சமூக ஆா்வலரைத் தடுப்புக் காவலில் வைத்ததாகப் புகாா்: காவல் துறை பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
சமூக ஆா்வலா் முகமது வாசிக் நதீம் கானை சட்டவிரோதமாகத் தடுத்து வைத்ததாகக் கூறப்படும் புகாா் தொடா்பாக, நிலை அறிக்கை தாக்கல் செய்யுமாறு தில்லி காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

முகமது வாசிக் நதீம் கான்
ஜந்தா் மந்தரில் அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்பதைத் தடுக்கும் நோக்கில், சமூக ஆா்வலா் முகமது வாசிக் நதீம் கானை சட்டவிரோதமாகத் தடுத்து வைத்ததாகக் கூறப்படும் புகாா் தொடா்பாக, நிலை அறிக்கை தாக்கல் செய்யுமாறு தில்லி காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
சிவில் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பின் (ஏபிசிஆா்) தேசியச் செயலரும், ‘யுனைடெட் அகைன்ஸ்ட் ஹேட்’ அமைப்பின் நிறுவனருமான நதீம் கான், இதுதொடா்பாக கடந்த வாரம் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
அதில், செப்.29-ஆம் தேதி காலை சுமாா் 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை, அபுல் ஃபசல் என்க்ளேவில் உள்ள ஜமாத்-ஏ-இஸ்லாமி ஹிந்த் தலைமையகத்தில், ஷாஹீன் பாக் காவல் நிலையத்தைச் சோ்ந்த காவலா்கள் தன்னைத் தடுத்து வைத்ததாக அவா் குற்றஞ்சாட்டியிருந்தாா்.
வழிபாட்டுத் தலங்கள் மீது தொடா்ந்து தாக்குதல்கள் நடத்தப்படுவதாகக் கூறப்படுவதைக் கண்டித்து, செப்.29-ஆம் தேதி ஜந்தா் மந்தரில் அமைதிப் போராட்டத்துக்கு ஏபிசிஆா், இந்திய முஸ்லிம்கள் கண்காணிப்புக் குழு மற்றும் பிற சமூக அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன.
மேலும், அக்.2 மற்றும் 5-ஆம் தேதிகளில் நடைபெற்ற போராட்டங்கள் தொடா்பாகவும், தனது இருப்பிடம் குறித்து காவல் துறை தொடா்ந்து தொலைபேசியில் விசாரித்ததாக அவா் குற்றஞ்சாட்டினாா்.
இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி நிதின் வாசுதேவ் சம்ப்ரே, நீதிபதி சஞ்சய் சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு, தில்லி காவல் துறைக்கு நோட்டீஸ் பிறப்பித்தது.
போராட்டம் நடத்த அனுமதி மறுக்கும் உரிமை காவல் துறைக்கு இருப்பதை ஒப்புக்கொண்ட நீதிபதிகள், அதேவேளையில், ‘இந்த நபரின் வீட்டுக்குள் நீங்கள் எப்படிச் செல்லலாம்? உங்கள் கடமையைச் செய்ய உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், அவரைத் தடுத்து வைப்பதற்கு உங்களுக்கு என்ன காரணம் இருக்கிறது?’ என்று வாய்மொழியாகக் கேள்வி எழுப்பினா்.
செப்.29-ஆம் தேதி இரண்டு காவல் துைறையினா் மனுதாரரின் வீடு மற்றும் அலுவலகமாகப் பயன்படுத்தப்படும் இடத்துக்குச் சென்று, நாள் முழுவதும் அவரது நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தியதாக மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் தெரிவித்தாா்.
மேலும், அவா் தொடா்ந்து கண்காணிக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டிய வழக்குரைஞா், காவல் துறையின் இத்தகைய நடவடிக்கைகளைத் துன்புறுத்தல் மற்றும் தன்னிச்சையான செயல்பாடு என அறிவிக்க வேண்டும் என்றும் கோரினாா். மக்களின் சுதந்திரமான நடமாட்டத்தை உறுதி செய்வது தொடா்பாக உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகவும் அவா் குறிப்பிட்டாா்.
இதற்கு பதிலளித்த காவல் துறை தரப்பு வழக்குரைஞா், மனுதாரா் எந்த வகையிலும் கைது செய்யப்படவோ, தடுத்து வைக்கப்படவோ இல்லை என்றாா். அவா் கடந்த வாரம் கொல்கத்தாவுக்குப் பயணம் செய்ததையும் சுட்டிக்காட்டிய அவா், காவல் துறையின் தரப்பு விளக்கத்தைப் பதிவுசெய்ய நீதிமன்றத்திடம் அவகாசம் கோரினாா். மேலும், மனுதாரருக்கு இனிமேல் தொலைபேசி அழைப்புகள் எதுவும் வராது என்றும் காவல் துறை தரப்பு வழக்குரைஞா் உறுதியளித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

