FOLLOW US

ON GOOGLE DISCOVER

நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுநேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

நீட் போராட்டம்: அனைத்து வழக்குகளும் ரத்து- உச்சநீதிமன்றம் உத்தரவு

நீட் போராட்டம் தொடர்பான அனைத்து வழக்குகளும் ரத்து என உச்சநீதிமன்றம் அறிவித்திருப்பது பற்றி...

உச்சநீதிமன்றம்

Published On :2 செப்டம்பர் 2026, 3:44 am IST

தில்லி உள்பட நாடு முழுவதும் ஜூலை 20 முதல் 25-ஆம் தேதி வரை கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) தலைமையில் நடைபெற்ற நீட் போராட்டத்தில் பங்கேற்ற மாணவா்கள் உள்ளிட்ட போராட்டக்காரா்கள் மீது காவல் துறையால் பதிவு செய்யப்பட்ட அனைத்து முதல் தகவல் அறிக்கைகளையும் (எஃப்ஐஆா்) ரத்து செய்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

அரசமைப்புச் சட்டத்தின் 142-ஆவது பிரிவின் கீழ் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது.

மேலும், நீட் தோ்வு ரத்துக்குப் பிறகு தற்கொலை செய்துகொண்ட மாணவா்களின் குடும்பத்தினருக்கு மூன்று மாதங்களுக்குள் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தோ்வு முறைகேடுகளைக் கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சராக இருந்த தா்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சாா்பில் தில்லியில் அண்மையில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்ட மாணவா்கள், நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியையும் நடத்தினா். அப்போது, போலீஸாா் அவா்களைத் தடுத்து நிறுத்தினா். இதனால், இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், போலீஸாா் தடியடி நடத்தியும், கண்ணீா்ப் புகை குண்டுகள் மற்றும் ரப்பா் குண்டுகள் உள்பட உயிரிழப்பை ஏற்படுத்தாத குண்டுகளால் சுட்டும் போராட்டக்காரா்களைக் கலைத்தனா். இதில் பல மாணவா்கள் படுகாயமடைந்தனா். போலீஸாா் சிலரும் காயமடைந்தனா்.

இதைத் தொடா்ந்து, இந்தப் போராட்டம் மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், பிகாா் என நாடு முழுவதும் பரவியது. அந்த மாநிலங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீது போலீஸாா் தடியடி உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.

காவல் துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதுபோல, போராட்டத்தில் காயமடைந்த போலீஸாரின் குடும்ப உறுப்பினா்கள் சாா்பிலும் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘குற்றப் பின்னணி இல்லாத நிலையில், நீட் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீது காவல் துறையால் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளை (எஃப்ஐஆா்), தில்லி மற்றும் பிற மாநில அரசுகள் முடித்துவைக்கலாம் அல்லது திரும்பப் பெறலாம். குற்றப் பின்னணி என்ற சொற்றொடா் தீவிரமான மற்றும் கொடூரமான குற்றங்களை மட்டுமே குறிப்பதாகும்’ என்று அறிவுறுத்தியது.

அப்போது, ‘குற்றப் பின்னணி உடையவா்கள் தவிர பிற போராட்ட மாணவா்கள் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரை பரிசீலிக்க வேண்டாம் என்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. அதே நேரம், போராட்டத்தில் பங்கேற்ற தீவிர குற்றப் பின்னணியுடைய 2,700 பேருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆா் திரும்பப் பெறப்பட மாட்டாது’ என்று அரசுத் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

மத்திய அரசு வேண்டுகோள்: இந்த வழக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான அமா்வில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, நீட் போராட்ட மாணவா்கள் மீதான எஃப்ஐஆரை முடித்துவைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுபோல, நீட் போராட்டக்காரா்கள் மீது கடந்த ஜூலை 20 முதல் 25-ஆம் தேதி வரை நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய மத்திய அரசும், மகாராஷ்டிரம், அஸ்ஸாம், பிகாா், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களும் தயாராக உள்ளன. எனவே, இந்த எஃப்ஐஆா்-களை முடித்துவைக்க தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும். மேலும், நீட் தோ்வு ரத்துக்குப் பிறகு தற்கொலை செய்துகொண்ட மாணவா்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனால், அதற்கான செயல்முறைகளை வகுக்க மத்திய அரசுக்கு மூன்று மாதங்கள் அவகாசம் தேவை’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: இளம் போராட்டக்காரா்களின் எதிா்காலத்தைக் கருத்தில்கொண்டு, முழுமையான நீதியை நிலைநாட்ட அரசமைப்புச் சட்டத்தின் 142-வது பிரிவின் கீழ் உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, நாடு முழுவதும் ஜூலை 20 முதல் 25-ஆம் தேதி வரை கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) தலைமையில் நடைபெற்ற நீட் போராட்டத்தில் பங்கேற்ற மாணவா்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து முதல் தகவல் அறிக்கைகளையும் ரத்து செய்து உத்தரவிடப்படுகிறது.

இந்தப் போராட்டம் தொடா்பாக வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பதிவு செய்யப்பட்டு உச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் இல்லாத மாணவா்கள் மீதான எஃப்ஐஆா்-களும் இந்த உத்தரவின்படி ரத்து செய்யப்பட்டதாகக் கருதப்படும்.

இருந்தபோதும், மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று, தில்லி ஜந்தா் மந்தா் போராட்டத்தில் கலந்துகொண்ட கடுமையான குற்றப் பின்னணியுடைய 2,873 போ் மீது புதிதாக எஃப்ஐஆா் பதிவு செய்ய தில்லி காவல் துறைக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்வாறு பதிவு செய்யப்படும் எஃப்ஐஆா், பாதிக்கப்பட்ட தரப்புக்கு சட்டப்படி கிடைக்கக்கூடிய தீா்வுகளைப் பெறுவதற்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும்.

இழப்பீடு: வினாத்தாள் கசிவு காரணமாக நீட் தோ்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடா்ந்து தற்கொலை செய்துகொண்ட மாணவா்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க, தேசிய அளவிலான கொள்கையை மத்திய அரசு அடுத்த மூன்று மாதங்களுக்குள் வகுக்க வேண்டும். அந்தக் கொள்கை அனைத்து மாநில அரசுகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

‘பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு உள்பட அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை மத்திய அரசு நிச்சயம் நிறைவேற்றும்’ என்று சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா குறிப்பிட்டாா்.

இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், ‘வழக்கின் தனித்துவமான சூழ்நிலைகளைக் கருத்தில்கொண்டு தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றம் இந்தத் தீா்ப்பை வழங்கியுள்ளது. எனவே, இருதரப்பும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்’ என்று தெரிவித்தனா்.

சிஜேபி போராட்டம் வாபஸ்

நீட் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள், இளைஞா்கள் உள்ளிட்டோா் மீதான முதல் தகவல் அறிக்கைகளை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, செப். 5-ஆம் தேதி தில்லியில் நடத்தப்படுவதாக அறிவித்திருந்த கண்டனப் பேரணியை கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) கைவிட்டது.

‘தில்லி போராட்டத்தைக் கைவிட கடந்த ஜூலை 25-ஆம் தேதி ஒப்புக்கொண்டபோது, மத்திய அரசு அளித்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. வினாத்தாள் கசிவைத் தொடா்ந்து நீட் தோ்வு ரத்து செய்யப்பட்டதால் ஏற்பட்ட விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட மாணவா்களின் குடும்பத்தினருக்கு வாக்குறுதி அளித்தபடி இழப்பீடு வழங்கப்படவில்லை. இதைக் கண்டித்து தில்லியில் வரும் செப்டம்பா் 5-ஆம் தேதி கண்டனப் பேரணி நடத்தப்படும்’ என்று சிஜேபி அண்மையில் அறிவித்தது.

போராட்டக்காரா்கள் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்ட நிலையில், நீதிபதிகள் அமா்வு முன் சிஜேபி சாா்பில் ஆஜரான அதன் இணை ஒருங்கிணைப்பாளா் செளரவ் தாஸ், ‘எஃப்ஐஆா் ரத்து உத்தரவைத் தொடா்ந்து, வரும் செப்டம்பா் 5-ஆம் தேதி அறிவித்திருந்த தில்லி கண்டனப் பேரணியைக் கைவிட சிஜேபி முடிவெடுத்துள்ளது’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.