மறுசுழற்சி எனும் தங்கச் சுரங்கம்!

மக்கள்தொகை கட்டுப்பாடு விஷயத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ஆண்டுக்கு 11 லட்சம் குழந்தைகள் தமிழகத்தில் பிறந்த நிலையில், இப்போது பத்து லட்சத்துக்கும் குறைவாகப் பெறும் மாநிலமாக மாறியுள்ளது.

மறுசுழற்சி

Published On :

பெ. நா. மாறன்

மக்கள்தொகை கட்டுப்பாடு விஷயத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ஆண்டுக்கு 11 லட்சம் குழந்தைகள் தமிழகத்தில் பிறந்த நிலையில், இப்போது பத்து லட்சத்துக்கும் குறைவாகப் பெறும் மாநிலமாக மாறியுள்ளது.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் மோதிரம் வழங்கப்படும் என்று முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். தனியார் மருத்துவமனைகளிலும் பிறக்கும் குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்கலாமே என்று தோன்றுவது நியாயமே.

ஆண்டுக்கு சுமார் ஐந்து லட்சம் கிராமுக்கும் அதிகமான தங்கத்துக்கு எங்கே போவது என்கிற கேள்வி இயல்பாக எழும்.

தமிழ்நாட்டிலேயே ஐந்து லட்சம் கிராம் அல்ல, அதற்கும் மேலும் ஆண்டுதோறும் தங்கம் உற்பத்தி செய்யக்கூடிய சுரங்கம் இருக்கிறது. நாம்தான் அந்தத் தங்கத்தை இன்னும் எடுக்காமல் இருக்கிறோம்.

தென்னாப்பிரிக்காவின் தங்கச் சுரங்கங்களில் இருந்து ஒரு டன் தங்கத்தாது சுத்திகரிப்பு செய்யப்பட்டால், ஐந்து கிராம் தங்கம் கிடைக்குமென்பது தரவு. ஆனால், வீணாகிப் போனதாகக் குப்பையில் எறியப்படும் ஒரு டன் எடையளவு அறிதிறன்பேசிகளில் இருந்து சுமார் 35 பவுன் தங்கம் எடுக்க முடியும் என்பது வியப்பான தகவல்.

உலகில் மூன்றாவது அதிக அளவு மின் மற்றும் மின்னணுக் கழிவுகளை உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 14 லட்சம் மெட்ரிக் டன் மின்னணுக் கழிவுகள் உற்பத்தியாகின்றன. தமிழ்நாட்டில் மட்டும் 2024-25 ஆம் ஆண்டில், சுமார் 4.65 லட்சம் டன் உற்பத்தி ஆகியுள்ளது.

மின் மற்றும் மின்னணுக் கழிவுகள் சுமார் 140 வகைகள் இருக்கும். மேஜைக் கணினி, மடிக் கணினி மற்றும் சார் உபகரணங்கள், தொலைபேசி, அழைப்பு மணி, கைப்பேசி, ஸ்மார்ட் வாட்ச், தொலைக்காட்சி, செட்- டாப் பாக்ஸ், மோடம், ஸ்கேனர், ஆற்றல் சேமிப்பு விளக்கு, மின்விசிறி, காது கேட்கும் கருவி என்று மிகப் பெரிய பட்டியல் இருக்கிறது.

இவை எல்லாமே வீடுகளுக்கு அடிப்படைத் தேவைகள்தாம். ஆனால், ஒவ்வொன்றும் எத்தனை இருக்கின்றன என்று பார்த்தால், எவ்வளவு மின்னணுக் குப்பைகளை வீட்டில் சேர்த்து வைத்திருக்கிறோம் என்பது தெரியவரும்.

அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு குறிப்பிட்ட ஆயுள் காலம்தான் உண்டு; அவற்றைத் தாண்டி உபயோகிப்பதும் வீணாகி போனவற்றை வீடுகளில் சும்மா வைத்திருப்பதும் நம் ஆரோக்கியத்துக்கும், பாதுகாப்புக்கும் அபாயம் என்ற விழிப்புணர்வுகூட நம்மிடம் இல்லை.

தமிழகத்தின் மொத்த மின்னணுக் கழிவுகளில் இருந்து உயர் மதிப்புள்ள மின்னணுக் கழிவுகளாகிய அறிதிறன்பேசிகள் மற்றும் மின்சுற்றுப் பலகைகள் (பிரின்டட் சர்க்யூட் போர்டு) மட்டும் சுமார் 35 ஆயிரம் டன் இருக்கும் என்று கணக்கிடப்படுகிறது. இவற்றிலிருந்து வெள்ளி, செம்பு, பலேடியம் முதலான உலோகங்களைத் தவிர்த்து, தங்கம் மட்டும் பத்து டன் அதாவது ஒரு கோடி கிராம் மீட்கக்கூடிய அளவாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதை மீட்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

மின்னணுக் கழிவுகள் மேலாண்மை விதிகள் 2022-ன் படி அவற்றைக் கையாளுவதில் நான்கு நிலைகள் உள்ளன. முதலாவது, அவற்றைச் சேகரிப்பது. இந்தப் பணியை மின்னணு சாதனங்களின் உற்பத்தியாளர்களும் பிற தனியார் ஆர்வலர்களும் ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும்.

இப்போதெல்லாம் பல குடியிருப்பு வளாகங்களிலும் பொது இடங்களிலும் வீணான மின்னணுக் கருவிகளைச் சேகரித்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. ஆனால், அவற்றில் தம்முடைய உபயோகமற்ற பழைய அறிதிறன்பேசிகள், மடிக்கணினிகள் போன்றவற்றைத் தருவதில் பலருக்கும் மிகுந்த தயக்கம் இருக்கிறது.

அவற்றின் நினைவக அட்டைகளில் இருக்கிற விவரங்கள் வேறு யார் மூலமாவது எடுக்கப்பட்டு, தவறான உபயோகத்தில் நாம் நஷ்டப்பட வேண்டி வருமோ என்கிற பயம் முக்கியக் காரணம்.

அறிதிறன்பேசியின் திரை வேலை செய்வதாக இருந்தால், நிச்சயமாக தொழிற்சாலை மீட்டமைப்பு (பேக்டரி ரீ செட்) மூலம் அனைத்து விவரங்களையும் அழித்து விடலாம்.

திரை வேலை செய்யாதபோது, இப்போதைய அறிதிறன்பேசிகளில் பெரும்பாலானவை திறந்து பார்க்க முடியாத அளவுக்கான அமைப்புடன் வருவதால், உள்ளே இருக்கிற விவரங்களை நீக்கிவிடுவது வெளிப்படையாக சாத்தியம் இல்லை. எனவே, அவற்றைச் சேகரிக்க வருபவர்கள், தருபவர்களின் முன்னிலையிலேயே அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் அவற்றை மொத்தமாக அழித்து விட்டு வாங்குகிற ஏற்பாட்டை செய்தால் மட்டுமே அவற்றைப் பெருமளவு சேகரிக்க முடியும்.

இரண்டாவது, அவற்றைப் பிரித்து பாகங்கள் ஆக்குதல். சில முறையான அமைப்புகளும் பல முறைசாரா தனியார் அமைப்புகளும் இதைச் செய்கின்றன. இந்தச் சந்தையில் 70 முதல் 90 சதவீதம் வரை இன்றைய தேதியில் முறை சாராத அமைப்புகளே இருக்கின்றன.

அவற்றில் பலவும் சமூக, சுற்றுச்சூழல் சார்ந்த அக்கறையின்றி 'குறைவாக இருப்பினும் விரைவான லாபம்' காணும் நோக்கில் சாதனங்களைப் பிரிப்பதையும் உடைப்பதையும் அவற்றிலிருந்து தனிமங்களைப் பிரித்தெடுத்துக் கொள்வதையும் முழுமையாகச் செய்யாமல் பெரும்பாலானவற்றை அப்படியே ஆற்றோரங்களிலும் நீர்நிலைகளின் அருகிலும் விட்டு விடுகின்றனர்.

அமிலக் கழுவுதலின் கழிவுகள், எரிக்கப்படும் நெகிழிக் கழிவுகள் ஆகியவை முறையின்றிச் செய்யப்படுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் அபாயங்கள் கொஞ்சநஞ்சமல்ல.

மூன்றாவது, சேகரிக்கப்பட்ட கழிவுகளைப் பகுத்து சரியான சுத்திகரிப்பு தொழில்நுட்பங்கள் மூலம் உலோகங்களைப் பிரித்தெடுப்பது. இந்தப் பணி தனியாரிடம் விடப்படாமல் அறிதிறன்பேசிக் கழிவுகளின் மேலாண்மையை அரசே முன்வந்து ஏற்று நடத்த வேண்டும்.

ஏனென்றால், தங்கம் போன்ற உயர் தனிமங்களைப் பிரித்தெடுப்பதற்கு உயர்தர வேதியியல் மற்றும் உலோகவியல் தொழில்நுட்பத்தில் சுத்திகரிப்பு செய்ய வேண்டும். அதற்கான கட்டமைப்புகளை சமரசமின்றி முழுமையாகச் செய்ய வேண்டும். அதற்கெல்லாம் மிகுந்த ஆரம்பகட்டச் செலவு பிடிக்கும். அரசு அல்லது அரசு சார்ந்த நிறுவனங்கள் முன்வந்தால் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு ஏற்பாடுகளும் கூடவே ஏற்படும்.

நான்காவது, மீதமுள்ளவற்றை என்ன செய்வதென்று ஆய்ந்து, மண்ணுக்கும், நீருக்கும், காற்றுக்கும், மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்களுக்கும் எந்த அபாயமும் இல்லாத வகையில் அழித்தொழிக்கும் நடவடிக்கைகளை எடுப்பது; இதில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் போன்ற கண்காணிப்பு அமைப்புகளின் மேற்பார்வை மிகவும் அவசியம். அரசு நிறுவனம் என்றால் கூடுதல் கட்டுப்பாடு இருக்கும்.

இவை நான்கும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் 'கழிவில் இருந்து கரன்சி' என்ற கருத்துருவாக்கம் மகத்தான வெற்றி பெறும்.

இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 22 லட்சம் டன் மின்னணுக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் திறன் கொண்ட அமைப்புகளும், 300-க்கும் மேற்பட்ட பதிவு செய்துள்ள நிறுவனங்களும் உள்ளன.

உத்தர பிரதேசத்தில் மட்டும் ஆண்டுக்கு 10.6 லட்சம் டன் மறுசுழற்சித் திறன் கொண்ட ஆலைகள் உள்ளன. தமிழ்நாட்டில் 91 ஆயிரம் டன் திறன் மட்டுமே உள்ளது. நிறுவன அலகுகள் என்று பார்த்தால் உத்தர பிரதேசத்தில் 100-க்கும் அதிகமாக உள்ளன; தமிழ்நாட்டில் 30 மட்டுமே உள்ளன.

தற்போது தமிழக அரசு நேரடியாக மறுசுழற்சி ஆலைகளை நடத்தவில்லை. தமிழகத்தில் உருவாகும் மின்னணுக் கழிவுகளில் 90 சதவீதத்துக்கும் அதிகமான பகுதி முறையான அனுமதியற்ற மறுசுழற்சி நிலையங்களுக்கு செல்வதால் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள உலோகங்களில் பெரும் பகுதி பாதுகாப்பற்ற முறைசாரா மறுசுழற்சியில் குறைந்த திறனுடன் மீட்கப்படாமல் வீணாகிறது.

அதில் இன்னொரு நீண்ட கால சுற்றுச்சூழல் அபாயமும் உள்ளது. மின் கழிவுகளில் சரிவரப் பிரித்தெடுக்கப்படாமல் குப்பைகளாகக் கொட்டப்பட்டு மண்ணில் புதையும் கன உலோகங்கள், ஈயம், காட்மியம், மெர்குரி, குரோமியம் போன்றவை நிலத்தை மலடாக்கி விடும் தன்மை கொண்டவை.

நச்சு ரசாயனங்கள், நிலத்தடி நீர், ஆறுகள், ஏரிகள் மற்றும் குடிநீரை மாசுபடுத்தி, மனிதர்களுக்கும் நீர்வாழ் உயிரினங்களுக்கும் சேதத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம்.

நெகிழிகளைக் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வளர்த்து விட்டு இப்போது கைபிசைந்து நிற்கும் நிலையைவிட மோசமான சூழலியல் கேடுகள், அறிதிறன்பேசிகள் மற்றும் மின்னணுக் கருவிகளின் மிகைப்பட்ட தொடர் உபயோகத்தால் எதிர்காலத்தில் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

அதே சமயம் அவற்றைப் பாதுகாப்பான முறையில் மறுசுழற்சி செய்யும் கடப்பாட்டை வாழ்வியல் ஆக்கினால் அவையே ஒரு தங்கச் சுரங்கம் என்பதையும் உணர வேண்டும். அரசு முன்வந்து மின்னணுக் கழிவுகளில் இருந்து தங்கம் பிரித்தெடுக்கும் தொழிற்சாலை தொடங்கினால் தொடர்ந்து அதிகரித்துவரும் மின்னணு சாதனங்களின் எண்ணிக்கை குறித்து நாம் கவலை கொள்ளும் அவசியம் இருக்காது.

இத்தகைய மின்னணுக் கழிவுகளின் மறுசுழற்சியை ஒரு தனித்துறை தொழிலாக உருவாக்கி நகர்ப்புற சுரங்க மையம் அல்லது தொழிற் பூங்காவை உருவாக்கினால், அது இந்தியாவுக்கே வழிகாட்டியாக மாறி, அடுத்துவரும் ஆண்டுகளில் பசுமைத் தொழில் அர்ப்பணிப்பை உலகறியச் செய்யும்.

கட்டுரையாளர்:

எழுத்தாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.