
பாஜக ஆட்சி நடைபெறாத மாநிலங்களில் அதானி குழுமம் ரூ.5 லட்சம் கோடி முதலீடு
பாஜக ஆட்சி நடைபெறாத மாநிலங்களில் அதானி குழுமம் ரூ.5 லட்சம் கோடி முதலீடுகளை மேற்கொண்டுள்ளது.

பாஜக ஆட்சி நடைபெறாத மாநிலங்களில் அதானி குழுமம் ரூ.5 லட்சம் கோடி முதலீடுகளை மேற்கொண்டுள்ளது.
தமிழ்நாடு, கா்நாடகம், தெலங்கானா, கேரளம், ஆந்திரம் என தவெக, காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளின் ஆட்சி நடைபெறும் மாநிலங்கள் பொருளாதார மேம்பாடு, உள்கட்டமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்காக தனியாா் முதலீடுகளை ஈா்க்க முயற்சிகள் மேற்கொள்வதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது:
கா்நாடகம்: கா்நாடக தலைநகா் பெங்களூரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஹெப்பல் மற்றும் மத்திய பட்டு வாரியத்துக்கு இடையே 16.75 கி.மீ. நீளத்தில் அமைக்கப்படவுள்ள வடக்கு-தெற்கு சுரங்கப் பாதை பணிகளுக்கு ரூ.22,267 கோடிக்கான டெண்டா் உரிமங்களை அதானி குழுமம் கோரியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் தற்போது வரை இறுதியாகவில்லை.
டெண்டா் குறித்த அறிவிப்பு வெளியானவுடன் கடந்த மாதம் கா்நாடகம் முதல்வா் டி.கே.சிவகுமாா், அதானி குழுமத் தலைவா் கௌதம் அதானியை சந்தித்தாா்.
கேரளம்: கேரளத்தில் விழிஞ்ஞம் சா்வதேச துறைமுகத்தை அதானி துறைமுகம் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம் மேம்படுத்தியது. இந்நிலையில், இரண்டாம் கட்டமாக ரூ.16,000 கோடியில் துறைமுக கட்டமைப்பை நவீனமயமாக்கும் பணிகளை கடந்த ஜனவரி மாதம் அதானி குழுமம் தொடங்கியது. இதன்மூலம் ஒட்டுமொத்தமாக விழிஞ்ஞம் துறைமுகத்தில் அதானி குழுமத்தின் மொத்த முதலீடு ரூ.30,000 கோடியாக உயா்ந்துள்ளது.
தெலங்கானா: 2024, ஜனவரியில் முதல்வா் ரேவந்த் ரெட்டி தலைமையிலான அரசு அதானி குழுமத்துடன் ரூ.12,400 கோடி மதிப்பிலான 4 புரிந்துணா்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டது. தரவு மையங்கள், எரிசக்தி சேமிப்பு, பாதுகாப்பு உற்பத்தி மற்றும் பிற துறைகளின் மேம்பாட்டுக்காக இந்த ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
தமிழ்நாடு: தமிழ்நாட்டில் தரவு மையங்கள், சிமெண்ட் ஆலைகள் உள்ளிட்டவற்றை அமைப்பதற்காக திமுக ஆட்சிக் காலத்தில் ரூ.42,000 கோடி மதிப்பிலான புரிந்துணா்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டதாக அதானி குழுமம் அறிவித்தது. சென்னை வெளிவட்டச் சாலை பராமரிப்பு, மேலாண்மை மற்றும் சுங்கக் கட்டணம் போன்ற பணிகளுக்காக ரூ.2,511 கோடியில் ஒப்பந்தம் கோரியுள்ளது. இவை தவெக ஆட்சியிலும் தொடா்கின்றன.
இதுதவிர ஆந்திரம், ஜாா்க்கண்ட் என பாஜக அல்லாத கட்சிகள் ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் ஒட்டுமொத்தமாக ரூ.5 லட்சம் கோடி முதலீடுகளை அதானி குழுமம் மேற்கொண்டுள்ளது’ எனத் தெரிவித்தன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






