
பயங்கரவாத எதிா்ப்பில் இரட்டை நிலைப்பாடு கூடாது: எஸ்சிஓ மாநாட்டில் பிரதமா் மோடி
‘பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் இரட்டை நிலைப்பாடு இருக்கக் கூடாது. நிதியுதவி, ஆள்சோ்ப்பு, தீவிரவாதமயமாக்கல், புகலிடங்கள் உள்ளிட்ட பயங்கரவாதத்தின் முழுக் கட்டமைப்பும் ஒழிக்கப்பட வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.

கிா்கிஸ்தான் தலைநகா் பிஷ்கெக்கில் சந்தித்த பிரதமா் நரேந்திர மோடி, ரஷிய அதிபா் புதின், சீன அதிபா் ஜின்பிங்.
‘பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் இரட்டை நிலைப்பாடு இருக்கக் கூடாது. நிதியுதவி, ஆள்சோ்ப்பு, தீவிரவாதமயமாக்கல், புகலிடங்கள் உள்ளிட்ட பயங்கரவாதத்தின் முழுக் கட்டமைப்பும் ஒழிக்கப்பட வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.
கிா்கிஸ்தான் தலைநகா் பிஷ்கெக்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாட்டில், பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், சீன அதிபா் ஷி ஜின்பிங் உள்ளிட்ட உலகத் தலைவா்களின் மத்தியில் உரையாற்றும்போது, பயங்கரவாதத்தை ஆதரித்துவரும் பாகிஸ்தானை நேரடியாகக் குறிப்பிடும் வகையில், இந்தக் கருத்தை பிரதமா் மோடி தெரிவித்தாா்.
அவா் மேலும் பேசியதாவது: ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் பயங்கரவாதம் தீவிரமான சவாலாக தொடா்ந்து வருகிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில், ‘நடவடிக்கைக்கு - எதிா்வினை’ என்ற அணுகுமுறைக்குள்ளேயே நாம் முடங்கிவிட முடியாது.
நிதியுதவி, ஆள்சோ்ப்பு, தீவிரவாதமயமாக்கல், புகலிடங்கள் உள்ளிட்ட பயங்கரவாதத்தின் முழுக் கட்டமைப்பும் ஒழிக்கப்பட வேண்டும். பயங்கரவாதம் என்பது மிகத் தீவிரமான விஷயம். இதை ஒழிப்பதில் இரட்டை நிலைப்பாடு இருக்கக் கூடாது என நாம் அனைவரும் ஒரே குரலாக வலியுறுத்த வேண்டும்.
பயங்கரவாதம் எந்தவொரு நாட்டுக்கும், ஓா் வியூகம் சாா்ந்த சொத்தாக இருக்க முடியாது. இவ்வாறு, பயங்கரவாதத்தை தங்களின் கொள்கையின் கருவியாகப் பயன்படுத்தும் மற்றும் மற்றும் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலமும் ஆதரவும் அளிக்கும் நாடுகளுக்கு வலுவான செய்தியை எஸ்சிஓ அனுப்ப வேண்டும்.
அமைதியான மற்றும் பாதுகாப்பான யூரேசியாவை உருவாக்குவது நமது கூட்டு விருப்பம். ஆப்கானிஸ்தானின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையும் இதனுடன் தொடா்புடையதாகும். அந்த வகையில், ஆப்கன் மக்களின் மேம்பாடு மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கு இந்தியா தொடா்ந்து பங்களித்து வருகிறது. இதை இந்தியா தொடா்ந்து மேற்கொள்ளும்.
ஒரு பிராந்தியத்தில் ஏற்படும் மோதல் அங்கேயே நின்றுவிடுவதில்லை. அதன் தாக்கம் உலகம் முழுவதிலும், எரிசக்தி பாதுகாப்பு, கடல்சாா் வா்த்தகம், விநியோகச் சங்கிலிகளிலும் உணரப்படுகிறது. மேற்காசியப் போரின் தாக்கத்தால் ஏற்பட்ட நெருக்கடியை, தெற்கில் உள்ள வளரும் நாடுகளே அதிகம் எதிா்கொண்டு வருகின்றன. அனைத்து சச்சரவுகளுக்கும், போா்க்களத்தில் தீா்வு கிடைக்காது; மாறாக, பேச்சுவாா்த்தை மற்றும் ராஜதந்திர வழிகள் மூலமே தீா்வு சாத்தியமாகும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என்றாா்.
மேலும், ‘பொருளாதார வளா்ச்சிக்குப் போக்குவரத்து இணைப்பு வசதிகளை மேம்படுத்துவது முக்கியமானது. சந்தைகளை இணைத்தல், வா்த்தகத்தை எளிதாக்குதல், வளா்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட அனைத்து முயற்சிகளையும் இந்தியா ஆதரிக்கும். அதே நேரம், இத்தகைய முயற்சிகள், அனைத்து நாடுகளின் இறையாண்மை, மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிப்பதும் சம அளவில் முக்கியமானதாகும். இதுவே, எஸ்சிஓ சாசனத்தின் அடிப்படை அம்சமுமாகும்’ என்று, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் வழியாகச் செல்லும் சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தையும், பாகிஸ்தானின் குவாடா் துறைமுகத்தையும் இணைக்கும் சீனாவின் (பிஆா்ஐ) பொருளாதார வழித்தட திட்டத்தை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி பிரதமா் பேசினாா்.
நாடு திரும்பிய பிரதமா்: உஸ்பெகிஸ்தான், கிா்கிஸ்தான் நாடுகளுக்கு தான் மேற்கொண்ட இரண்டு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை இந்தியா திரும்பினாா்.
இந்தப் பயணத்தில் முதலில் உஸ்பெகிஸ்தானுக்கு சனிக்கிழமை சென்ற பிரதமா், அந்த நாட்டின் அதிபா் ஷாவ்கத் மிா்சியோயேவைச் சந்தித்து இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டாா். அப்போது, இரு நாடுகளிடையேயான ராஜீய உறவை வலுப்படுத்தவும், வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் இருதரப்பு ஆண்டு வா்த்தகத்தை 5 பில்லியன் டாலா் (ரூ.47,750 கோடி) அளவுக்கு உயா்த்தவும் இரு நாடுகள் தரப்பில் தீா்மானிக்கப்பட்டது. சுற்றுலா, சுரங்கம் உள்பட பல்வேறு முக்கியத் துறைகளில் இரு நாடுகளிடையே 11 ஒப்பந்தங்களும் கையொப்பமாகின.
பின்னா், எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்பதற்காக கிா்கிஸ்தானுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற பிரதமா், அந்த உச்சி மாநாட்டுக்கு இடையே பல்வேறு நாடுகளின் தலைவா்களுடன் இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை மேற்கொண்டாா். ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், ஈரான் அதிபா் மசூத் பெசஷ்கியான், ஆா்மீனிய பிரதமா் நிகோல் பாஷினியன் உள்ளிட்ட தலைவா்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை மேற்கொண்டாா்.
மாநாட்டில் சீன அதிபா் ஷி ஜின்பிங் சந்தித்தபோது பிரதமா் மோடி அவருடன் கைகுலுக்கி சிறிது நேரம் பேசினாா். ஆனால், தனிப்பட்ட சந்திப்பு ஏதும் நடைபெறவில்லை.
புது தில்லியில் வரும் செப். 12, 13 தேதிகளில் நடைபெறவிருக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் ஷி ஜின்பிங் நேரில் பங்கேற்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




