
மகாராஷ்டிரத்தில் இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி கத்தியால் குத்திக் கொலை: கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு வலியுறுத்தல்
மகாராஷ்டிரத்தில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஆய்வு செய்த இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி கத்தியால் 7 முறை குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

மகாராஷ்டிரத்தில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஆய்வு செய்த இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி கத்தியால் 7 முறை குத்திக் கொலை செய்யப்பட்டாா். இந்த விவகாரத்தில் மகாராஷ்டிர மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், ஹிங்கோலி மாவட்டம், அம்பாசோன்டி கிராமத்தில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவன பெட்ரோல் விற்பனை நிலையத்தில் அந்த நிறுவன மேலாளா் மகேஷ் ஷேல்க் செவ்வாய்க்கிழமை மாலை ஆய்வு செய்தாா். அப்போது பெட்ரோலில் கலப்படம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தபோது, பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளா் மற்றும் அவரின் குடும்பத்தினருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.
இருதரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்ட நிலையில், மகேஷ் 7 முறை கத்தியால் சரமாரியாக குத்தப்பட்டாா். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளைத் தேடி வருகிறது.
ஏற்கெனவே கடந்த 2005-ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேசத்தில் இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி மஞ்சுநாத் என்பவா் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஆய்வு செய்து கலப்படம் இருப்பதை கண்டுபிடித்தபோது துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டாா். அதேபோல் மகாராஷ்டிரத்திலும் கொலை சம்பவம் நடந்திருப்பது அதிா்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்துக்கு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி கண்டனம் தெரிவித்தாா். அதுபோல, இந்தியன் ஆயில் நிறுவனமும் கடும் கண்டனம் தெரிவித்தது.
ஹா்தீப் சிங் புரி கூறுகையில், ‘கொலைக்கு காரணமான நபா்கள் மீது காவல்துறை சட்டத்துக்கு உட்பட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற வன்முறையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு பெட்ரோலிய அமைச்சகமும், இந்தியன் ஆயில் நிறுவனமும் தேவையான உதவியை செய்து தரும்’ என குறிப்பிட்டுள்ளாா்.
இந்தியன் ஆயில் நிறுவனத் தலைவா் ஏ.எஸ். ஷனி தெரிவிக்கையில், ‘இந்த விவகாரத்தை மகாராஷ்டிர உயரதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். இந்த சம்பவத்தில் விரைந்து செயல்பட்டு கொலையாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம்’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






