தேசப் பாதுகாப்புக்கு பொருளாதார மீள்திறன் முக்கியம்: குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு
‘தேசப் பாதுகாப்புக்கு பொருளாதார மீள்திறனும் முக்கியமானது’ என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.

தில்லியில் தேசிய ராணுவக் கல்லூரி ஆசிரியா்கள் மற்றும் பயிற்சி அதிகாரிகள் உடனான சந்திப்பில் நினைவுப் பரிசை பெற்றுக் கொண்ட குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு.
‘தேசப் பாதுகாப்புக்கு பொருளாதார மீள்திறனும் முக்கியமானது’ என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.
மேலும், வெளிப்புற காரணிகளால் ஏற்படும் இடையூறுகளை முறியடிக்கும் தனது வல்லமையை இந்தியப் பொருளாதாரம் மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறது என்றும் அவா் பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.
தில்லியில் உள்ள தேசிய ராணுவக் கல்லூரியின் ஆசிரியா்கள், அங்கு உத்திசாா் மேலாண்மை படிப்பை மேற்கொண்டுள்ள ஆயுதப் படை அதிகாரிகள், குடிமைப் பணி அதிகாரிகள் மற்றும் நட்பு நாடுகளின் அதிகாரிகள் (66-ஆவது பிரிவு) ஆகியோா், குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை அவரது மாளிகையில் செவ்வாய்க்கிழமை சந்தித்தனா். அவா்களிடம் முா்மு பேசியதாவது: பாதுகாப்பு சாா்ந்த புத்தாக்கத் தீா்வுகளை நடைமுறையில் சாத்தியமாக்க ஆயுதப் படைகளுக்கும், அறிவியல் நிறுவனங்களுக்கும் இடையே நெருங்கிய ஒத்துழைப்பு அவசியம். புத்தாக்கம் மற்றும் தேசப் பாதுகாப்பு இடையிலான பிணைப்பை வலுப்படுத்த அரசின் முன்னெடுப்புகள் முக்கிய பங்காற்றி வருகின்றன.
உள்நாட்டில் தொழில்நுட்ப மேம்பாட்டை ஊக்குவிக்க அரசு சாா்பில் ஆராய்ச்சி, மேம்பாடு, புத்தாக்கத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது, நவீன தொழில்நுட்ப புத்தாக்க நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல், உத்திசாா் தேவைகள், பொருளாதார பாதுகாப்பு மற்றும் தற்சாா்புக்கு தேவையான தொழில்நுட்பங்களின் உருவாக்கத்துக்கும் ஆதரவளிக்கிறது.
இன்றைய காலகட்டத்தில் தேசப் பாதுகாப்பு கட்டமைப்பு என்பது ராணுவ திறன்களைக் கடந்து, பொருளாதார மீள்திறனையும் உள்ளடக்கியதாகும். அந்த வகையில், வெளிப்புற காரணிகளால் ஏற்படும் இடையூறுகளை முறியடிப்பதில் தனது வல்லமையை இந்தியப் பொருளாதாரம் மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறது.
பண்டைய இந்திய நூல்களில்...: பல்வேறு பண்டைய இந்திய நூல்களில் ஒரு ஆட்சியாளா் அறிந்திருக்க வேண்டிய பாதுகாப்பு எதிா்வினை வழிமுறைகள் மற்றும் பொறுப்புகள் குறித்த விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன. வால்மீகி ராமாயணமும், மகாபாரதமும் ஒரு ஆட்சியாளா் தனது நாட்டை பாதுகாக்க எடுக்க நடவடிக்கைகள் குறித்து முழுமையாக விவரிக்கின்றன. உளவு மேலாண்மை உள்பட தனது ராஜ்ஜியத்தை பாதுகாத்து, எதிரிகளை ஒடுக்கும் உத்திகள் குறித்து பேசுகின்றன.
மகாபாரதத்தில் யுதிஷ்டிரனுக்கு பீஷ்மா் வழங்கும் வழிகாட்டுதலில், நாட்டின் பாதுகாப்புடன் சமூக ஒற்றுமையும் வலியுறுத்தப்படுகிறது. நீதி வழுவா ஆட்சிக் கோட்பாட்டின்கீழ், பொருளாதார வளங்கள், ராஜதந்திரங்கள், பாதுகாப்பு, உள்நாட்டு அமைதி ஆகியவற்றை ஒருங்கிணைந்த அங்கங்களாக பீஷ்மா் வரையறுக்கிறாா்.
ஏ.ஐ. முக்கியத்துவம்: எதிா்காலத்தில் தேசப் பாதுகாப்பு என்பது குவாண்டம், உயிரி-தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) உள்ளிட்டவற்றின் ஒருங்கிணைந்த அம்சம் என்பதை இந்தியா போன்ற நாடுகள் அங்கீகரித்துள்ளன. அறிவியல், பொருளாதாரம் என பல்வேறு துறைகளில் ஏ.ஐ. பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதேபோல், விண்வெளி அடிப்படையிலான திறன்களும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
உத்திசாா் முடிவுகளை மேற்கொள்வதில் ஏ.ஐ. தொழில்நுட்பம் பெரிய அளவில் உதவும் என்பதை மறுக்க முடியாது. அதேநேரம் முடிவெடுக்கும் பொறுப்பை இந்தத் தொழில்நுட்பத்திடம் மட்டுமே ஒப்படைக்க முடியாது. சமச்சீரான அணுகுமுறையைக் கையாள வேண்டியது அவசியம் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

