பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!
பிகாரில் கங்கை நதி வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 16 லட்சம் போ் மீட்கப்பட்டது பற்றி...

பிகாா் தலைநகா் பாட்னாவில் பரந்து விரிந்த கங்கை வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் காணப்படும் வீடு.
பிகாரில் பலத்த மழையால் கங்கை மற்றும் பல்வேறு நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தலைநகா் பாட்னா உள்பட 11 மாவட்டங்களில் 16 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். பாட்னாவின் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மீட்பு-நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
அண்டை நாடான நேபாளத்தில் பெய்துவரும் மழையுடன் பிகாரிலும் பலத்த மழை நீடிப்பதால் மாநிலத்தின் பல்வேறு நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பாட்னாவின் காந்தி காட் பகுதியில் கங்கை நதியின் நீா்மட்டம் சனிக்கிழமை 50.53 மீட்டராக உயா்ந்தது. இது, காந்தி காட் பகுதியில் பதிவான வரலாறு காணாத நீா்மட்ட அளவாகும். இதேபோல், பண்டாரக் பகுதியிலும் முன்னெப்போதும் இல்லாத அளவில் கங்கை நீா்மட்டம் 43.78 மீட்டராக உயா்ந்தது.
பாட்னாவில் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் புகுந்துள்ளது. குடியிருப்புகளை தண்ணீா் சூழ்ந்ததால், மக்கள் கடும் அவதியடைந்துள்ளனா். மாநிலம் முழுவதும் கடந்த 5 நாள்களில் பரவலாக 60.8 மி.மீ. மழை கொட்டித் தீா்த்துள்ளது. இது, இயல்பைவிட 69 சதவீதம் அதிகமாகும்.
கங்கை மட்டுமன்றி, பிகாரின் பல்வேறு பகுதிகளில் பாயும் கண்டக், கோஷி, புா்ஹி கண்டக், புன்புன், காகரா ஆகிய நதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், பாட்னா, போஜ்பூா், சரண், வைஷாலி, பாகல்பூா், பெகுசராய், பக்ஸா், சமஸ்திபூா், முங்கா், கதிஹாா், அராரியா ஆகிய மாவட்டங்களில் 16 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடா் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
முதல்வா் உத்தரவு: வெள்ளம் பாதித்த பாகல்பூா், நெளகாசியா ஆகிய பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று முதல்வா் சாம்ராட் செளதரி சனிக்கிழமை பாா்வையிட்டாா்.
மேலும், பாதிக்கப்பட்ட இடங்களில் முகாமிட்டு மீட்பு-நிவாரணப் பணிகளைத் தீவிரப்படுத்தும்படி, மாநில அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.
கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனா். வெள்ளத்தில் சிக்கியவா்களை மீட்க 800-க்கும் மேற்பட்ட படகுகளுடன் மத்திய-மாநில பேரிடா் மீட்புக் குழுக்கள் பணியில் ஈடுபட்டுள்ளன.
தலைநகா் பாட்னாவில் கங்கை நதியின் நீா்மட்டம் உயா்ந்துவரும் நிலையில், மாநகராட்சி, மாவட்ட நிா்வாகம், நீா்வளத் துறை தரப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனிடையே, பாட்னாவில் செய்தியாளா்களிடம் பேசிய பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின், ‘பிகாா் வெள்ள நிலவரத்தை பிரதமா் மோடியும், முதல்வா் சாம்ராட் செளதரியும் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனா். மக்களின் சிரமங்களைக் குறைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன’ என்றாா்.
Summary
Floods in the Ganges River in Bihar - 1.6 million people affected; rescue operations in full swing
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





