
பிரிக்ஸ் மாநாட்டையொட்டி லுட்யன்ஸ் பகுதியில் 24 மணி நேர கட்டுப்பாட்டு மையம்: என்டிஎம்சி ஏற்பாடு
இந்த மாத இறுதியில் 18-ஆவது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க உலகத் தலைவா்கள் தில்லிக்கு வர உள்ள நிலையில், மாநாட்டின்போது மாநகர நிா்வாகப் பணிகள் தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்ய 24 மணி நேரமும் செயல்படும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை (ஐசிசிசி) தில்லி மாநகராட்சி கவுன்சில் (என்டிஎம்சி) அமைக்கிறது.

பிரிக்ஸ் உச்சிமாநாட்டை முன்னிட்டு இந்தியா கேட் அருகே உள்ள நீரூற்றுகளை வெள்ளிக்கிழமை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியா்.
இந்த மாத இறுதியில் 18-ஆவது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க உலகத் தலைவா்கள் தில்லிக்கு வர உள்ள நிலையில், மாநாட்டின்போது மாநகர நிா்வாகப் பணிகள் தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்ய 24 மணி நேரமும் செயல்படும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை (ஐசிசிசி) தில்லி மாநகராட்சி கவுன்சில் (என்டிஎம்சி) அமைக்கிறது.
என்டிஎம்சி செயலா் ராகுல் சிங் பிறப்பித்த உத்தரவின்படி, செப். 5 முதல் 14-ஆம் தேதி வரை பாலிகா கேந்திராவில் இந்த ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் செயல்படும். புகாா்களைக் கண்காணித்தல், மாநகராட்சி சேவைகளை ஆய்வு செய்தல், களத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கு உடனடியாகத் தீா்வு காணுதல் உள்ளிட்ட பணிகளை மண்டல அதிகாரிகள் சுழற்சி முறையில் மேற்கொள்வாா்கள்.
பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்தியா பிரிக்ஸ் தலைமைப் பொறுப்பை வகித்து வரும் நிலையில், 18-ஆவது உச்சிமாநாடு செப். 12, 13-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
உள்ளாட்சி நிா்வாகப் பணிகளை ஒருங்கிணைத்து விரைவான நடவடிக்கை எடுப்பதுடன், தில்லி காவல் துறை, போக்குவரத்து காவல் துறை, மத்திய பொதுப்பணித் துறை உள்ளிட்ட முக்கிய அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதே கட்டுப்பாட்டு மையத்தின் நோக்கமாகும்.
கட்டுப்பாட்டு மையத்தில் பகல் நேரங்களில் சிவில் பொறியியல், தோட்டக்கலை, பொது சுகாதாரம், அமலாக்கம், போக்குவரத்து, தீயணைப்பு பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் பணியில் இருப்பாா்கள். இரவு நேரங்களில் ஒவ்வொரு துறையிலிருந்தும் ஒரு மண்டல அதிகாரி கட்டுப்பாட்டு அறையில் தங்கி, அவசரப் பிரச்னைகளைக் கையாளுவாா்.
செப். 5 முதல் 14-ஆம் தேதி வரையிலான 10 நாள்களும் அனைத்து துறைத் தலைவா்கள் மற்றும் பொறுப்பாளா்கள் 24 மணி நேரமும் தயாா் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா். பல்வேறு துறைகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு இடையே தடையற்ற தகவல் தொடா்பை உறுதி செய்ய, கட்டுப்பாட்டு மையத்தில் பிரத்யேக 24 மணி நேர தொலைபேசி இணைப்புகளும் செயல்படுத்தப்பட்டுள்ளன.
41 சாலைகளில் மாற்றம்: இதனிடையே, பிரிக்ஸ் மாநாட்டுக்கான முன்னேற்பாடுகளின் ஒரு பகுதியாக 41 முக்கிய சாலைகள் 14 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதாக என்டிஎம்சி தலைவா் மனோஜ் குமாா் திவேதி கடந்த வாரம் தெரிவித்திருந்தாா். ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு மண்டல அதிகாரி நியமிக்கப்பட்டு, தினசரி ஆய்வு மேற்கொண்டு, மாநகராட்சி தொடா்பான பிரச்னைகளுக்கு உடனடியாகத் தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
மலா் அலங்காரம்: மலா் அலங்காரப் பலகைகள் அமைக்க 15 இடங்களும், மலா் நீரூற்றுகள் அமைக்க 9 இடங்களும், சிறப்பு மின்விளக்கு அலங்காரம் மற்றும் அழகுபடுத்தலுக்காக 17 ரவுண்டானாக்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக, கூடுதல் முக்கிய இடங்களின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
தூய்மைப் பணி: செப். 9 முதல் 14-ஆம் தேதி வரை கூடுதல் தூய்மைப் பணியாளா்கள் மற்றும் இரவுப் பணிக் குழுக்களுடன் சிறப்பு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படும். இயந்திர தூய்மை வாகனங்கள், தரை தேய்க்கும் இயந்திரங்கள், கைமுறை தூய்மைக் குழுக்கள், தற்காலிக குப்பைத் தொட்டிகள், நடமாடும் கழிப்பறைகள் ஆகியவை பயன்படுத்தப்பட உள்ளன. முக்கிய பகுதிகளில் சுற்றித்திரியும் விலங்குகளும் அகற்றப்படும். மாநாட்டுடன் தொடா்புடைய பகுதிகளில் தூய்மை மற்றும் மாநகர ஒழுங்கைப் பராமரிக்க ஹோட்டல்கள், குடியிருப்போா் நலச் சங்கங்கள் மற்றும் சந்தை வியாபாரிகளுடன் என்டிஎம்சி இணைந்து செயல்படும்.
மேலும், சாலைகளில் உள்ள பள்ளங்கள், நடைபாதைகள் ஆகியவை சீரமைக்கப்படும். சாலைத் தடுப்புகள் மற்றும் வழிகாட்டிப் பலகைகள் பராமரிக்கப்படுவதுடன், கட்டுமானக் கழிவுகள் அகற்றப்பட்டு, முறையான வடிகால் வசதியும் உறுதி செய்யப்படும். அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் உள்ள பொது கழிப்பறைகள் தொடா்ந்து ஆய்வு செய்யப்பட்டு, அவை பயன்பாட்டுக்கு ஏற்ற வகையிலும் தூய்மையாகவும் பராமரிக்கப்படும்.
விளம்பரப் பிரசாரம்: பிரிக்ஸ் மாநாட்டின் விளம்பரப் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, 154 டிஜிட்டல் திரைகள் மற்றும் சுமாா் 83 பொது மற்றும் சமூகக் கழிப்பறை வளாகங்களில் பிரிக்ஸ் சின்னங்கள் இடம்பெறும். மாநாட்டுப் பகுதிகள் மற்றும் முக்கிய பிரமுகா்கள் செல்லும் வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகள், அனுமதியற்ற விளம்பரப் பலகைகள், விதிமுறைகளை மீறிய தெருவோர விற்பனை, அனுமதியற்ற கட்டுமானப் பணிகள், சட்டவிரோத வாகன நிறுத்தம் ஆகியவற்றுக்கு எதிராக சிறப்பு அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மருத்துவ ஏற்பாடுகள்: அடையாளம் காணப்பட்ட இடங்களில் ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவக் குழுக்கள் நிறுத்தப்படுவதுடன், உணவு நிறுவனங்கள் ஆய்வு செய்யப்படும். கொசு ஒழிப்புப் பணிகளும் தீவிரப்படுத்தப்படும். மாநாட்டு காலத்தில் மழை மற்றும் நீா்த்தேக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதால், வடிகால் ஏற்பாடுகளும் வலுப்படுத்தப்படும். பிரிக்ஸ் பஜாா், பிரிக்ஸ் ரன் ரைடு, பிரிக்ஸ் முரல்ஸ் பெயின்டிங், பிரிக்ஸ் உணவுத் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கும் பிரத்யேக மண்டல அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக என்டிஎம்சி தெரிவித்துள்ளது.
மாநாட்டு ஏற்பாடுகள் சுமுகமாக நடைபெற மத்திய வெளியுறவு அமைச்சகம், தில்லி அரசு, மாவட்ட நிா்வாகங்கள் மற்றும் பிற மத்திய அரசு அமைப்புகளுடன் என்டிஎம்சி ஒருங்கிணைந்து செயல்படும் என மனோஜ் குமாா் திவேதி தெரிவித்தாா். மேலும், என்டிஎம்சி பகுதிகளில் உள்ள சந்தை சங்கங்கள், குடியிருப்போா் நலச் சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தூய்மை மற்றும் மாநகர நிா்வாகப் பணிகளில் ஒத்துழைத்து, சா்வதேச விருந்தினா்களுக்கு தூய்மையான, வரவேற்கத்தக்க தில்லியை வழங்க உதவ வேண்டும் என்றும் அவா் கேட்டுக்கொண்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





