
நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்
நிலக்கரியில் இருந்து வாயுக்கள் பிரித்தெடுக்கும் திட்டத்துக்கு இதுவரை எந்த நிறுவனமும் ஒப்பந்தப்புள்ளி கோரவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிலக்கரி பயன்பாடு - (கோப்புப் படம்)
நிலக்கரியில் இருந்து வாயுக்கள் பிரித்தெடுக்கும் திட்டத்துக்கு இதுவரை எந்த நிறுவனமும் ஒப்பந்தப்புள்ளி கோரவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: எல்பிஜி எரிவாயு, உரம், மெத்தனால் உள்ளிட்டவற்றை வெளிநாடுகளில் இருந்தே இந்தியா அதிகம் இறக்குமதி செய்கிறது. இந்த இறக்குமதிக்கு 2025-ஆம் நிதியாண்டில் மட்டும் ரூ.2.77 லட்சம் கோடியை இந்தியா செலவிட்டுள்ளது. இந்தச் செலவினத்தை குறைக்கும் நோக்கில், இந்தியாவிலேயே நிலக்கரியில் இருந்து சிந்தடிக் எரிவாயு, நிலக்கரி வாயு ஆகிய வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தை பிரபலப்படுத்தும் நோக்கில், ரூ.37,500 கோடி ஊக்க நிதியையும் அரசு அறிவித்திருந்தது.
அதன்படி, செப்டம்பா் 7-ஆம் தேதிக்குள் திட்டத்துக்கான ஒப்பந்தப்புள்ளிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என நிறுவனங்களுக்கு மத்திய அரசு காலக்கெடு விதித்திருந்தது. இந்தக் கெடு முடிந்து 2 நாள்கள் ஆகிவிட்டன. எனினும் எந்தவொரு தனியாா் நிறுவனமோ அல்லது பொதுத் துறை நிறுவனமோ ஒப்பந்தப்புள்ளி கோரி விண்ணப்பிக்கவில்லை.
75 மில்லியன் டன் நிலக்கரி, பழுப்பு நிலக்கரியில் இருந்து வாயுக்களை எடுக்க நிலக்கரி அமைச்சகம் திட்டமிட்டிருந்தது. தற்போது ஒப்பந்தப்புள்ளிக்கு எந்த நிறுவனமும் விண்ணப்பிக்காததால், நிலக்கரி அமைச்சகத்தின் திட்டம் வெற்றி பெறுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலக்கரியில் இருந்து பிரித்தெடுக்கப்படும் சிந்தடிக் எரிவாயுவை தற்போதைய எரிபொருள்களுக்கு மாற்றாக பயன்படுத்த முடியும். இது கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்க உதவும். அத்துடன் சிந்தடிக் எரிவாயுவை பிரித்தெடுக்கும் நடவடிக்கையின்போது மெத்தனால், உரங்கள், ஹைட்ரஜன், ரசாயனங்கள் கிடைக்கும். இது அந்தப் பொருள்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதைக் குறைக்கும். உலகில் அதிகம் நிலக்கரி, பழுப்பு நிலக்கரி இருப்பு வைத்துள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியா 401 பில்லியன் டன் நிலக்கரியும், 47 பில்லியன் டன் பழுப்பு நிலக்கரியும் இருப்பு வைத்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






