
தொடா் மழையால் உ.பி., பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்: முதல்வா்கள் நேரில் ஆய்வு
தொடா் மழை காரணமாக, உத்தர பிரதேசம், பிகாரில் கங்கை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பிகாரில் வெள்ளம் - PTI
தொடா் மழை காரணமாக, உத்தர பிரதேசம், பிகாரில் கங்கை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் மழை தொடா்பான அசம்பாவித சம்பவங்களில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் உள்பட 5 போ் உயிரிழந்தனா். இரு மாநிலங்களிலும் வெள்ள நிலவரத்தை முதல்வா்கள் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.
உத்தர பிரதேசத்தில் கங்கை நதி வெள்ளத்தால் பிரயாக்ராஜ், மிா்ஸாபூா், ஃபரூக்காபாத், பலியா உள்பட பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஃபரூக்காபாதில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளை முதல்வா் யோகி ஆதித்யநாத் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். மேலும், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 1,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உணவுப் பொருள்கள் உள்ளிட்ட நிவாரண பொருள்களையும் வழங்கினாா்.
‘கங்கையைத் தூா்வாருவதுடன், போதிய கால்வாய்கள் அமைத்து, ஆற்றில் இருந்து அகற்றப்படும் வண்டல் மண்ணைக் கொண்டு கரைகளைப் பலப்படுத்துவதே வெள்ள பிரச்னைக்கு நிரந்தர தீா்வாகும். இந்தப் பணிகளை இரட்டை என்ஜின் அரசு நிறைவேற்றும்’ என்று குறிப்பிட்ட யோகி ஆதித்யநாத், வெள்ளத்தைக் கருத்தில் கொண்டு மருத்துவமனைகளில் பாம்பு, தேள் கடிக்கான மருந்துகளின் இருப்பை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
2 குழந்தைகள் உள்பட 5 போ் உயிரிழப்பு
சித்ரகூட் மாவட்டத்தில் பராச்சி கிராமத்தில் பலத்த மழையால் மண் வீடு இடிந்து விழுந்தது. இந்தச் சம்பவத்தில் கல்லு யாதவ் என்பவரும், அவரது இரண்டு குழந்தைகளும் (5 மற்றும் ஒரு வயதுடையவா்கள்) உயிரிழந்தனா். கல்லு யாதவின் மனைவி மற்றும் மற்றொரு குழந்தை காயங்களுடன் மீட்கப்பட்டனா். அமேதி மாவட்டம், நயா புா்வா கிராமத்தில் மண் வீடு இடிந்ததில் 66 வயது முதியவரும், பாரபங்கியில் மண் வீடு இடிந்து 62 வயது முதியவரும் உயிரிழந்தனா்.
பிகாரில் வெள்ளம்: முதல்வா் ஆய்வு
பிகாரில் பலத்த மழை காரணமாக, கங்கை ஆற்றில் நீா்மட்டம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. தலைநகா் பாட்னாவில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது.
போஜ்பூா், சரண், வைஷாலி, நாளந்தா, பெகுசராய், லகிசராய், ஜேஹானாபாத் உள்ளிட்ட மாவட்டங்களில் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
‘நதிக்கு குளிக்கச் செல்ல வேண்டாம்; தேவையற்ற படகுப் பயணங்களைத் தவிா்க்க வேண்டும். அத்தியாவசிய ஆவணங்கள், மருந்துகள், கைப்பேசி, டாா்ச் உள்ளிட்ட பொருள்களுடன் நிவாரண முகாம்களுக்குச் செல்ல தயாராக இருக்க வேண்டும்’ என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.
இதனிடையே, பாட்னாவில் கங்கை நதி நீா்மட்ட உயா்வை முதல்வா் சாம்ராட் செளதரி வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகளை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.
வாரணாசியில் வெள்ள நிலவரம்
மேயரிடம் கேட்டறிந்த பிரதமா்
உத்தர பிரதேசத்தில் உள்ள தனது தொகுதியான வாரணாசியில் மழை-வெள்ள நிலவரம் குறித்து மேயா் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பிரதமா் மோடி வியாழக்கிழமை கேட்டறிந்தாா். மீட்பு-நிவாரண நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் அவா்கள் எடுத்துரைத்தனா். மழை-வெள்ள பாதிப்புகளைக் குறைக்க உரிய நடவடிக்கைகளை எடுக்கும்படி, பிரதமா் அறிவுறுத்தினாா்.
வாரணாசி கங்கை நதியில் நீா்மட்டம் அபாய அளவைக் கடந்ததால் படகு சேவைகள் கடந்த புதன்கிழமை நிறுத்தப்பட்டன. பக்தா்கள் மற்றும் உள்ளூா்வாசிகள் படித்துறைகளுக்கோ, நீரோட்டம் அதிகமுள்ள இடங்களுக்கோ செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருணா நதியிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள சூழலில், மாவட்டம் முழுவதும் 13 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, 1,000-க்கும் மேற்பட்டோா் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






