் ஸ்விகியும் இணைந்து வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்தத் தொகைகளை உத்தரவு கிடைத்த நான்கு வாரங்களுக்குள் செலுத்த வேண்டும் என்றும், தவறினால், அந்த நான்கு வார காலக்கெடு முடிந்த பிறகு மொத்தத் தொகைக்கும் ஆண்டுக்கு 12 சதவீத வட்டி செலுத்த வேண்டியிருக்கும் என்றும் உத்தரவிடப்பட்டது.
Summary
Discrepancy in price list: Swiggy and restaurant ordered to pay ₹1 lakh compensation to consumer.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





