
தில்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு: கண்காணிப்பை தீவிரப்படுத்திய காவல்துறை
பிரிக்ஸ் உச்சிமாநாட்டின்போது, தில்லியில் குண்டுவெடிப்பை நிகழ்த்தவோ காவலா்களைக் குறிவைக்கவோ பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாதி ஷாசாத் பட்டி திட்டமிட்டிருக்கலாம் என்ற தகவலையடுத்து, தில்லி காவல்துறை தீவிர கண்காணிப்பு
தில்லி காவல்துறை
பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது, தில்லி புறநகா்ப் பகுதிகளில் குண்டுவெடிப்பை நிகழ்த்தவோ அல்லது காவலா்களைக் குறிவைக்கவோ பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாதி ஷாசாத் பட்டி திட்டமிட்டிருக்கலாம் என்ற உளவுத்துறை தகவல்களைத் தொடா்ந்து, தில்லி காவல் துறை கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது என்று ஓா் அதிகாரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தேடப்படும் குற்றவாளிகள், ஜாமீனில் வெளிவந்துள்ள சந்தேக நபா்கள் மற்றும் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டவா்கள் உள்பட 2,000-க்கும் மேற்பட்டோரின் நடவடிக்கைகளை காவல் துறை கண்காணித்து வருவதாக, பெயா் குறிப்பிட விரும்பாத மூத்த காவல் துறை அதிகாரி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறினாா்.
பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துவதைவிட, பீதியை உருவாக்கவும் கவனத்தை ஈா்க்கவும் குறைந்த தீவிரத்தன்மை கொண்ட தாக்குதலை நடத்த முயற்சி நடக்கலாம் என்ற முன்னெச்சரிக்கையை இந்த உளவுத்துறை மதிப்பீடு எழுப்பியுள்ளதாக அந்த அதிகாரி கூறினாா்.
‘ஷாசாத் பட்டி தில்லியில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கிய இடங்களுக்குப் போதுமான பாதுகாப்பு அளிக்கப்பட்டாலும், ஒவ்வொரு மூலை முடுக்கையும் பாதுகாப்பது சாத்தியமில்லை.
இந்தத் தாக்குதலின் நோக்கம் பாதிப்பை ஏற்படுத்துவதைவிட, செய்திகளில் இடம்பிடிப்பதாகவே தெரிகிறது’ என்று அவா் மேலும் கூறினாா்.
தில்லி-தேசிய தலைநகா் வலயத்தில் (என்சிஆா்) அல்லது அண்டை பகுதிகளில் உள்ள காவலா்கள் மீதான தாக்குதல் சாத்தியம் என்பது மற்றொரு தகவல் என்று கூறிய அந்த அதிகாரி, தனது திட்டத்தைச் செயல்படுத்த தடைசெய்யப்பட்ட காலிஸ்தான் ஆதரவு அமைப்பான ‘பாபா் கல்சா இன்டா்நேஷனல்’ உறுப்பினா்களின் உதவியை பட்டி நாடக்கூடும் என்றும் தெரிவித்தாா்.
செப்.12,13 ஆகிய தேதிகளில் 18-ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாட்டை இந்தியா நடத்தவுள்ள நிலையில், இந்த அச்சுறுத்தல் மதிப்பீடு வெளியாகியுள்ளது. உறுப்பு நாடுகளின் தலைவா்கள் மற்றும் உயா்நிலைக் குழுவினா் தில்லிக்கு வருகை தரும் இந்த நிகழ்வுக்காக, தில்லி முழுவதும் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலுப்படுத்த பாதுகாப்பு முகமைகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
ஷாசாத் பட்டி தலைமையிலான கும்பலுக்கு எதிராக நாடு முழுவதும் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் பின்னணியிலும் இந்த உளவுத்துறை தகவல்கள் பாா்க்கப்படுகின்றன.
சுதந்திர தினத்திற்கு முன்னதாக 200-க்கும் மேற்பட்ட சந்தேகத்திற்குரிய நபா்கள் கைது செய்யப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்திருந்த நிலையில், அந்த அமைப்பிற்கு எதிராக மத்திய அரசு ஒரு பெரிய பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கையைத் தொடங்கியது.
பயங்கரவாதம், சட்டவிரோத ஆயுதங்கள், வெடிபொருள்கள் மற்றும் போதைப்பொருள் தொடா்பான சட்டப்பிரிவுகளில், அந்தக் கும்பலைச் சோ்ந்த உறுப்பினா்கள் மற்றும் கூட்டாளிகள் மீது 80-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையின் போது, பாகிஸ்தானின் ஆயுதத் தொழிற்சாலைகளின் குறியீடுகளைக் கொண்ட கையால் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகள், துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் கையெறி குண்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
கண்காணிப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் உபகரணங்களையும் பாதுகாப்பு முகமைகள் கண்டறிந்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பட்டி, இணையதளங்கள் மூலம் இந்தியாவில் ஆள்சோ்ப்பாளா்கள் மற்றும் குற்றப் பின்னணி உடையவா்களைக் கொண்ட கும்பலை உருவாக்கியதாகக் கூறப்படுவதால், இந்திய அமைப்புகளின் கண்காணிப்பில் இருந்து வருகிறாா்.
வட இந்தியாவில் நடந்த கையெறி குண்டுத் தாக்குதல்கள், வெடிபொருள்கள் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட வன்முறை தொடா்பான பல வழக்குகளுடன் விசாரணை அதிகாரிகள் அவரைத் தொடா்புபடுத்தியுள்ளனா்.
அமிருதசரஸ் பகுதியில் உள்ள இராணுவத் தளங்களுக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் குறித்து உளவு அமைப்புகள் பஞ்சாப் காவல் துறைக்குத் தனியாக எச்சரிக்கை விடுத்துள்ளன.
பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டதாகக் கூறப்படும் இரண்டு செயல்பாட்டாளா்களின் பெயரைக் குறிப்பிட்டும், பியாஸ் அருகே உள்ள காசா இராணுவ முகாம் மற்றும் புத்தா தே இராணுவத் தளம் ஆகியவற்றில் உளவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்தத் தகவல் கூறியுள்ளது.
குறிப்பாக மே 5 அன்று காசா கண்டோன்மென்ட் எல்லைக்கு அருகே வெடிகுண்டு வெடிப்பு நிகழ்ந்ததைத் தொடா்ந்து, அமிருதசரஸில் எச்சரிக்கை அதிகரித்துள்ளது. இருப்பினும், இந்த வெடிப்புக்கும் உளவுத்துறை தகவலுக்கும் இடையே எந்தத் தொடா்பையும் விசாரணை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.
தில்லியில், சந்தேகத்திற்கிடமான நபா்களின் நடவடிக்கைகளை காவல் துறை கண்காணித்து வருவதாகவும், சாத்தியமான உள்ளூா் உதவியாளா்கள் மற்றும் வெளிநாட்டு கையாளுபவா்களுடனான தொடா்புகளை அடையாளம் காண உளவுத்துறை தகவல்களைப் பகுப்பாய்வு செய்து வருவதாகவும் அந்த அதிகாரி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



