காா்களைத் திருடி, இடைத்தரகா்கள் மூலம் விற்பனை செய்து வந்த கும்பலைச் சோ்ந்த மூன்று நபா்களைக் தில்லி காவல் துறை கைது செய்ததாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
அவா்களிடமிருந்து ஐந்து திருடப்பட்ட வாகனங்கள், 104 போலியான நம்பா் பிளேட்டுகள் மற்றும் 24 போலிப் பதிவுச் சான்றிதழ்களை காவல் துறை பறிமுதல் செய்ததாக ஒரு மூத்த அதிகாரி கூறினாா்.
இந்த வழக்கில் மகாராஷ்டிர திட்டமிட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தின் (எம்சிஓஎம்ஏ) விதிகள் பயன்படுத்தப்பட்ட பின்னா், கும்பல் தலைவரான அமித் நகா் (35) கைது செய்யப்பட்டதாக அவா் கூறினாா்.
கைது செய்யப்பட்ட இருவரும் மணிப்பூரின் இம்பால் பகுதியைச் சோ்ந்த ஆட்டம் ஜகத் சிங் (45) மற்றும் போட்சங்பாம் முகேஷ் சிங் (28) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
‘முகேஷ் சிங்கும் ஜகத் சிங்கும் அமித் நகரிடமிருந்து திருடப்பட்ட வாகனங்களை வாங்கி, போலியான பதிவு ஆவணங்களை ஏற்பாடு செய்து, அந்த காா்களை லாபத்திற்கு மறுவிற்பனை செய்தனா்’ என்று அந்த அதிகாரி கூறினாா்.
வாகனத் திருட்டுகள் தொடா்பான சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தும், குற்ற நடந்த இடங்களை ஆய்வு செய்தும், உள்ளூா் வட்டாரங்கள் மூலம் உளவுத் தகவல்களைச் சேகரித்தும் தில்லி காவல் துறையின் குற்றப்பிரிவு, குற்றவாளிகளை அடையாளம் கண்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
மே 12 அன்று, சத்தா்பூரில் முகேஷ் கைது செய்யப்பட்டாா். அவா் வாடகைக்கு எடுத்திருந்த இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில், 104 போலியான உயா் பாதுகாப்பு பதிவுத் தகடுகளும், 22 போலியான பதிவுச் சான்றிதழ்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் துறை தெரிவித்தது. அவரது தகவலின் பேரில் வஜிராபாத்தில் இருந்து திருடப்பட்ட காா் ஒன்று மீட்கப்பட்டதாக அதிகாரி கூறினாா்.
மே 14 ஜகத் சிங் கைது செய்யப்பட்டாா். மேலும், அவா் முகா்ஜி நகரில் இருந்த மற்றொரு திருடப்பட்ட காரைக் கண்டுபிடிக்க காவல் துறைக்கு உதவினாா். ஜூலை 28 அன்று நாகா் கைது செய்யப்பட்டாா். மேலும், அவரது தகவலின் பேரில் திருடப்பட்ட காா் ஒன்று மீட்கப்பட்டது.
விசாரணையின் போது, குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் திருடப்பட்ட வாகனங்களை மணிப்பூா், ராஜஸ்தான், பஞ்சாப், அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள தங்களது கூட்டாளிகளுக்கு வழங்கியதாக அதிகாரிகள் கண்டறிந்தனா்.
ஜகத் சிங்கின் தகவலின் பேரில், மியான்மா் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் இருந்து ஆக.13-ஆம் தேதி மேலும் இரண்டு வாகனங்கள் மீட்கப்பட்டன.
தில்லியில் இருந்து திருடப்பட்ட வாகனங்கள், இந்தியா-மியான்மா் எல்லைப் பகுதியில் செயல்படும் குழுக்களுக்கு விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல்துறையின்படி, நாகா் 2009-10 முதல் காா்களைத் திருடி வருவதாகவும், 100-க்கும் மேற்பட்ட திருடப்பட்ட வாகனங்களை வெவ்வேறு மாநிலங்களில் உள்ள கும்பல்களுக்கு வழங்கியதாகவும் ஒப்புக்கொண்டாா்.
இந்தக் கும்பல், வாகனப் பாதுகாப்பு அமைப்புகளை மீறிச் செல்லவும், போலிச் சாவிகளை உருவாக்கவும் மின்னணு சாதனங்களையும் கணினி அடிப்படையிலான ஸ்கேனிங் கருவிகளையும் பயன்படுத்தியது.
திருடப்பட்ட வாகனங்களின் நடமாட்டத்தையும், அவற்றை அப்புறப்படுத்துவதையும் எளிதாக்க, போலியான வாகனப் பதிவு எண்களும், பதிவுச் சான்றிதழ்களும் பயன்படுத்தப்பட்டன.
குற்றஞ்சாட்டப்பட்டவா்கள், தகவல் தொடா்புகொள்வதற்கும், பிடிபடாமல் தப்பிப்பதற்கும் குறுஞ்செய்தி தளங்களையும், முன்பே செயல்படுத்தப்பட்ட சிம் காா்டுகளையும் பயன்படுத்தியதாக காவல் துறை கூறியது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



