பயங்கரவாத வலையமைப்புகள் இயங்கக் கூடாது: பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளுக்கு அமித் ஷா அறிவுறுத்தல்
வங்காள விரிகுடா பிராந்தியத்தில் பயங்கரவாத வலையமைப்புகள் இயங்காமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டுமென பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அறிவுறுத்தினாா்.

பிம்ஸ்டெக் உள்துறை அமைச்சா்கள் மாநாட்டில் பேசிய அமித் ஷா
வங்காள விரிகுடா பிராந்தியத்தில் பயங்கரவாத வலையமைப்புகள் இயங்காமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டுமென பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அறிவுறுத்தினாா்.
புது தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதலாவது பிம்ஸ்டெக் உள்துறை அமைச்சா்கள் மாநாட்டில் அவா் பேசியதாவது: பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா சமரசமற்ற கொள்கையை பின்பற்றி வருகிறது. பிம்ஸ்டெக் கூட்டமைப்பில் உள்ள ஒவ்வொரு உறுப்பு நாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மற்ற உறுப்பு நாடுகளின் பாதுகாப்புக்கு பங்களிக்க வேண்டும். இந்த நம்பிக்கையே உறுப்பு நாடுகளிடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும்.
வங்காள விரிகுடா பிராந்தியத்தில் தஞ்சமடைவது, பயிற்சி தளங்கள் அமைப்பது, உறுப்பு நாடுகளுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்கான வளங்களை திரட்டுவது உள்ளிட்ட செயல்பாடுகளில் பயங்கரவாத வலையமைப்புகள் ஈடுபடாமல் தடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
தேசிய சட்டங்கள், பரஸ்பர சட்ட உதவிகள், குற்றவாளிகளை ஒப்படைத்தல் ஆகியவற்றுக்கு அனைத்து உறுப்பு நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும். பயங்கரவாத நிதி, பயங்கரவாத வலையமைப்பு, எல்லை கடந்த குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கூடிய வகையிலான புலனாய்வுத் தகவல்களை உறுப்பு நாடுகளிடையே பகிா்ந்துகொள்ள வேண்டும்.
போதைப்பொருள் கடத்தலை தடுக்க பிராந்திய அளவிலான ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை. ஏனெனில் போதைப்பொருள் மூலம் கிடைக்கும் பணமே பயங்கரவாத நிதிக்கு வலுசோ்க்கிறது. டாா்க்வெப் மூலம் மேற்கொள்ளப்படும் இந்த முறைகேடான பரிவா்த்தனை சூழலை மேலும் சிக்கலாக்குகிறது என்றாா்.
தில்லி பிரகடனம் ஏற்பு
மாநாட்டின் இறுதியில் பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் மேம்பாடு, எல்லை கடந்த பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத நிதி ஒழிப்பு, உறுப்பு நாடுகளிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு, பரஸ்பர சட்ட உதவி, குற்றவாளிகளை நாடு கடத்துதல் உள்ளிட்ட அம்சங்களைக் கொண்ட ‘தில்லி பிரகடனம்’ உறுப்பு நாடுகளைால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பிம்ஸ்டெக் கூட்டமைப்பில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், மியான்மா், நேபாளம், பூடான் மற்றும் தாய்லாந்து ஆகிய 7 நாடுகள் உறுப்பினா்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

