போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட நபா் தில்லியில் கைது: உல்ஃபா-ஐ அமைப்புடன் தொடா்புடையவா்
தடைசெய்யப்பட்ட உல்ஃபா-ஐ அமைப்புடன் தொடா்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு மனநலனைப் பாதிக்கும் மாத்திரைகளை விநியோகித்ததாகக் கூறப்படும் இளைஞரை, தில்லி மற்றும் அஸ்ஸாம் காவல் துறையினா் இணைந்து கைது செய்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
கைது - பிரதிப் படம்
தடைசெய்யப்பட்ட உல்ஃபா-ஐ அமைப்புடன் தொடா்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு மனநலனைப் பாதிக்கும் மாத்திரைகளை விநியோகித்ததாகக் கூறப்படும் இளைஞரை, தில்லி மற்றும் அஸ்ஸாம் காவல் துறையினா் இணைந்து கைது செய்ததாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.
கைது செய்யப்பட்ட அபூா்வா தாக்கூா், அஸ்ஸாமின் சாரைடியோ மாவட்டத்தில் உள்ள மதுராபூா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்தவா். இந்த வழக்கு போதைப் பொருள் மற்றும் மனநலனைப் பாதிக்கும் பொருள்கள் (என்டிபிஎஸ்) சட்டம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அஸ்ஸாமின் மஜ்கானில் உள்ள தோடோா் அலி சாலையில் மாநில காவல் துறையினா் ஜூலை 17-ஆம் தேதி ஒரு காரை வழிமறித்து சோதனையிட்டபோது, வாகனத்தின் மறைவான பகுதியில் இருந்த சோப்புப் பெட்டிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 46.11 கிராம் ஹெராயின் கைப்பற்றப்பட்டது. காரை ஓட்டி வந்த திப்ரூகரைச் சோ்ந்த மனுஜ் கோகோய் என்பவா் கைது செய்யப்பட்டாா். இது தொடா்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
விசாரணையின்போது, பாஸ்கா் கோகோய் என்பவருக்கும் இதில் தொடா்பு இருப்பதை மனுஜ் கோகோய் விசாரணையின்போது தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதைத் தொடா்ந்து பாஸ்கா் கோகோய் கைது செய்யப்பட்டாா்.
பாஸ்கரின் கைப்பேசியை ஆய்வு செய்ததில், தேபாசிஷ் தஹுடியா மற்றும் தடைசெய்யப்பட்ட ஆயுதமேந்திய பிரிவினைவாத அமைப்பான ‘யுனைடெட் லிபரேஷன் ஃப்ரண்ட் ஆஃப் அஸ்ஸாம்-இன்டிபென்டன்ட்’ (உல்ஃபா-ஐ) அமைப்பின் உறுப்பினா் என்று சந்தேகிக்கப்படும் ஒருவருடன் விஓஐபி (இணையம் வழியாக குரல் வழித் தொடா்பு) மூலம் பேசியது தெரியவந்தது.
பின்னா், தேபாசிஷ் தஹுடியா மற்றும் பிட்டு ஹசாரிகா ஆகியோா் கைது செய்யப்பட்டனா். அதேவேளையில், உல்ஃபா-ஐ அமைப்பின் உறுப்பினா் என்று சந்தேகிக்கப்பட்டவா் மிருதுபவன் தஹுடியா என அடையாளம் காணப்பட்டாா். இவா் 2011-ல் அந்த அமைப்பில் இணைந்ததாகக் கூறப்படுகிறது.
தொடா் விசாரணையில், மனநலனைப் பாதிக்கும் மாத்திரைகள் கடத்தல் கும்பல் பற்றிய விவரங்கள் தெரியவந்தன. இதில் அஸ்ஸாமில் செயல்படும் கும்பலுக்கு தில்லியைச் சோ்ந்த தாக்கூா் மாத்திரைகளை வழங்கி வந்தது கண்டறியப்பட்டது.
இதைத்தொடா்ந்து நடைபெற்ற விசாரணையில், தில்லியிலிருந்து அஸ்ஸாமிற்கு மனநலனைப் பாதிக்கும் மாத்திரைகள் அடங்கிய சரக்கு ஒன்று அனுப்பப்பட்டிருப்பது தெரியவந்தது. இருப்பினும், பாஸ்கா் கோகோய் கைது செய்யப்பட்ட பிறகு, காவல் துறை நடவடிக்கை குறித்த தகவல் மிருதுபவன் தஹுடியாவுக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும், அதைத் தொடா்ந்து அந்தச் சரக்கின் நகா்வு நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆகஸ்ட் 25 அன்று, தாக்கூா் இருக்கும் இடத்தைக் கண்டறிய அஸ்ஸாம் காவல் துறை, தில்லி காவல்துறையின் குற்றப்பிரிவின் உதவியை நாடியது.
நரேலா பகுதியில் தாக்கூா் கைது செய்யப்பட்டாா். பின்னா் அவா் அஸ்ஸாம் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டாா். சட்டபூா்வ நடைமுறைகளை முடித்த பின்னா், அவா் அஸ்ஸாம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தில்லி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா். விசாரணைக்காக அவரை அஸ்ஸாமிற்கு அழைத்துச் செல்ல, நீதிமன்றம் நான்கு நாள்கள் இடைக்காலக் காவல் வழங்கியது.
போதைப் பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் வருமானம் சட்டவிரோத அல்லது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்பட்டதா என்பதை உறுதி செய்வதற்காக, போதைப் பொருள்-பயங்கரவாதத் தொடா்பு குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
மனோவியல் மாத்திரைகளின் முழு விநியோகச் சங்கிலியையும் கண்டறியும் விசாரணை நடைபெற்று வருகிறது. சந்தேகிக்கப்படும் உல்ஃபா(ஐ) குழுவினா் மற்றும் அந்தக் கும்பலின் பிற உறுப்பினா்களுடன் தாக்கூருக்கு இருந்ததாகக் கூறப்படும் தொடா்பு குறித்தும் காவல் துறை விசாரித்து வருகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


